மரணத்தை ஜெயித்தவர்

மரணத்தை ஜெயித்தவர் .

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். – (1 கொரிந்தியர் 15:57).

நேற்றைய தினத்தில் 28 ஆண்டுகளுக்குப்பின் இந்தியா கிரிக்கெட் போட்டியில் உலக கோப்பையை வென்றுள்ளது. தலைவனாக இருந்து, தன்னுடைய வரிசைக்கு முன்பே களத்தில் இறங்கி, சரீர வேதனைகளையும் பொருட்படுத்தாது, கடைசி வரை நின்று இந்தியாவிற்கு வெற்றியை வாங்கி தந்த டோனிக்குக்கும், மற்றும் அவருடைய குழுவினருக்கும் வந்தனங்கள். அதற்கு பின் நாட்டிலும், வெளிநாடுகளிலும் அதன் கொண்டாட்டத்தை பார்க்க வேண்டுமே! எல்லா இந்தியர்களும் இணைந்து வெற்றியை மனதார கொண்டாடி கொண்டு இருக்கிறோம். ஜெய் ஹிந்த்! எங்கள் வீட்டிற்கு முன்னாலும் போகிற வருகிற கார்களை நிறுத்தி, ஒரே ஆடலும் பாடலும், இந்திய கொடியை கைகளில் ஏந்தி, நாங்கள் இந்தியர்கள், எங்கள் தேசத்தின் வெற்றியை கொண்டாடுகிறோம் என்று வெளிப்படுத்தி, ஆர்ப்பரித்த காட்சிகள் மறக்க முடியாதவை. கடைசியில் போலீஸ் வந்து கூட்டத்தை அப்புறப்படுத்தினார்கள்.

நாம் இந்தியா உலக கோப்பையை வென்றதை கொண்டாடும் அதே நேரத்தில் தேவன் நமக்கு ஜெயத்தை கொடுக்கிறார் என்று மேற்கண்ட வசனம் சொல்கிறது. நாம் ஜெயிக்க போகிற காரியம் உலக கோப்பையை விட மிக முக்கியமானது, அத்தியாவசியமானது ஒவ்வொருவரும் பெற்று கொள்ள வேண்டியது. அது என்ன ஜெயம்? எதன் மேல் ஜெயம்? இந்த 1 கொரிந்தியர் 15ம் அதிகாரத்தில் 12லிருந்து 58 வரை உள்ள வசனங்களில் ஒரு காரியத்தை பவுல் அப்போஸ்தலன் திரும்ப திரும்ப சொல்கிறார். அது மரணத்தை ஜெயிக்கிற ஜெயமே! அப்படியென்றால் நாம் மரணத்தின் மேல் ஜெயம் எடுத்தால் மரிக்க வேண்டியதில்லையோ? இல்லை, அப்படி சொல்லவில்லை! ஒரு மனிதன் உலகத்தில் பிறந்தால் அவன் கண்டிப்பாக ஒரு நாள் மரிக்கவும், நியாயத்தீர்ப்பு அடையவும் வேண்டும். அது தேவனுடைய நியதி. அதை யாராலும் மாற்ற முடியாது. இதுவரை மரிக்காமல், பரலோகத்திற்கு சென்றவர்கள் இருவர் மாத்திரமே! ஒருவர் ஏனோக்கு, மற்றொருவர் எலியா தீர்க்கதரிசி. இவர்கள் இருவர் மாத்திரமே மரணத்தை சந்திக்காமல், தேவனால் எடுத்து கொள்ளப்பட்டவர்கள்.

ஆனால் கிறிஸ்துவை ஏற்று கொண்டு அவரில் வாழ்கிறவர்கள், அவர் வரும் வரை உயிரோடு இருந்தால், கிறிஸ்துவின் இரகசிய வருகையில் ‘நாமெல்லாரும் நித்தியரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்’ (1 கொரிந்தியர் 15:51). ஏனோக்கு எப்படி எடுத்து கொள்ளப்பட்டாரோ அப்படியே கர்த்தருக்குள் வாழ்கிறவர்கள் எடுத்து கொள்ளப்படுவார்கள். அவர்களுக்கு மரணத்தை சந்திப்பதில்லை. ‘எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்’ – (1 கொரிந்தியர் 15:52-54) என்று வசனம் நமக்கு சொல்கிறது. எக்காள சத்தம் தொனிக்கும்போது, உயிரோடு இருக்கிறவர்களாகிய தேவ ஜனம் மறுரூபமாக்கப்படும். அதே நேரத்தில் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களும் உயிரோடு எழுந்தரிப்பார்கள். அப்பொழுது அழிவுள்ளதாகிய இந்த சரீரம் அழியாத சரீரத்தையும், சாவுக்குரிய இந்த சரீரம் சாகாத சரீரத்தையும் பெற்று கொள்ளும். அந்த சமயத்தில் மரணம் ஜெயமாக விழுங்கப்படும். மரணம் என்பது அதன்பின் நமக்கு ஏற்படுவதேயில்லை!

