பரலோகத்தில் அமைதி

பரலோகத்தில் அமைதி

அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரமளவும் அமைதல் உண்டாயிற்று. –  (வெளிப்படுத்தின விசேஷம் 8:1).
முதலும் கடைசியுமாக பரலோகத்தில் அரைமணிநேரம் அமைதி உண்டாவதை இந்த இடத்தில் காண்கிறோம். இயேசுகிறிஸ்து ஏழாம் முத்திரையை உடைத்த போது, அந்த அமைதி உண்டாகிறது.
‘சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து; ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்’ – (ஏசாயா 6:2-3). இப்படி ஓயாமல் தூதர்கள் தேவனை புகழ்ந்து பாடி கொண்டிருக்கும் பரலோகத்தில் திடீரென்று ஒரு அரை மணிநேரம் அமைதி உண்டாகிறது.
இது இன்னும் வரப்போகும் காலமாக, தீர்க்கதரிசனமாக எழுதப்பட்டிருக்கிறது. ஏன் பரலோகத்தில் அரைமணிநேரம் அமைதல் உண்டாயிற்று என்று பார்ப்போம். அரை மணிநேரம் என்பது 30 நிமிடங்களை குறிக்கிறது. இந்த முப்பது என்கிற எண், வேதத்தில் துக்கத்தை குறிப்பதாக உள்ளது. ‘ஆரோன் ஜீவித்துப்போனான் என்பதைச் சபையார் எல்லாரும் கண்டபோது, இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் ஆரோனுக்காக முப்பது நாள் துக்கங்கொண்டாடினார்கள்’. – (எண்ணாகமம் 20:29). மற்றும் ‘இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் சமனான வெளிகளில் மோசேக்காக முப்பது நாள் அழுதுகொண்டிருந்தார்கள்; மோசேக்காக அழுது துக்கங்கொண்டாடின நாட்கள் முடிந்தது’ (உபாகமம் 34:8). ஆகவே முப்பது என்பது துக்கத்தை குறிப்பதாக உள்ளது. பரலோகத்தில் என்ன துக்கம்?
வெளிப்படுத்தின விசேஷம் 8ம் அதிகாரம் 2ம் வசனத்திலிருந்து பார்த்தால், ஏழு தூதர்களின் கைளில் ஏழு எக்காளங்கள் கொடுக்கப்படுகிறது. அந்த எக்காளங்கள் ஒவ்வொன்றாக ஊதப்படும்போது, தேவ கோபாக்கினை பூமியில் மனிதர்கள் மேல் கொட்டப்படும். மனிதர்கள் மேல் வரப்போகும் தீங்கை நினைத்து, அது மிகவும் கொடியதாய் இருக்கப்போகிறபடியால்,  அங்கு பரலோகத்தில் அந்த அமைதி காணப்படுகிறது.
நம் தேவன் மிகவும் அன்பானவர், இரக்கமும் உருக்கமும், நீடிய சாந்தமும், கிருபையும் உள்ள தேவன். ஆனால் அவர் நியாயந்தீர்க்கும்போது, நீதியாய் நியாயம் தீர்ப்பார்.
அவரிடத்தில் பட்சபாதம் எதுவுமில்லை. இயேசுகிறிஸ்து தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்து தேவாலயத்தில் பிரவேசித்து, ‘வாசிக்க எழுந்து நின்றார். அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது: கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு, வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார் (லூக்கா 4:17- 20) என்று பார்க்கிறோம்.
அதே வசனத்தை ‘கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும்,சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், கர்த்தருடைய அநுக்கிரகவருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச்சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும்,’ (ஏசாயா 61:1-2) என்று பார்க்கிறோம். இயேசுகிறிஸ்து வாசித்தபோது, அவர் தாம் அநுக்கிரக வருஷத்தை அறிவிக்க வந்ததை மாத்திரம் வாசித்து நிறுத்தினார்.
ஏனெனில் அவர் அங்கு நீதி சரிக்கட்டும் நாளைக்குறித்து கூற விரும்பவில்லை. அவர் தாம் தயவுள்ளவர், இரக்கம் உள்ளவர், பாவிகள் மனம் திரும்பவும் தம்முடைய சொந்த இரத்தத்தை சிந்தி பாவ மன்னிப்பை உலகத்திற்கு அருளவும் தாம் வந்ததை குறிக்கும் வகையில் அவர் நம்முடைய தேவன் நீதியைச்சரிக்கட்டும் நாளையும் கூறவும், என்ற வார்த்தைகளை வாசிக்கவில்லை.  ஆனால் ஏசாயாவில் அந்த வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கிறது. அநுக்கிரக வருஷம், அதாவது 365 நாட்கள். ஆனால் நீதியை சரிகட்டுவதோ ஒரே நாள்! எத்தனை அற்புதமும் அன்பான தேவன் நம் தேவன். அவர் நியாயந்தீர்க்கும் இந்த இடத்திலும் அவருடைய அன்பு விளங்குகிறதல்லவா? அவர் நீதியை சரிகட்டுவதோ ஒரே நாள், ஆனால் அதன் விளைவுகள் மிகவும் பயங்கரமாக இருப்பதால் அங்கு பரலோகத்தில் அரைமணிநேரமளவும் அமைதி நிலவுகிறது.
அன்பானவர்களே, நாம் கடைசி நாட்களில் ஜீவித்து கொண்டிருக்கிறோம். காலமே அதை நமக்கு அறிவித்து கொண்டிருக்கிறது. கர்த்தரின் வருகை மிகவும் சமீபம். எக்காள சத்தம் தொனிக்கும், அப்போது கர்த்தருக்குள் இருப்பவர்கள் எடுத்து கொள்ளப்படுவார்கள்.
அதன்பின் வரும் நியாயத்தீர்ப்பின் ‘..எக்காள சத்தங்களால், பூமியில்; குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, (ஆபத்துவரும்)’ (வெளிப்டுத்தின விசேஷம் 8:13). நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற இந்த கிருபையின் நாட்களிலே நாம் இரக்கமுள்ள தேவனண்டை வந்து விடுவோமா? ‘இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை’ (ஏசாயா 59:1). அந்த நீட்டப்பட்டிருக்கிற இரட்சிப்பின் கரங்களுக்குள்ளே நம்மை தந்து விடுவோம். அவர் நம்மை இரட்சிப்பார், நம்மை ஏற்று கொள்வார். வரப்போகும் நியாயத்தீர்ப்புக்கு நாம் அஞ்சத்தேவையில்லை! ஆமென் அல்லேலூயா!
நியாயத்தீர்ப்பின் நாள் நெருங்குதே
நேசர் வர காலமாகுதே
மாயலோகம் நம்பி மாண்டிடும்
மானிடரை மீட்க மாட்டீரோ
..
தேவனே நீர் பெரியவர் தேவனே நீர் பரிசுத்தர்
தேவனே நீர் நல்லவர் தேவனே நீர் வல்லவர்

