கிறிஸ்துவை பிரதிபலிக்கும் வாழ்வு

கிறிஸ்துவை பிரதிபலிக்கும் வாழ்வு

மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள். – (எபேசியர் 4:2-4).
வாலிபர்கள் மத்தியில் பகுதி நேரமாக ஊழியம் செய்யும் ஒரு சகோதரர் மற்றவர்களிடம் பழகும்போது கிறிஸ்துவின் சாயலை பிரதிபலித்து வாழ பிரயாசமெடுப்பார். ஒரு முறை அவரது காரை ரிப்பேர் செய்ய வேண்டி வந்தது. வழக்கமாக செல்லும் கடையின் மெக்கானிக் ஊரில் இல்லாதபடியால் ஒரு புதிய கடைக்கு சென்று காரை ரிப்பேர் செய்து தரும்படி மெக்கனிக்கிடம் கூறினார். அவர் நிமிர்ந்துக் கூட பார்க்காமல் அலட்சியமாய் சாவியை வாங்கி கொண்டு,  ‘சரி சரி உடனே முடியாது, நாளை பார்க்கலாம்’ என்று கூறினார். மறுநாள் சென்றபோது சரியான பதிலை கூறாமல், அடுத்த நாள் வரும்படி கூறினார். அந்த ஊழியர் தன் நண்பரிடம், அந்த மெக்கானிக் நடந்துகொள்ளும் விதத்தை பற்றி கூறினார்.
அதற்கு நண்பர், ‘நீங்கள் இப்படி அமைதியாய் இருந்தால் அவன் அப்படித்தான் பேசுவான், கடிமனாய் பேசினால் சீக்கிரமாய் வேலையை முடித்து கொடுப்பான்’ என்று கூறினார்.
இவரும் மறுநாள் போய் அந்த மெக்கானிக்கை நன்கு திட்டவேண்டுமென்று நினைத்து கொண்டு போனார். ஆனால் அவரை பார்த்தவுடன், மெக்கானிக் சிரித்துக் கொண்டே, சாவியை எடுத்து கொடுத்து, ‘வண்டியை எடுத்து செல்லலாம் சார்’ என்றார். மேலும் மெக்கானிக், ‘கொஞ்ச நாட்களுக்கு முன்பதாக என் மனைவி கிறிஸ்தவளாக மாறி விட்டாள். என்னையும் ஆலயத்திற்கு வரும்படி அழைக்கிறாள். கிறிஸ்தவர்கள் அன்பானவர்கள், பொறுமையானவர்கள் என்று சொல்லுவாள். உங்கள் காரில் வசனத்தை பார்த்ததும், நீங்களொரு கிறிஸ்தவர் என்று அறிந்து கொண்டேன். ஆம், உண்மையிலேயே என் மனைவி கூறிய பொறுமையை உங்களிடம் கண்டேன், நானும் ஒரு கிறிஸ்தவனாக வாழ விரும்புகிறேன்’ என்றார். காரில் அமர்ந்த தேவ மனிதர், ‘ஆண்டவரே, என்னை மன்னியும், நான் என் கோபத்தையும், கடின வார்த்தையையும் அவரிடம் வெளிப்படுத்தியிருந்தால், அவர் உம்மிடம் வருவது தடைப்பட்டிருக்குமே எந்த சூழ்நிலையிலும் நான் உம்மை பிரதிபலிக்க உதவி செய்யும்’ என்று ஜெபித்து கடந்து சென்றார்.
பிரியமானவர்களே, நாம் வாழும் இடங்களிலும் இந்த மெக்கானிக்கை போல ஆண்டவரை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருக்கும் உள்ளங்கள் ஏராளம் ஏராளம் உண்டு. கிறிஸ்து இயேசுவிலிருக்கும் சிந்தை நம்மிலும் காணப்படுமாயின் நம்முடைய நடத்தையின் மூலம் அவர்களை ஆதாயப்படுத்தலாம். அன்றாட வாழ்வில் ஆவியின் கனிகளை வெளிப்படுத்தி, தினமும் சந்திக்கும் மனிதர்களின் இருதயத்தில் கிறிஸ்துவை குறித்த தாகத்தை ஏற்படுத்துவோம்.
வேதத்தில் நான்கு சுவிசேஷங்கள் உண்டு. கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஐந்தாவது சுவிசேஷமானவர்கள் என்று சொல்வதுண்டு. அதாவது வேதத்தை அறியாதவர்களுக்கு, படிக்காதவர்களுக்கு நாமே வேதமாக வெளிப்படுத்த வேண்டும். நம் வாழ்வை பார்க்கும் அவர்கள் இவர்கள் கிறிஸ்தவர்கள் என்று சொல்லத்தக்கதாக நம் நடை, உடை, பாவனை, சொல், செயல் அனைத்தும் கிறிஸ்துவை வெளிப்படுத்தும்படியாக நம் ஜீவியம் இருக்க வேண்டும். அப்படிப்பட்டதாக நம் ஜீவியம் இருந்து, அநேகரை கிறிஸ்துவுக்குள்ளாக்க தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!
எந்தன் உள்ளத்தில் புது உணர்வு
எந்தன் வாழ்வினில் புது மலர்ச்சி
எந்தன் நடை உடை பாவனை சொல் செயலும்
எந்தன் இயேசுவால் புதிதாயின
புதுவாழ்வு புது ஜீவன் புது பாடல்
என்னை சந்தித்த இயேசு தந்தார்
ஆடிப்பாடி உள்ளம் ஆர்ப்பரிப்பேன்
ஆண்டவர் சமுகத்தை அலங்கரிப்பேன்

ஜெபம்:

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்களை காண்கின்ற ஒவ்வொருவரும் எங்களில் உம்மை காண கிருபை செய்யும். நாங்கள் ஒவ்வொருவரும் படிக்கிற கிறிஸ்தவ நிருபங்களாக காணப்பட எங்கள் வாழ்க்கை கள்ளங்கபடு இல்லாத பரிசுத்தமான வாழ்க்கையாக காணப்பட மற்றவர்களுக்கு நாங்கள் ஒரு எடுத்துக்காட்டாக திகழ எங்கள் ஒவ்வொருவரையும் தேவன் எடுத்து நிறுத்துவீராக. டிங்கள் வாழ்க்கையை கண்டு அநேகர் உம்மை ஏற்று கொள்ள கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.