சிலுவையினால் ஒப்புரவாகுதல்

சிலுவையினால் ஒப்புரவாகுதல் 

‘முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,  பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார்’ – (எபேசியர்2:13-16).
இரண்டு சகோதரர்கள் விவசாயிகளாக இருந்தார்கள். இருவருக்கும் பக்கத்து பக்கத்தில் வீடு இருந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் அன்புடன் பழகி வந்தனர். 40 வருடங்களாக அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் பொருட்களை பகிர்ந்து, அமைதியாக வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒரு நாள் இருவருக்கும் இடையில் ஏதோ தகறாறு வந்து, இருவரும் ஒருவரை ஒருவர் வெறுக்க ஆரம்பித்தனர். ஒருவரோடொருவர் பேசி கொள்வதையே நிறுத்தினர்.
ஒரு நாள் மூத்த சகோதரனுடைய வீட்டுக்கதவை யாரோ தட்டினார்கள். கதவை திறந்த போது, ஒரு தச்சன் நின்று கொண்டிருந்தார். அவர் அந்த சகோதரனிடம், ‘எனக்கு இங்கு ஏதாவது வேலை கிடைக்குமா?’ என்று கேட்டார். சகோதரன் அவரிடம், ‘இப்போது எதுவும் வேலை இல்லை, ஆனால் என் சகோதரன் பக்கத்தில் இருக்கிறானே, அவன், என்னோடு சண்டையிட்டு, எங்கள் இருவருக்கும் இடையில் இருந்த பசும்புல்வெளியை புல்டோசர் கொண்டு வந்து இடித்து, இடையில் தண்ணீரை விட்டு, இப்போது எங்கள் இருவருக்கும் இடையில் தண்ணீர் ஒரு ஆறு மாதிரி ஓடிக்கொண்டிருக்கிறது. அவன் எனக்கு இளையவன், அவனே அப்படி செய்வானானால், அவனுக்கு மேலாக நான் செய்ய வேண்டும். ஆகவே நீங்கள் ஒரு பெரிய எட்டு அடி உயரமுள்ள வேலியை கட்டுங்கள். அப்போது நான் அவனை எட்டிக்கூட பார்க்க முடியாதபடி இருக்கும். அதுதான் இப்போதைய முதல் வேலை’ என்று கூறினார்.
அந்த தச்சனும், சரி என்று சொல்லிவிட்டு வேலையை ஆரம்பித்தார். வேலை செய்ய சொல்லிவிட்டு, அந்த மூத்த சகோதரனும் வயலில் வேலை செய்ய போய்விட்டார். சாயங்காலத்தில் வீட்டிற்கு வந்தபோது, அப்படியே அவர் வாயடைத்து போய் விட்டார். ஏனெனில், அங்கு வேலிக்கு பதிலாக அழகிய பாலம் இடையில் ஓடின ஆற்றுக்கு மேலாக கட்டப்பட்டு, அதன் வழியாக இளைய சகோதரன் வருவதை கண்டார். வந்த இளைய சகோதரன், ‘நான் உங்களை மோசமாய் பேசி, இடையில் ஆற்றை விட்டிருந்தாலும், நீர் எவ்வளவாய் என்னை நேசித்து நம் இருவருக்கும் இடையில் பாலத்தை கட்டினீர், அண்ணா என்னை மன்னித்து விடுங்கள்’ அவருடைய கரத்தை பிடித்து கண்ணீர் விட்டான். அதை கண்ட தச்சன், திரும்பி செல்ல ஆரம்பித்தபோது, மூத்த சகோதரன், ‘நில்லுங்கள், இன்னும் அதிகமான வேலை உங்களுக்கு உண்டு’ என்று கூற, அவரோ ‘நான் இன்னும் எத்தனையோ பாலங்களை கட்ட வேண்டியிருக்கிறது’ என்று சொல்லிவிட்டு செல்ல ஆரம்பித்தார்.
‘முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,  பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார்’ என்று வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
நம்மை தேவனோடு ஒப்புரவாக்கும்படி இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார். ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசமாயிருக்கிற சர்வ வல்லமையுள்ள தேவனோடு கூட நம்மை ஒப்புரவாக்க வல்லவர் இயேசுகிறிஸ்து மாத்திரமே! வேறு யாரும் தேவனிடத்தில் நம்மை குறித்து பரிந்து பேசவோ, ஒப்புரவாக்கவோ முடியாது.
