போலிகளை நம்பாதீர்கள்!

போலிகளை நம்பாதீர்கள்! 

அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். – (மத்தேயு 7:22-23).

சமீபத்தில் ஒரு கைக்கடிகாரம் வாங்குவதற்கு வாட்ச் விற்பனை கடைக்கு சென்றிருந்தோம். அங்கு அநேக கடிகாரங்கள் வைக்கப்பட்டிருந்தன. எதை வாங்குவது என்று நாங்கள் யோசித்து கொண்டிருந்தபோது, அந்த கடைக்காரர் சொன்னார், ‘உங்களுக்கு ரோலக்ஸ் வாட்ச் வேண்டுமா?’ என்று. நாங்கள் சொன்னோம், ‘ரோலக்ஸ் வாட்ச் வாங்கும் அளவிற்கு நாங்கள் அத்தனை பெரிய ஆட்கள் இல்லை, வேண்டாம், சாதாரண வாட்சை காண்பித்தாலே போதும்’ என்று சொன்னோம்.
.
அந்த கடைக்காரர் சிரித்துவிட்டு, ‘அட, இது உண்மையான ரோலக்ஸ் வாட்ச் இல்லீங்க, போலியானது, ஆனால் பார்ப்பதற்கு அப்படியே உண்மையான ரோலக்ஸ் வாட்ச் போலிருக்கும்’ என்றார். நாங்கள் ஆச்சரியப்பட்டு, அந்த வாட்சை வாங்கி பார்த்தபோது, அது உண்மையான வாட்சை போலவே இருந்தது. ஆனால் விலை மிக மிக குறைவு. நாங்கள் கேட்டோம், ‘எப்படி உண்மையான வாட்சிலிருந்து இதை கண்டுபிடிப்பது’ என்று. அதற்கு அவர் சொன்னார், ‘போலி வாட்சில் வினாடி முள் ஒவ்வொரு வினாடிக்கும் துடிக்கும். ஆனால் உண்மையான வாட்சில் அப்படி துடிக்காது, நன்கு தேர்ந்தவர்களே அதை கண்டுபிடிக்க முடியும்’ என்று கூறினார். உண்மையில் ரோலக்ஸ் வாட்ச் வைத்திருப்பவர்கள் மிகவும் குறைவுதான் போலிருக்கிறது. போலிகள் தான் அதிகம் இருக்கும் போலிருக்கிறது என்று நினைத்து கொண்டோம்.
.
பிரியமானவர்களே, நியாயத்தீர்ப்பின் நாள் என்று ஒரு நாள் வரப்போகிறது. ‘அந்த நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்’ என்று இயேசு கிறிஸ்து கூறினார்.
.
இந்நாட்களிலும் அநேகர் கிறிஸ்துவின் பெயரை கொண்டு அற்புதங்கள் அதிசயங்கள், தீர்க்கதரிசனங்கள் என்று பொய்யாய், போலியாய் செய்து கொண்டிருக்கலாம். அவர்கள் இயேசுவின் பெயரால் தான் நாங்கள் இவற்றை செய்து கொண்டிருக்கிறோம் என்றும் கூறலாம். உண்மையான ஊழியர் செய்வது போலவே அவர்களும் செய்யலாம், ஆனால் கர்த்தருக்கு முன் மாய்மாலங்கள் ஒன்றும் செல்லாது. அவருக்கு உண்மையான விசுவாசம், போலி விசுவாசம் என்பது நன்கு தெரியும்.
.
ஒரு உதாரணத்தை வேதத்திலிருந்து நாம் காணலாம், ‘பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார். அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன.
.
அப்பொழுது தேசாந்தரிகளாய்த்திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள். பிரதான ஆசாரினாகிய ஸ்கேவா என்னும் ஓர் யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள். பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள் (அப்போஸ்தலர் 19:11-16).
.
ஒருவேளை அந்த யூதர்கள் இயேசுவின் பெயரில் பொல்லாத ஆவியை விரட்டியிருந்தால் அவை போயிருக்கலாம், ஆனால் அவர்கள் பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின் பெயரால் என்று கட்டளையிட்டபோது, பொல்லாதஆவி அவர்ளை மேற்கொண்டு, காயப்படுத்தி ஓடிப்போக வைத்தது. அவர்களுக்குள் உண்மையான இரட்சிப்பின் அனுபவம் இல்லை, தேவனை குறித்த வெளிப்பாடு இல்லை, பவுல் செய்வது போல நானும் செய்கிறேன் என்று செய்தபோது, இந்த நிலை ஏற்பட்டது.
