சிறுப்பிள்ளைகளைப் போல

சிறுப்பிள்ளைகளைப் போல

நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். – (மத்தேயு 18:3).
இரவு தூக்கத்திற்காக படுக்கையறையை திறந்த தகப்பனுக்கு ஒரே மகிழ்ச்சி. அங்கு தன் கட்டிலின் அருகில் தனது ஐந்து வயது மகன் முழங்கால் படியிட்டு ஜெபித்து கொண்டிருப்பதை கண்டார். அவன் என்ன ஜெபிக்கிறான் என்பதை கூர்ந்து கவனித்தார். ‘ஆண்டவரே, என் அப்பாவை போல என்னை பெலமுள்ளவனாக்கும். அப்பாவின் நல்ல குணங்களை எனக்கும் தாரும். அப்பாவை போல என்னை தைரியமுள்ளவனாக்கும்’என்று ஜெபித்து விட்டு படுக்கையில் படுத்தான். அவன் தூங்கும் வரை தகப்பன் அமைதியாயிருந்தார். பின் தன் மகனுடைய சிறு கட்டிலின் அருகே முழங்கால் படியிட்டார். அவர் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. ‘ஆண்டவரே என் குழந்தை என்னை போல ஆக வேண்டுமென்று ஜெபிக்கிறான்.
ஆனால் என் மனசாட்சியோ என் குறைகளையும், பாவங்களையும் எனக்கு சுட்டி காட்டுகிறது ஆண்டவரே, என்னை என் குழந்தையை போலாக்கும்’ என்று ஜெபித்தார்.
ஆம், நாம் குழந்தைகளைப் போல மாற வேண்டும். குழந்தைகளின் தாழ்மையையும், கள்ளங்கபடமற்ற இருதயத்தையும் வாஞ்சிக்க வேண்டும். அன்று சாமுவேல் என்ற சிறுவன், கர்த்தரின் குரலை இனம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஏலி தாத்தா தான் தன்னை அழைக்கிறார் என்று எண்ணினான். ‘நான் உன்னை கூபபிடவில்லை’ என்று ஏலி சொன்னபோதும் சளைக்காமல் மூன்று முறை தூக்கத்திலிருந்து எழுந்து செல்கிறான்.
பெரியவர்களாகிய நாம் அந்த இடத்தில் இருந்திருப்போமானால் என்ன செய்திருப்போம்? ஒருமுறை சென்றிருப்போம், அடுத்து, ‘நடு ராத்திரியில் சும்மா இருக்க முடியவில்லையா இந்த கிழவனுக்கு’ என மனதுக்குள் சொல்லயிருப்போம். அங்குதான் சிறுபிள்ளையின் குணம் நமக்கு வேண்டும். நம்மோடு இருப்பவர் வயது முதிர்ந்தவரோ, படிக்காதவரோ, ஏழையோ, யாராயிருந்தாலும் அவர்களின் வார்த்தைகளை மதிப்போம். அவர்களது நல்ல ஆலோசனைகளை பணிவாய் ஏற்று கொள்வோம்.
அடுத்ததாக நாகமான் வீட்டிற்கு அடிமையாக கொண்ட வரப்பட்ட சிறுபெண்ணை குறித்து பார்ப்போம். தன்னை தன் நாட்டிலிருந்தும், பெற்றோர், உடன் பிறந்தோரிடமிருந்தும் பிரித்து வந்த கொடூரனான நாகமான் என்றுப் பார்க்காமல் அவனது குஷ்டம் நீங்க கரிசனையோடு வழி சொல்கிறாள். பெரியவர்களாகிய நமது மனநிலை எப்படியிருக்கிறது? சிறுபிள்ளையைப்போல நமக்கு தீமை செய்தவர்களை மன்னித்து, அவர்களது துனபத்தில் துணை நிற்கிறோமா? சிந்திப்போமா?
இறுதியாக. ஐந்து அப்பத்தையும், இரண்டு மீன்களையும் மனமுவந்து தனக்கென்று ஒன்றும் வைக்காமல் அப்படியே சீஷர்களின் கையில் கொடுத்த சிறுவனை  நம் கண்முன் நிறுத்தி கொள்வோம். அந்த ஐயாயிரம் புருஷர்களில் யாரேனும் ஒருவர் கூடவா தங்களுக்கென்று சாப்பிட ஏதேனும் கொண்டு வராமல் இருந்திருப்பார்கள்? ஆனால் உங்களிடத்தில் சாப்பிட ஏதேனும் உண்டா? என்று இயேசு கேட்டவுடன், தன்னிடமுள்ள அனைத்தையும் கொடுக்க முந்தி கொள்கிறது சிறுபிள்ளையின் குணம், சுயநலமற்ற செயல், நாளைய தினத்தை குறித்த கவலையற்ற மனது, இது நம்மிடமுண்டா?
பிரியமானவர்களே, சிறு பிள்ளையைப்போல மாறுவோம். ஆடு பகை என்றாலும், குட்டி கூடி வாழுமல்லவா? பிள்ளைகளை போல பகைமையை மறப்போம். வேதம் காட்டும் இந்த சிறுவர்கள் நமக்கு நல்ல உதாரணம். சின்ன பிள்ளைகள் கதை தானே என்று உதாசீனமாய விட்டு விடாமல், ‘நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்’ என்று சொன்ன கிறிஸ்துவின் வார்த்தையை பின்பற்றி, சிறு பிள்ளைகளை போல மாற தேவன் தாமே நமக்கு கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!
அன்புள்ள இயேசையா
உம் பிள்ளை நானையா
ஆனந்த ஒளி பிறக்கும்
வாழ்வெல்லாம் வழி திறக்கும்
காடு மேடு ஓடிய ஆடு
என்று என்னை வெறுத்திடவில்லை
நாடி என்னை தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்

ஜெபம்:

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் சிறுபிள்ளைகளை போல மாறும்படியாக எங்கள் உள்ளத்தை மாற்றும் தகப்பனே. தன்னிடத்தில் உள்ளதை அப்படியே கொடுக்கும் குணாதிசயமும், தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்யும் நல்ல குணமும், பெரியவர்கள், முதியோர்களின் நல்ல ஆலோசனையை தட்டாமல், கேட்பதும் போன்ற குணங்கள் எங்கள் வாழ்விலும் காணப்பட கிருபை செய்யும். பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கும்படியாக எங்கள் இருதயத்தை தாழ்த்தி, உமக்கு பிரியமாக வாழ கிருபை செய்யும்.   எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.