இயேசுகிறிஸ்து புறஜாதியார் என்று அழைக்கப்பட்ட நம்மையும், தேவன் தம்முடைய சொந்த ஜனங்களாக தெரிந்து கொண்ட யூதர்களையும், பகையாக நின்ற பிரிவினையை தகர்த்து, சமாதானம் செய்தார். எப்படி சமாதானம் செய்தார் என்றால், பகையை சிலுவையினால் அவர் கொன்றார் என்று வாசிக்கிறோம். நமக்கும் தேவனுக்கும் இடையில் பாவம் தடையாக நின்றது. உதாரணத்திற்கு  நாம் ஒரு பக்கம், தேவன் ஒரு பக்கம், ஒருவரை யொருவர் நெருங்காதபடிக்கு நடுவில் பெரிய பள்ளம். அப்போது சிலுவை நம் இருவருக்கும் நடுவில் ஒரு பாலமாக வைக்கப்பட்டு, நம் பாவங்கள் சிலுவையில் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, இப்போது நாம் தேவனை கிட்டி சேரும்படியாக, கிறிஸ்துவின் சிலுவை நாம் தேவனை அப்பா பிதாவே என்று கூப்பிடும்படியான பாலமாக நம்மை தேவனோடு ஒப்புரவாக்கிற்று.
அவர் சிலுவையில் தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தை சிந்தினபடியால், தேவன் யூதர்களுக்கு மாத்திரம் என்ற நிலை மாறி, அவர் புறஜாதிகளுக்கும் தகப்பனாக இருக்கும்படியாக, இயேசுகிறிஸ்துவின் இரத்தம் நம்மை தேவனோடு ஒப்புரவாக்கிற்று.
நாமும் ஆவிக்குரிய இஸ்ரவேலர் என்னும் பெயரை பெற்று கொள்ளும்படியாக, தேவனுக்கு சொந்த ஜனமாக நம்மையும் கிறிஸ்து மாற்றினார். நம் இருவரையும் ஒரே புதிய மனுஷனாக சிருஷ்டித்து, பகையை சிலுவையிலே கொன்று போட்டார். சிலுவை நம்மை தேவனோடு கூட ஒப்புரவாக்கிற்று. அதனால் நாமும் அப்பா பிதாவே என்று தேவனை நோக்கி கூப்பிடும் புத்திர சுவிகாரத்தை கிறிஸ்துவால் பெற்று கொண்டோம். கிறிஸ்துவின் சிலுவை மரணம் இல்லாதிருந்தால், தேவன் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு என்று மட்டும் இருந்திருப்பார். ஆனால் கிறிஸ்து நமக்கும் யூதருக்கும் இடையில் இருந்த பிரிவினையை சிலுவையினாலே மாற்றி, நம் இருவரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார். எவ்வளவு பெரிய பாக்கியம் இது! கிறிஸ்து வந்திராவிட்டால், நமக்காக தமது இரத்தத்தை சிந்தியிராவிட்டால், நாம் நித்திய அழிவிற்கு நேராக சென்றிருப்போம், நரகத்திற்கு பாத்திரவான்களாக இருந்திருப்போம். ஆனால் தேவன் நம்மேல் வைத்த அன்பினால், கிறிஸ்துவை உலகத்திற்கு அனுப்பி, அவர்மேல் விசுவாசம் வைக்கிற எவரும் கெட்டுபோகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு கிருபை செய்தார்.
அவருடைய அன்பு எவ்வளவு பெரியது! நம்மையும் தேவன் தெரிந்து கொண்டாரே, நித்திய ஜீவனுக்கு பாத்திரவான்களாக மாற்றினாரே, நரக ஆக்கினையினின்று நம் ஆத்துமாவை மீட்டெடுத்தாரே அவருக்கே நித்திய மகிமை உண்டாவதாக! ஆமென் அல்லேலூயா!
தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார்
மகனாக மகளாக தெரிந்து கொண்டார்
..
நான் இயேசுவின் பிள்ளை
பயமே இல்லை
எந்நாளும் சந்தோஷமே

ஜெபம்:

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, கிறிஸ்துவின் சிலுவையினால் உம்மோடு கூட நாங்கள் ஒப்புரவாக கிருபை செய்தீரே உமக்கு நன்றி. முன்னே தூரமாயிருந்த நாங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமாக தேவன் இரக்கம் பாராட்டினீரே உமக்கு ஸ்தோத்திரம். அதனால் நாங்கள் பரலோகத்திற்கும் நித்திய ஜீவனையும் பெற்று கொள்ள கிருபை செய்கிறதற்காக உமக்கு நன்றி. புறஜாதியான எங்களையும் உமக்கென்று தெரிந்து கொண்டதற்காக உமக்கு கோடி கோடி ஸ்தோத்திரங்களை இயேசுகிறிஸ்துவின் மூலம் உமக்கே ஏறெடுக்கிறோம் எங்கள் நல்ல தகப்பனே ஆமென்.