பிறருக்கானவைகளை நோக்குதல்

பிறருக்கானவைகளை நோக்குதல்

அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. – (பிலிப்பியர் 2:4).
ஒரு பழங்கால கதை ஒன்று உண்டு. ஒரு பெண் தன் ஒரே பிள்ளையை இழந்து போனாள். அந்த துக்கத்தில் ஒரு குருவிடம் சென்று, தன் பிள்ளையை மீண்டும் எழுப்பி தரும்படி கேட்டாள். அவர் அவளை நீண்ட நேரம் உற்று பார்த்து விட்டு, கனிவுடன், ‘மகளே, நீ போய் மரணம் ஒரு காலமும் ஏற்பட்டிராத ஒரு வீட்டிலே ஒரு கைப்பிடியளவு அரிசி வாங்கி வா, நான் நீ கேட்பதை செய்து விடுகிறேன்’ என்றார். அவள் ஒவ்வொரு வீடாக சென்று, உங்கள் வீட்டில் எப்போதாவது யாரையாவது இழந்ததுண்டா? என்று கேட்டு கொண்டே வந்தாள். அவள் எவ்வளவோ தேடி சுற்றினாலும், எல்ல வீடுகளிலுமே மரணத்தின் சுவடுகள் இருந்தன. எல்லா வீடுகளிலும் காணப்பட்ட துயரை கண்ட அவளது கவலை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. தன்னுடைய வேதனையை மட்டும் எண்ணி நொந்து போன அவளது இதயத்தின் வலி சற்று குறைந்து, பிறரின் துக்கத்திற்காய் அனுதாபப்படும் உள்ளம் பெற்றாள். பிறரை ஆறுதல்படுத்துவதில் தன் துயரை மறந்தாள்.
வேதத்திலே ஒரு சம்பவம் உண்டு. தேசத்திலே நிலவிய பஞ்சம் காரணமாக நகோமி எலிமெலேக்கு தம்பதியினர் மோவாப் தேசத்திற்கு செல்கின்றனர். அங்கே குடியிருந்து தன் இரு மகன்களுக்கும், அங்கேயே பெண் எடுக்கின்றனர். எதிர்பாராதவிதமாக நகோமி தன் கணவனையும், இரு மகன்களையும் இழந்து விடுகிறாள். இப்போது தன் தேசத்திற்கு திரும்புகிறாள். அவளுடன் இரு மருமகள்களும் வருகின்றனர். அவர்கள் இருவரையும் தகப்பன் வீட்டிற்கு போகும்படி வேண்டுகிறாள். அதில் மூத்தவள் தன் எதிர்காலத்தை எண்ணி புது வாழ்க்கை அமைத்து கொள்ளலாம் என்று சென்றுவிட்டாள். ஆனால் இளைய மருமகள் ரூத்தோ தன் மாமியாரை விடவில்லை. ‘உம்மோடே வருகிறேன்’ என தன் வாழ்வை குறித்து சிறிதும் யோசிக்காமல் கிளம்பினாள். என் மாமி எல்லாவற்றையம் இழந்து வெறுமையாய் செல்கிறார்களே, அவர்களது வெறுமையை நிரப்ப நான் அவர்களோடு செல்வேன், என் மாமியாருக்கு ஆறுதலாய் இருப்பேன்’ என எண்ணியவளாக தன் துன்பத்தை மறந்து மாமியாரோடு செல்கிறாள் ரூத். தனக்கானதை அல்ல, பிறருக்கானவைகளையும் நோக்கின ரூத், இயேசுகிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் இடம் பெற்று, இயேசுகிறிஸ்துவின் பாட்டியானாள்.
பிரியமானவர்களே, தீர்க்கமுடியாத வியாதி, எதிர்பாராத மரணம் நம் இருதயத்தை சுக்கு நூறாக உடைத்து விடும் என்பது உண்மையே. உலகமே இருண்டு விடும், வாழ்க்கை கேள்விக்குறியாக மாறும், விரக்தி ஏற்படும். இவை எல்லாம் நூற்றுக்கு நூறு உண்மையே! இந்த சூழ்நிலையில் நம் துயரை மட்டுமே எண்ணி எண்ணி முடங்கி விடுவோமானால், நமது நிலை பரிதாபமே. அதே வேளையில் பிறர் மீதும் அக்கறை கொண்டு, கனிவாக விசாரித்து அவர்களின் துயரத்தில் நம்மால் இயன்ற உதவிகளை செய்து ஆறுதல் அளிப்போமானால், நமது துக்கம் மறந்து துரும்பாக மாறும் என்பது உண்மை. காலப்போக்கில் நமது துயரையே மறந்து விடுவோம். ஆகவே நமது வீட்டிலுள்ள சிறுசிறு பிரச்சனைளையும், துயரங்களையும் வீட்டிற்கு வரும் அனைவரிடமும் சொல்லி புலம்பி கொண்டேயிராமல், பிறரை அன்போடு விசாரித்து, ஆறுதல் சொல்லுங்கள். எனது சுமையை சுமந்தது போதும், பிறருக்கு ஆறுதலாய் வாழ்வேன் என முடிவெடுங்கள். ஒரே ஒரு வாழ்வு, அதை சுயநலமாயல்ல, பிறர் நலனுக்காய் வாழ்வேன் என தீர்மானியுங்கள். சுவையற்ற இருண்ட உங்கள் வாழ்வு சுகமாய் மாறிவிடும். ஆமென் அல்லேலூயா!
காரிருள் நம்மை சூழ்ந்தாலும்
கர்த்தர் ஒளியாவார்
ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்
உலகின் ஒளி நாமே – அல்லேலூயா
..
இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்
இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்

ஜெபம்:

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நாங்கள் எங்கள் துக்கத்தையே யோசித்து, சுயபரிதாபத்திலும், துக்கத்திலும் அமிழ்ந்து போகாதபடி, எழும்பி பிரகாசிக்க உதவி செய்யும். துக்கத்திலும் துன்பத்திலும் வாழும் மற்றவர்களை தேற்றும்படியாக, ஆறுதல் படுத்தும்படியாக எங்களை எடுத்து உபயோகப்படுத்தும். பிறருக்கானவைகளையும் நோக்கி பார்த்து, அவாகளுடைய தேவையில் நாங்கள் உதவி செய்ய எங்களை ஏவியருளும்.  எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.