உந்தன் வேதம் எனது உணவு

உந்தன் வேதம் எனது உணவு 
….
இயேசுகிறிஸ்து “நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது”. – (யோவான் 6:63).

ஒரு பெண் ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறாள் என்றும் அவளுக்கு பசியின்மை என்கிற வியாதி இருக்கிறதாகவும் வைத்து கொள்வோம். அவள் ஒருவேளை நன்கு சமைக்கலாம், அவளுடைய கை பக்குவம் மிகவும் ருசியாக இருக்கிறது என்று அநேகர் அவளை பாராட்டலாம், அவள் மூலம் அந்த ஹோட்டலுக்கு அநேக வருமானம் வரலாம். ஆனால் அவளோ தன் நோயின் காரணத்தால், அந்த உணவில் எதையும் சாப்பிடாமல் இருப்பதால், அவள் சிறிது சிறிதாக மரித்து கொண்டிருக்கிறாள்.
.
கர்த்தருடைய வசனம் ஆவியாயும், அது ஜீவனாயும் இருக்கிறது என்று கர்த்தர் சொன்னார். ஆனால் யூதாஸ் காரியோத்திற்கு அது ஜீவனாக இருந்ததா? ஆப்படி ஜீவனாக இருந்திருந்தால் அவன் கர்த்தரை 30 வெள்ளிகாசுக்காக காட்டி கொடுத்திருக்க மாட்டான். அவன் அந்த ஹோட்டலில் வேலை செய்த பெண்ணை போல வார்த்தையாக கிறிஸ்துவை சுற்றியே வாழ்ந்தான், நடமாடி கொண்டிருந்தான். ஆனால் அந்த ஜீவனுள்ள வார்த்தைகள் அவனுக்கு ஜீவனை தரவில்லை, மாறாக அவன் நாண்டு கொண்டு மரித்தான்.
.
அநேக கிறிஸ்தவர்களுக்கும் வேதத்திலுள்ள வார்த்தைகள் அநேகம் தெரியும். அவர்கள் கர்த்தருக்கென்று உழைப்பார்கள், வசனத்தை எடுத்து பெரிய பிரசங்கங்கள் எல்லாம் செய்வார்கள், ஆனால் அவர்களோ அந்த வார்த்தைகளை தங்கள் ஜீவனாக எடுத்து கொள்ள மாட்டார்கள்.
.
ஒரு கிறிஸ்தவனுக்கு கர்த்தருடைய வேதம் எப்போது ஜீவனாக மாறுகிறது? அதை அவன் தன் வாழ்வில் அப்பியாசிக்கும்போது, அந்த ஜீவனுள்ள வார்த்தைகள் அவனுடைய வாழ்வை மாற்றும்போது, கர்த்தருடைய சாயலுக்கு அவனை மறுரூபப்படுத்தும்போது, அந்த ஜீவனுள்ள வார்த்தைகள் அவனுக்கு உண்மையாகவே ஜீவனுள்ளதாக மாற்றுகிறது.
.
உதாரணத்திற்கு ஒரு வசனத்தை எடுத்து கொள்வோம். ‘ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்’ (எபிரேயர் 4:16). இந்த வசனத்தை நீங்கள் தியானிக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். எப்போது தேவன் எனக்கு சகாயம் செய்வார்? ஏற்ற சமயத்தில். அப்போது ஏற்ற வேளை வரும்போது நாம் அவருடைய இரக்கத்தை பெற முடியும். அவரிடத்திலிருந்து சகாயத்தை பெறவும் முடியும் என்று நீங்கள் தியானிக்கிறீர்கள்.
.
அடுத்த நாள் காலை வேலைக்கு செல்லும்போது, உங்களுக்கு எதிர்பாராத விதமாக ஒரு பிரச்சனை வருகிறது. அதிலிருந்து விடுபட நினைக்கும்போது, நேற்று படித்து தியானித்த வார்த்தை உங்கள் மனதிற்கு வருகிறது, ‘ஏற்ற வேளை வரும்போது எனக்கு உதவி செய்வேன் என்று வாக்குதத்தம் செய்தவரே, எனக்கு இந்த வேளையில் உதவும் ஐயா’ என்று அவருடைய வார்த்தையின்படி கேட்கும்போது, அந்த நேரத்தில் தேவன் உங்களுக்கு ஏற்ற ஞானத்தை கொடுத்து அந்த பிரச்சனையிலிருந்து வெளிவர உதவி செய்வார். அதை காணும் உங்கள் உள்ளம் பூரிப்படைகிறது. கர்த்தர் தாம் சொன்ன வார்த்தையின்படியே எனக்கு உதவினாரே என்று. இப்படித்தான் ஒவ்வொரு வார்த்தையையும் உட்கொண்டு அதை நம் அனுதின ஜீவியத்தில் அப்பியாசப்படுத்தும்போது, அதுவே நமக்கு ஜீவனாக மாறி விடுகிறது. நமது உணவாக ஒவ்வொரு வசனமும் மாறும்போது, நமக்கு பெலத்தையும், ஜீவனையும் கொடுத்து நம்மை அவருடைய சாயலாக மாற்றி விடுகிறது.
.
நாம் வேதத்தில் ஒரு நாளில் எத்தனையோ அதிகாரங்கள் படித்தும், அது நமக்கு உணவாக, நமது ஜீவனாக மாறி போகாதிருந்தால், அத்தனை படித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. ஏதோ கடமைக்காக படித்து செல்வதைப் போலத்தான் அது இருக்கும். ஆனால் ஒரு வசனமானாலும் அதை தியானித்து, அதன்படி நடக்கும்போது, ஆவியானவர் நமக்கு ஒத்தாசை செய்து, அவருக்குள் வளர உதவுவார்.
.
அந்த ஹோட்டலில் வேலை செய்த அந்த பெண் சிறிது உணவு எடுத்து உண்டாலும், அவள் பெலனடைந்து, மெதுவாக மரணத்திலிருந்து வெளிவருவாளோ, அதை போல் ஒரு வசனமாயிருந்தாலும் நாம் அதை தியானித்து, அதை நம் வாழ்வில் அப்பியாசப்படுத்தும்போது நிச்சயமாகவே அந்த வார்த்தைகள் நம் ஆபத்தில் நம்மை விடுவித்து, நமக்கு ஜீவனை கொடுத்து வழிநடத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆமென் அல்லேலூயா!


உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழிநடத்தும்
.
திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் நடத்திடுமே

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, வேதத்தை நாங்கள் வாசிக்கிறது மட்டுமல்ல, அதை தியானிக்கவும், அதன் கருப்பொருளை உணர்ந்து, அதை உணவாக உண்டு, அதன்படி ஒவ்வொரு நாளும் நாங்கள் நடக்கவும் எங்களுக்கு கிருபை செய்யும். வேத வசனத்தின் இரகசியங்களை கற்று கொள்ள ஆவியானவர் தாமே எங்களுக்கு கிருபை செய்வாராக. வேத வசனத்தை நாங்கள் எங்கள் வாழ்வில் அப்பியாசிக்கும்போது அதுவே எங்களுக்கு பாதைக்கு வெளிச்சமாக, கால்களுக்கு தீபமாக நடத்த போகிற தயவிற்காக உமக்கு நன்றி. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.