ஜெபம்:

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, பரலோகத்தில் அரைமணிநேரம் அமைதி நிலவுவதை குறித்து நாங்கள் இந்த நாளில் தியானிக்க கிருபை செய்தீர். அதற்காக உமக்கு நன்றி ஐயா. உம்முடைய வார்த்தைகள் எல்லாம் உண்மையாக இருப்பதற்காக உமக்கு நன்றி. இந்த தீர்க்கதரிசன வார்த்தைகள் சீக்கிரம் நிறைவேறப்போகும் நாட்களில் வாழ்கின்ற நாங்கள், கிருபையின் இந்த நாட்களில் எங்களை உம்மிடம் அர்ப்பணிக்கிறோம். எங்கள் குறைகள் குற்றங்களை பாவங்களை இயேசுகிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் கழுவியருளும். எங்களுக்கு பாவ மன்னிப்பை கிருபையாக கொடுத்து, எங்களை உம்முடைய வருகைக்கு ஆயத்தப்படுத்தும். இயேசுகிறிஸ்துவை எங்கள் சொந்த இரட்சகராக ஏற்று கொள்கிறோம். எங்களை உம்முடைய பிள்ளைகளாக ஏற்று கொண்டதற்காக உமக்கு கோடி கோடி நன்றி தகப்பனே.   எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.