விசாலமான வழியும், இடுக்கமான வழியும்

விசாலமான வழியும், இடுக்கமான வழியும் 

இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். – (மத்தேயு 13-14).
ஒரு புகழ்பெற்ற ஊழியர் தெருவில் நடந்து சென்று கொண்ருந்தபோது, ஒரு கூட்டமான பன்றிகள் ஒரு மனிதனை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தன. அவருக்கு ஆச்சரியம், எப்படி இந்த பன்றிகள் அந்த மனிதனை பின் தொடர்கின்றன என்று. என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்காக அவரும் அந்த பன்றிகளின் பின்சென்றார். அவருடைய மிகப்பெரிய ஆச்சரியமாக அந்த பன்றிகள் அந்த மனிதனை பின்தொடர்ந்து, தங்களை கொல்லும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அவர் அந்த மனிதனை பார்த்து, ‘எப்படி இந்த பன்றிகளை எந்த பிரச்சனையும் இல்லாமல் இந்த கொல்லும் இடத்திற்கு கொண்டு வந்தீர்கள்’ என்று கேட்டார். அதற்கு அந்த மனிதன், ‘இதோ என் கையிடுக்கில் அவரை கொட்டைகள் இருக்கின்றன. அவைகளை அவ்வப்போது கொஞ்சம் கீழே போடுவேன்.
அதை சாப்பிட தொடர்ந்து வந்த பன்றி கூட்டம் தாங்கள் எங்கு கொண்டு போகப்படுகிறோம் என்று அறியாமலேயே என் பின்னே வந்து விட்டது’ என்றார். பிசாசானவனும் தன் கையில் வைத்திருக்கும் சிற்றின்பங்களை அவ்வப்போது கீழே போடுகிறான். அவன் எதற்கு போடுகிறான் என்று அறியாதபடி பாவத்தில விழும் ஜனக்கூட்டம் அவன் கொடுக்கும் சிற்றின்பத்திற்கு அடிமையாகி, நரகத்திற்கு நேராக சென்று கொண்டிருக்கிறார்கள். எத்தனை பரிதாபம்?
ஒரு முறை பாவத்தில் விழுந்து புரண்டு கொண்டிருக்கும் மனிதர், அதிலிருந்து தாங்கள் வெளிவர வேண்டும் என்று நினைத்தாலும் வெளியே வரமுடியாத அளவு பாவம் அவர்களை இழுக்கிறது. ஒருவேளை குடிப்பழக்கத்திலிருந்து விடுதலையாகும்படி பான்பராக் போட ஆரம்பித்து, அதை விடமுடியாதபடி தவிப்பவர் ஏராளம். சிகிரெட்டை விடவேண்டுமென்று தாங்களாகவே முயன்று, வேறு கெட்ட பழக்கத்திற்கு அடிமையானவர்கள் உண்டு. போதை பழக்கத்திலிருந்து வெளியே வரும்படி ஏங்கும் வாலிபர்கள் உண்டு, அவர்களிடம் கேட்டு பாருங்கள், தாங்கள் வெளியே வருவதை விரும்புவார்கள், ஆனால் விடுதலை பெறவோ அவர்களால் முடிவதில்லை. இயேசுகிறிஸ்து மேற்சொன்ன வசனத்தில் இரண்டு வாசல்களை குறித்து விளக்குகிறார். ஓன்று கேட்டுக்கு செல்லும் வழி, மற்றது பரலோகத்திற்கு செல்லும் வழி. அந்த வழிகளில் செல்லும்முன்னர், இது நரகத்திற்கு செல்லும் வழி என்று போடப்பட்டிருந்தால் யாரும் அதன் உள்ளே செல்ல முயல மாட்டார்கள். தானாகவே நரகத்திற்கு செல்வதை யாரும் விரும்ப மாட்டார்கள். அதனால் சத்துருவானவன், சிற்றின்பங்களை காட்டி, அந்த வழிக்கு நேரே இழுத்து சென்று கொண்டிருக்கிறான். அவனது சிற்றின்பத்திற்கு தங்களை விற்று போட்டு, அவனுக்கு பின்னாக சென்று கொண்டிருப்பவர்கள்தான் அதிகம். தாங்கள் கொல்லப்படப்போவதை அறியாத கூட்டம், அந்த மனிதனுக்கு பின் சென்றதை போலத்தான் இவர்களும் தாங்கள் நரகத்திற்கு நேராக சென்று கொண்டிருக்கிறார்கள்.
