அற்புத அர்ப்பணிப்பு

அற்புத அர்ப்பணிப்பு

நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம். – (ரோமர் 14:8).
மண்ணில் மனிதராய் பிறந்த அனைவருக்குமே ஒரே ஒரு வாழ்வுதான். அந்த ஒரு வாழ்வை எப்படி வாழ்ந்து முடிக்கிறோம் என்பது  முக்கியமானது. தன்னை தேவனுக்கு அர்ப்பணித்த ஒரு இளைஞன் தனக்கு என்ன நேர்ந்தாலும், தன்னுடைய அர்ப்பணிப்பில் எத்தனை உறுதியாய் நிலைத்து இருந்தான் என்றும், அவன் வாழ்வின் நோக்கமும், முடிவும், நமது வாழ்வின் நோக்கத்தைக் குறித்து சிந்திக்க தூண்டும் என்றும் விசுவாசிக்கிறேன்.
அமெரிக்காவில் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்து ஐரோப்பாவிற்கு தன்னை மிஷனெரியாக அர்ப்பணித்தவர் ஜேம்ஸ் ஹில்லர். தன் இனம், பெற்றோர், ஆஸ்தி, அந்தஸ்து எல்லாவற்றையும் விட்டு மிஷனெரியாக ஐரோப்பாவிற்கு புறப்பட்ட போது அவருக்கு வயது 20தான்.  ஐரோப்பாவிலே இயேசுகிறிஸ்துவை பற்றி கூறினாலே பயங்கர சித்திரவதைதான். இருப்பினும் தேவன் மேல் அவர் வைத்த பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளியது. அவருடைய சுவிசேஷப்பணி ஆரம்பமானது.
எப்பக்கமும் எதிர்ப்பு. எதற்கும் அவர் அஞ்சவில்லை. ஒருநாள் எதிர்ப்பாளர்கள் வந்து அவரது இரு கால்களையும் துண்டித்தனர். இனி நீ எங்கும் போய் இயேசுவை குறித்து சொல்லக்கூடாது என்று எச்சரித்து சென்றனர். ஜேம்ஸோ மனம் தளராமல் கைப்பிரதிகளை எழுதி வெளியிட்டார். கைப்பிரதி ஊழியம் அநேகரது உள்ளத்தை மாற்றியது. இதையும் அறிந்த கிறிஸ்தவ எதிர்ப்பாளர்கள் எந்தவித இரக்கமும் இல்லாமல், அவரது இரு கைகளையும் துண்டித்தனர்.
எப்பக்கமும் நெருக்கப்பட்டும் ஒடுங்கி போவதில்லை என்ற விசுவாசத்தில்  உறுதியாய் நின்றார் ஜேம்ஸ். தனது இரண்டு கால்களையும், கைகளையும் இழந்த நிலையிலும், அவரது வைராக்கியம் மிகுந்த பிரசங்கத்தின் மூலமாக அநேகர் இரட்சிக்கப்பட்டனர். இதனால் கொதிப்படைந்த கிறிஸ்தவ எதிர்பபாளர்கள் இவனை என்ன செய்யலாம் என யோசித்து, அவரது நாவினை துண்டித்து விட்டனர். அவரால் இப்போது பேசவும் முடியாதபடி இருந்த அவரை ஒரு பொது இடத்தில் காட்சிப் பொருளாக வைத்து, கிறிஸ்துவை ஏற்று கொண்டவர்களுக்கு எச்சரிக்கையாக வைத்தனர்.
அநேகர் அவரது கை கால்கள் நாவு இல்லாத உடலை பார்த்தே இரட்சிக்கப்பட்டனர். அநேக இடங்களில் இரகசிய ஜெபக்கூட்டஙகள் ஆரம்பிக்கப்பட்டன. நாட்கள் நகர்ந்தன. ஜேம்ஸ் ஐரோப்பா தேசத்தில் இரத்த சாட்சியாய் மரித்தார். அப்பொழுது அவருக்கு வயது 30 தான். அவரது அவயவங்களற்ற ஜீவனற்ற உடல் இருந்த இடத்தில் ஒரு சிறிய வசன அட்டையிருந்தது. அதை எதிர்ப்பாளர்களின் தலைவன் கண்டெடுத்த வாசித்தான். அதில், ‘நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்பு கூறுகிறோனோ, அவ்வளவு குறைவாய் உங்களால் அன்பு கூறப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காக செலவு பண்ணவும், செலவு பண்ணப்படவும் விரும்புகிறேன்’ (2கொரிந்தியர் 12:15) என்ற வசனம் எழுதப்பட்டிருந்தது, அதை வாசித்த எதிர்ப்பாளன் தொடப்பட்டான். மனமுடைந்தான், இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டான்.
பிரியமானவர்களே, நமக்கு ஈவாக கிடைத்திருக்கும் இந்த ஒரு வாழ்க்கையை யாருக்காக அர்ப்பணிக்க போகிறோம்? ஒரு மரத்தை வெட்டிப்போட்டு, பின்னர் நான்கு நாட்கள் கழித்து அதை பார்த்தால் அது மீண்டும் பிழைத்து சிறு சிறு தளிர்கள் அதில் வளர்ந்திருக்கும். ஆனால் மனிதர்களாகிய நமக்கோ ஒரே வாழ்வுதான். நம்மை படைத்த தேவனுக்கு நாம் என்ன கொடுக்க போகிறோம், நம்மையா? நம் பொருளையா? நம் நேரத்தையா? நம் வாழ்க்கையையா? எங்கோ பிறந்து எங்கோ மரித்த ஜேம்ஸ் தனது வாழ்வை முன் பின் அறியாத ஜனங்களுக்காக கொடுத்தார். பிதாவும் தமது ஒரே பேறான குமாரனை நம்மேல் கொண்ட அன்பினால் மரிக்கக் கொடுத்தார். நமக்கு கொடுக்கப்பட்ட இந்த ஒரு வாழ்வை நாம் என்ன செய்ய போகிறோம்? கர்த்தர் எடுத்து பயன்படுத்தும்படியாக அவருடைய கரத்தில் அவருக்கென்று அர்ப்பணிப்போமா?
அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புத நாதா உம் கரத்தில்
அனைத்தும் உமக்கே சொந்தமென்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே எந்தன்
அனைத்தும் அர்ப்பணமே
என் முழு தன்மைகள் ஆவல்களும்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே

ஜெபம்:

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, தன்னை சித்திரவதை செய்தவர்களையும் நேசித்து, இறந்த பின்னும் அவர்களையும் கர்த்தருக்குள் வழிநடத்தின ஜேம்ஸ் என்ற ஊழியக்காரருக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்களுக்கு கிருபையாக நீர் கொடுத்த வாழ்வை உமக்கென்று அர்ப்பணிக்கிறோம். எங்களுக்காக உம்முடைய ஒரே பேறான குமாரனையே ஒப்புக்கொடுத்தீரே, எங்களையும் உமக்கென்று ஒப்புக்கொடுக்கிறோம். உமக்கென்று எடுத்து பயன்படுத்தும். எங்களால் இயன்றதை உமக்கென்று செய்ய எங்களை அர்ப்பணிக்கிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.