இப்பொழுது நாம் வாழும் இந்த சரீரம் மரணத்திற்கும், அழிவுக்கும் சாவுக்கும் ஏதுவானது. ஆனால் நமது மறுரூபமாக்கப்பட்ட சரீரமோ இவைகளினால் சேதப்படுவது இல்லை! இது எப்படி நடந்தது? இயேசுகிறிஸ்து மரணத்தை ஜெயித்து சாவின் கூரை உடைத்தால் இது நடந்தது. அவர் உயிரோடு எழுந்ததால், நாம் மரணத்தை நோக்கி, ‘மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?’ என்று அறைகூவல் விடுக்க முடியும்!!! நாமும் மரணத்தை வென்று, பாதாளத்தை ஜெயம் கொள்ள முடியும். கிறிஸ்துவை நாம் பற்றி கொண்டால், அவருக்குள் வாழ்ந்தால் மாத்திரமே இது சாத்தியமாகும். ‘தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை’ (1 கொரிந்தியர் 2:9). எத்தனையோ காரியங்களை தம்முடைய பிள்ளைகளுக்காக தேவன் ஆயத்தம் செய்து வைத்திருக்கிறார். அவற்றை நாம் இதுவரை காணவில்லை, காதுகளால் கேட்கவும் இல்லை, நாம் நினைப்பதற்கும் வேண்டி கொள்வதற்கும் மேலாக தேவன் நமக்கென்று ஆயத்தப்படுத்தியிருப்பதை நாம் சுதந்தரித்து கொள்ள வேண்டாமா? ஆயத்தமாவோமா? கர்த்தருக்குள் வாழ்வோம், தேவன் நமக்கு ஆயத்தம் செய்து வைத்திருக்கிறதை சுதந்தரித்து கொள்வோம்! ஆமென் அல்லேலூயா!

அழிவுக்கு உரிய இவ்வுடல் – ஒருநாள்
அழியாமை அணிந்து கொள்ளும் – 2
சாவுக்கு உரிய இவ்வுடல் ஒருநாள்
சாவாமை அணிந்து கொள்ளும் – 2
பயமில்லையே மரண பயமில்லையே
ஜெயம் எடுத்தார் இயேசு ஜெயம் எடுத்தார்
மரணமே உன் கூர் எங்கே?
பாதாளமே உன் ஜெயம் எங்கே?
..

கட்டளை பிறக்க சுதன் குரல் ஒலிக்க
கர்த்தர் இயேசு வந்திடுவார் – 2
கிறிஸ்துவிற்குள் வாழ்வோர் கிறிஸ்துவிற்குள் மரித்தோர்
எதிர் கொண்டு சென்றிடுவோம் – 2
பயமில்லையே மரண பயமில்லையே
ஜெயம் எடுத்தார் இயேசு ஜெயம் எடுத்தார்
மரணமே உன் கூர் எங்கே?
பாதாளமே உன் ஜெயம் எங்கே?

ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நாங்கள் சாவின் மேல் வெற்றி எடுக்கத்தக்கதாக இயேசுகிறிஸ்து மரணத்தை வென்றபடியினால் உமக்கு ஸ்தோத்திரம். எக்காள சத்தம் தொனிக்கும்போது, கிறிஸ்துவுக்குள் வாழ்ந்து உயிரோடு இருப்பவர்களும், கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களும் மறுரூபமாக்கப்பட்டு, மரணத்தை நாங்களும் வென்று, கிறிஸ்துவோடு கூட என்றென்றும் வாழ்கிறவர்களாக எங்களை மாற்றப் போவதற்காக உமக்கு நன்றி! அதற்கு ஒவ்வொரு நாளும் நாங்கள் ஆயத்தமாக்கப்படவும், வருகையை எதிர் கொண்டு வரவும் எங்களை தகுதியாக்கும். மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே என்ற முழங்குகிறவர்களாக எங்களை மாற்றும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.