ஏனெனில் கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். அந்தோ என்ன பரிதாபமான முடிவு! ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். பரலோகத்திற்கு செல்லும் வழி இடுக்கமும் நெருக்கமுமாயிருந்தாலும், அந்த இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள் என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார்.
இன்றைய உலகம் நீ இப்படி செய்ய வேண்டும், கர்த்தர் கற்பித்த வழியில் நடக்க வேண்டும், அவருடைய சித்தத்தின்படி செய்ய வேண்டும் என்று சொன்னால், அதன்படி செய்யவும் பிரயாசப்படவும் விரும்புவதில்லை. தங்களுக்கு சுகமான, தங்கள் இருதயம் விரும்புகிறபடி, சொல்லுகிறவர்களையே மனிதரின் இருதயம் நாடுகிறது. அதன்வழியே செல்லவே அநேகர் விரும்புகிறார்கள். ஆனால் அதன் முடிவோ கேடு!
‘பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை’  (மத்தேயு 7:21) என்று இயேசுகிறிஸ்து தெளிவாக இங்கு கூறுகிறார். ‘அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்’ (மத்தேயு 7:22-23) என்று இயேசுகிறிஸ்து கூறுவார்.
ஒருவேளை நாம் அவருடைய நாமத்தில் அதிசயம், அற்புதம் செய்தாலும், அவருடைய சித்தத்தின்படி செய்யாமல் போவாமானால் நான் உங்களை ஒருக்காலும் அறியவில்லை என்று இயேசுகிறிஸ்து கூறுவார். தீர்க்கதரிசனம் சொல்வதைவிட, பிசாசுகளை துரத்துவதைவிட, அநேக அற்புதங்கள் அதிசயங்கள் செய்வதைவிட தேவனுடைய சித்தத்தை செய்வதையே தேவன் விரும்புகிறார். அவருடைய சித்தத்தை செய்கிற மனுஷனே புத்தியுள்ளவன் என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார் (வசனம் 24). ஆகவே இடுக்கமான வாசல் என்றாலும், அதன் முடிவு நித்திய ஜீவன், பரலோக வாழ்வு! அந்த வாசல் வழியே பிரவேசித்து, நித்திய ஜீவனை பெற்று கொள்ள தேவன் தாமே நமக்கு உதவுவாராக! ஆமென் அல்லேலூயா!
வாழ்வுக்கு செல்லும் வாசல் இடுக்கமானது
பரலோகம் செல்லும் பாதை குறுகலானது
..
அழிவுக்கு செல்லும் வாயில் மிகவும் அகன்றது
பாதாளம் செல்லும் பாதை மிகவும் விரிந்தது
..
இடுக்கமான வாசல் வழியே
வருந்தி நுழைய முயன்றிடுவோம்
சிலுவை சுமந்து இயேசுவின் பின்
சிரித்த முகமாய் சென்றிடுவோம்

ஜெபம்:

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, கேட்டுக்கு செல்லும் வழி மிகவும் விசாலமாயும், விரிவானதாக இருந்தாலும், நாங்கள் அந்த வழியாக செல்லாதபடி இடுக்கமான வாசலின் வழியாக ஜீவனுக்குள் பிரவேசிக்க தேவன் உதவி செய்யும். இந்த உலகத்தின் சிற்றின்பங்கள் நரகத்திற்கு கொண்டு செல்லுமாகையால் நாங்கள் எங்கள் இருதயத்தை அதன்மேல் வைக்காமல், உம்மையே நோக்கி பார்த்து நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்க கிருபை தாரும். பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே புத்தியுள்ளவன் என்று நீர் சொல்லுகிறபடியால், நாங்கள் உம் சித்தத்தை செய்ய எங்களுக்கு கற்று தாரும்.   எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.