அதிருப்தி

அதிருப்தி

பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக. – (யாத்திராகமம் 20:17).
பிரபல பத்திரிக்கை ஒன்றில் ஒரு காட்டூன் படம் வெளிவந்தது. அதில் இரண்டு புல் வெளிகள். ஒரே மாதிரியான பசுமையான புல்தரை, ஒரே அளவாகவும் இருந்தது. இந்த இரண்டு புல்வெளிகளுக்கும் நடுவே ஒரு வேலி இருந்தது. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மாடு மேய்ந்து கொண்டிருந்தது. அந்த கார்ட்டூன் படத்தின் விசேஷம் என்ன தெரியுமா? வலது புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த மாடு வேலிக்குள் தன் தலையை விட்டு இடது பக்கத்தில் மேய முயல்கிறது. அதேப்போல இடது பக்க மாடு வலது பக்கம் மேய முயல்கிறது. இந்த இரண்டு மாடுகளுக்கும் தனது புல்வெளியை காட்டிலும் அடுத்த புல்வெளி பசுமையாக தோன்றுகிறது. ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ இரண்டு மாடுகளின் தலைகளும் வேலியில் மாட்டிக்கொண்டது. இந்தபடத்திற்கு கொடுக்கப்பட்ட தலைப்பு ‘அதிருப்தி’.
இங்கே சித்தரிக்கப்பட்ட மாடுகள் மனிதர்களைத்தான் குறிக்கிறது. மனிதனுடைய கண்களுக்கு அடுத்த வீட்டில் உள்ள பொருடகள் மீது எப்பொழுதும் ஒரு கண் உண்டு. இதோடு தொடர்புடைய உவமை ஒன்றும் வேதத்திலே உண்டு. தோட்டத்தில் வேலை செய்ய எஜமான் அனேகரை அழைக்கிறார். சிலர் காலை 8 மணிக்கே வந்து வேலையை ஆரம்பிக்கின்றனர். இன்னும் சிலர் 10 மணிக்கு, சிலர் 12 மணிக்கு வேலைக்கு வந்தனர். கூலி 100 ரூபாய் பேசிவிட்டார். அவர்கள் மனப்பூர்வமாய் சம்மதித்த பின்புதான் வேலையை ஆரம்பித்தனர். வேலை முடிந்து எல்லாருக்கும் 100 ரூபாய் கூலி கொடுக்கப்பட்டது. அப்பொழுது முந்தி வேலைக்கு வந்தவர்கள், ‘8மணிக்கு வந்த எங்களுக்கும் 12 மணிக்கு வந்தவர்களுக்கும் ஒரே கூலி எப்படி கொடுக்கலாம்’ என புகார் செய்தனர். அதற்கு எஜமான், ‘அது என் இஷ்டம், உனக்கு என்ன கூலி கொடுப்பதாக சொன்னேனோ அதை உனக்கு கொடுத்து விட்டேன். மற்றவர்களுக்கு கொடுக்கும கூலியை பார்க்கவோ, அதை உன்னுடைய கூலியோடு ஒப்பிடுவதோ உனக்குரியதல்ல, நான் தாராள மனப்பான்மையுடன் செயல்பட்டால் நீ வண்கண்ணனாக இருக்கலாமா?’ என்று பதில் கூறுகிறார்.
நமக்கு தேவையானதை ஆண்டவர் நமக்கு கொடுத்திருக்கும்போது, நாம் அதில் திருப்தியடைய கற்று கொள்ள வேண்டும். அடுத்தவன், எவ்வளவு பெறுகிறான் என்று அறிய முற்படும்போதுதான் நமக்குள் பிரச்சனை உருவாக ஆரம்பிக்கிறது. பிறனுடைய சம்பளத்தை அறிந்து கொள்வதால் நமக்கு என்ன பயன்? அவன் சம்பளம் குறைவாக இருந்தால் எனக்குள் பெருமை வரும், கூடுதலாக இருந்தால், பொறாமை வரும். ஆம் ஏதாவதொரு ஆமை உங்களுக்குள் வருவது நிச்சயம். ஆகவே அறியாமல் இருப்பது நல்லது.
இதை வாசிக்கிற நாம் பிறருடைய வாழ்வை எட்டிப்பார்த்து அவர்களோடு ஒப்பிட்டு அதன் மூலம் வரும் ஏக்கத்தையும் கவலையையும், சோர்வையும் நீக்குவதற்கு தீர்மானிப்போம். அயலானை ஆண்டவர் ஆசீர்வதிப்பாரானால் ஆண்டவரை துதிக்க கற்று கொள்வோம். பொறாமை கொண்டு, எரிச்சலடைய வேண்டாம். நமக்கு எதை வாக்களித்திருக்கிறாரோ அதை பெற்று கொண்டு மகிழ்ச்சியாக வாழ கற்று கொள்வோம். ஒவ்வொருவருக்கும் என்ன ஆசீர்வாதம் கொடுக்க வேண்டும், எந்த அளவிற்கு கொடுக்க வேண்டும், எப்பொழுது கொடுக்க வேண்டும் என்று ஆண்டவர் அறிந்திருக்கிறார். அதில் நாம் தலையிட்டு தேவனுக்கு ஆலோசனை கூற அவசியமில்லை. ஏனெனில் ஆண்டவர் பட்சபாதம் பார்க்கிற தேவன் அல்ல, அவர் நீதியுள்ளவர். ஆமென் அல்லேலூயா!
வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர உம்மைத் தவிர
..
செய்த நன்மை நினைத்து
துதித்துப் பாடி மகிழ்வேன்

ஜெபம்:

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நீர் எங்களுக்கு கொடுத்திருக்கும் ஆசீர்வாதங்களுக்காக உம்மை நன்றியோடு துதிக்கிறோம்.   பிறருடைய வாழ்வையும் ஆசீர்வாதங்களையும் நினைத்து, அவற்றை  நாங்கள்  இச்சியாதபடி போதுமென்ற மனதோடு,  நீர் எங்களுக்கென்று  கொடுத்திருக்கும் ஆசீர்வாதங்களை மகிழ்ச்சியோடு அனுபவிக்க எங்களுக்கு உணர்த்தும்,  கற்று தாரும்.   எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி.   இயேசு கிறிஸ்துவின்  நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.