.
உலகத்திற்கும், பிசாசிற்கும், மாம்சத்திற்கும் அடிமை ஆகி, வெளியே யாருக்கும் தெரியாது என்று நினைத்து, கிறிஸ்துவின் பெயரால் அநேகர் தீர்க்கதரிசனங்கள் உரைக்கலாம், மற்ற காரியங்களை செய்யலாம், ஆனால் அந்நாளில் கிறிஸ்து கூறுவார், ‘ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்’ என்று. அந்த நிலைமை எத்தனை பயங்கரமாய் இருக்கும்!
.
விசுவாசிகளின் வாழ்விலும், சபைக்கு வந்தால் பக்தியின் வேஷம், வீட்டில் இருந்தால் ஒரு வேஷம் தரித்து கொண்டு இருப்பவர்களும் அநேகர். சபையில் மிகவும் பக்தியுள்ளவர்களாக இருப்பார்கள், வீடுகளில் சென்று அவர்கள் பேசுவதை கேட்டால், இந்த சகோதரனா, இந்த சகோதரியா கொஞ்ச நேரத்திற்கு முன்பு சபையில் அப்படி சாட்சி சொன்னார்கள் என்று இருக்கும்! பக்தியின் வேஷம், போலி விசுவாசம் இவைகள் நம்மை விட்டு அகலட்டும்! நாம் விசுவாசிக்கிற கிறிஸ்து நம்மை ஒருக்காலும் அறியவில்லை என்றால் நாம் பேர் கிறிஸ்தவர்களாக இருந்து என்ன பயன்?
.
மட்டுமல்ல, கொஞ்ச பேர் அல்ல, அநேகர் வந்து கர்த்தரிடம் அப்படி சொல்வார்களாம்! சத்துருவானவன் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்க முயற்சிப்பான். நாம் கர்த்தருக்குள் நிலையாய் இல்லாவிட்டால், நிச்சயமாக விழுந்து போவோம். அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர், அதிலும் உண்மையுள்ளவர்கள் மிகவும் சிலரே. அந்த உண்மையுள்ளவர்களின் கூட்டத்தில் நாம் இருக்கும்படியாக பிரயாசப்படுவோம். 
.
பிரியமானவர்களே, போலியான வாழ்க்கையையும், மாய்மாலமான வாழ்க்கையையும் உதறி தள்ளிவிடுவோம். உலகம், பிசாசு, மாம்சம் ஆகியவற்றிற்கு அடிமையாகி இருந்தாலும், தம்மை நோக்கி வந்த ஒருவரையும் தள்ளாத தேவனிடத்தில், இருக்கிறவண்ணமாகவே வந்து, பாவத்தை அறிக்கையிட்டு, அடிமைத்தனத்திலிருந்து வெளிவந்து, உண்மையாக கர்த்தருக்கென்று ஊழியம் செய்வோம். ‘ஒருக்காலும் உங்களை அறியவில்லை’ என்று கர்த்தர் நம்மை பார்த்து சொல்லாமல், ‘ நல்லது, உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே, உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்று சொல்லத்தக்கதாக நம்முடைய ஊழியங்களும், வாழ்க்கையும் அமையட்டும். ஆமென் அல்லேலூயா! 
.

சூழ்ந்து நிற்கும் சுமைகள்
நெருங்கி நிற்கும் பாவங்கள்
உதறி தள்ளிவிட்டு
ஓடுவோம் உறுதியுடன்
.
கண்களை பதிய வைப்போம்
கர்த்தராம் இயேசுவின் மேல்
கடந்ததை மறந்திடுவோம்
தொடர்ந்து முன்செல்லுவோம் 


ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்கள் வாழ்க்கை உம்முடைய சமுகத்தில் போலியானதாக காணப்படாதபடி, நாங்கள் உண்மையாய் உம்மை சேவிக்க கிருபை செய்யும். நியாயத்தீர்ப்பின் நாளிலே நான் உங்களை ஒருக்காலும் அறியவில்லை என்று இயேசுகிறிஸ்து எங்களை பார்த்து சொல்லாதபடி, நாங்கள் எங்கள் வாழ்க்கையையும், ஊழியங்களையும் உண்மையாக செய்ய கிருபை பாராட்டும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.