தேவ சித்தம் நிறைவேறட்டுமே

தேவ சித்தம் நிறைவேறட்டுமே 

சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். – (மத்தேயு 26:39).

ஒரு பருமனான தொழிலதிபர் இருந்தார். அவர் தன் தொழிலில் பெருகினது போலவே, தன் உடலிலும் பெருகி கொண்டே இருந்தார். கடைசியாக ஒரு நாள் ‘போதும் ஆண்டவரே நான் மிகவும் பெருத்து கொண்டே இருக்கிறேன். இப்போதிலிருந்து உம்முடைய உதவியுடன் என் எடையை குறைக்கப்போகிறேன். எனக்கு உதவி செய்யும்’ என்று சொல்லி ஜெபித்து விட்டு, எப்படியாவது குறைக்க வேண்டும் என்று முழு மூச்சுடன் ஆரம்பித்தார்.

தான் எப்போதும் வரும் வழியில் தனக்கு பிரியமான பேக்கரி மற்றும் இனிப்பு கடைகள் இருந்ததால் அந்த வழியே போகாமல், வேறு சுற்று வழியை எடுத்து தன் ஆபீசுக்கு வர ஆரம்பித்தார். அவருடன் கூட வேலை செய்கிறவர்கள் அவரிடத்தில் மாற்றத்தை காண ஆரம்பித்தனர். ‘ஓ நீங்கள் எடையை குறைக்க ஆரம்பித்து விட்டீர்களா?’ என கேட்க ஆரம்பித்தனர்.

ஒரு நாள் அவர் வேலைக்கு வரும்போது, தன் கையிலுள்ள பை நிறைய பேக்கரி உணவுகளும், இனிப்புகளையும் கொண்டு வந்தார். அதை கண்ட அவருடன் வேலை செய்பவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருவர் அவர் பின்னாகவே வந்து, ‘என்ன, எடை குறைப்பை எல்லாம் விட்டுவிட்டீர்கள் போலிருக்கிறது’ என்று கேட்டார். அதற்கு அந்த தொழிலதிபர், ‘இல்லை, நான் விடவில்லை, ஆனால் நான் இன்று இந்த மாதிரி சாப்பிட வேண்டும் என்பது தேவனுடைய சித்தம் தெரியுமா? இன்று நான் காரில் வரும்போது, சுற்றுவழியை தவறவிட்டு, இந்த பேக்கரி வழியில் தவறி வந்தேன். பேக்கரி பக்கம் வரும்போது, நான் இத்தனை நாள் இப்படி கஷ்டப்பட்டு இந்த மாதிரி பொருள் மற்றும் இனிப்புகளை சாப்பிடாமல் இருந்தேனே, அதற்கு நானே என்னை பாராட்டி கொள்ள வேண்டி, சிறு ஐட்டங்களை வாங்க தீர்மானித்தேன். ஆனால் தேவனுடைய சித்தம் இதில் தெரிய வேண்டுமே என்று, எனக்கு அந்த பேக்கரியின் முன் கார் பார்க்கிங்கில் இடம் கிடைத்தால், இது உறுதியாக தேவனுடைய சித்தம் தான் என்று தீர்மானிக்கலாம் என்று நினைத்தவனாக நான் காரை அந்த பேக்கரி முன் கொண்டு போனேன். என்ன ஆச்சரியம்! அங்கு பேக்கரி முன் இடம் கிடைத்தது பத்து முறை சுற்றி வந்த பிறகு! இது தேவனுடைய சித்தம் என்று எனக்கு பிடித்ததெல்லாம் வாங்கி வந்து வி;ட்டேன்’ என்று கூறினார்.

நம்மில் அநேகர் இந்த தொழிலதிபரை போலத்தான் இருக்கிறோம் அல்லவா? எடை விஷயத்தில் மட்டுமல்ல, எல்லா விஷயத்திலும்தான். அநேக நேரங்களில் நாம் கர்த்தரின் சித்தத்தை விட நம் சித்தத்தை தான் தேவன் செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம். நாம் ஜெபிக்கிறோம், ‘ஆண்டவரே எனக்கு ஒரு நல்ல பெண்ணை மனைவியாக தாரும், ஆனால் நான் இந்த பெண்ணை விரும்புகிறேன். இந்த பெண் எனக்கு மனைவியானால் நலமாயிருக்கும்’ என தேவனுக்கு நாம் ஆலோசனை சொல்லி கொடுக்கிறோம்.

இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு ஜெபிக்க கற்று கொடுத்த போது, ‘உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக’ என்று சொல்லி கொடுத்தார். இயேசுகிறிஸ்து செய்த அற்புதங்களை விட அவருடைய ஜெபங்கள் தான் அதிகம். ஒவ்வொரு ஜெபத்திலும் தேவனுடைய சித்தம் தம்மில் நிறைவேற அவர் ஜெபித்தார். கெத்சமெனே தோட்டத்திலும் தாம் காட்டி கொடுக்கபடுவதற்கு முன் ‘ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது’ என்று சொல்லி தேவ சித்தத்திற்கு தம்மை ஒப்பு கொடுத்து ஜெபித்தாரல்லவா? தேவனுடைய ஒரே பேறான குமாரனாய் இருந்தாலும், தம்முடைய சித்தமோ, தம்முடைய இஷ்டத்திற்கோ இடம் கொடாமல், தேவ சித்தத்திற்கு தம்மை முற்றிலும் அவர் ஒப்புக்கொடுத்தார். தேவ சித்தத்தை நிறைவேற்றினார்.

தேவ குமாரனே தேவ சித்தத்திற்கு கீழ்ப்படிந்தார் என்றால் நாம் எத்தனை அதிகமாய் அவருடைய சித்தத்திற்கு நம்மை ஒப்பு கொடுக்க வேண்டும்? சத்துரு எப்போதும் சோதனைகளை கொண்டு வந்து நம்மை தேவ சித்தம் செய்ய முடியாதபடி எப்போதும் தடுப்பான். ஆனால் நாம் தேவனுடைய வார்த்தையை வாசித்து, ஜெபித்து தேவனுடைய சித்தம் என்னில் நிறைவேற வேண்டும் என்று ஜெபிக்கும்போது தேவன் அதில் நிச்சயம் மகிழுவார். அவருடைய சிறந்த சித்தத்தை நம் வாழ்க்கையில் நிறைவேற்றுவார்.

பிரியமானவர்களே, ஒவ்வொரு நாளும் நாம் ஜெபிக்கும்போது, ‘தேவனே உம்முடைய சித்தம் மாத்திரம் என் வாழ்வில் நிறைவேறட்டும், என்னை அதற்கு ஒப்பு கொடுக்கிறேன்’ என்று ஜெபித்து, நம்முடைய யோசனை எதையும் தேவனுக்கு தெரியப்படுத்தாமல் இருப்போமானால், அதுவே தேவனை மகிழ்விக்கும். அப்படியே ஜெபித்து தேவ சித்தத்தை நிறைவேற்றுவோமாக! ஆமென் அல்லேலூயா!

முன்னறிந்து அழைத்தவரே
முன்னின்று நலமுடன் நடத்துவார்
சகலமும் நன்மைக்கென்றே
சாட்சியாய் முடித்திடுவார்
..

தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்
தேவ சத்தம் என்னுள்ளம் பலமாக தொனிக்குதே

ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நாங்கள் எங்கள் வாழ்க்கையில் எல்லா காரியத்திலேயும் உம்மை முன்பாக வைத்து உம்முடைய சித்தம் நிறைவேறும்படியாக எங்களை ஒப்புக்கொடுக்கிறோம். தேவ குமாரனாகிய இயேசுகிறிஸ்து தம்மை உம்முடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து ஜெபித்ததை போல நாங்களும் உம்முடைய சித்தத்திற்காக ஜெபித்து அதன்படி நடக்க உதவி செய்யும். பரலோகத்தில் உம்முடைய சித்தம் செய்வது போல என்னுடைய வாழ்க்கையிலும் உம்முடைய சித்தம் நிறைவேறுவதாக என்று என்னை உம்முடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கிறேன். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.