ஜலப்பிரவாகத்திலிருந்து தூக்கி விடுபவர்
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?. -(சங்கீதம் 56:3-4)
நாங்கள் இஸ்ரவேல் தேசத்திற்கு இரண்டு முறை பயணம் செய்யும்படி தேவன் கிருபை செய்தார். அங்கு சென்றிருந்தபோது, இயேசுகிறிஸ்து நடந்து திரிந்த புண்ணிய ஸ்தலங்களை நேரில் காணவும், அங்கு ஜெபிக்கவும் தேவன் பாராட்டின கிருபைகளை நினைத்து இன்றும் தேவனை துதிக்கிறோம். வேதத்தில் கூறப்பட்டிருந்த இடங்கள் ஒவ்வொன்றும் அருமையாக இருந்தது. இதில் சவக்கடலை சென்று பார்த்ததும் அற்புதமாக இருந்தது. சவக்கடலில் ஏராளமாய், தாராளமாய் தாது உப்புகள் நிறைந்திருப்பதால், அந்த கடலில் உயிரினங்கள் வாழ்வது என்பது கூடாத காரியம். மற்றும் அந்த கடலில் யார் போய் விழுந்தாலும் அவர்கள் மிதப்பார்கள். அங்கு தண்ணீரின் அடர்த்தி அதிகமாய் இருப்பதால் நீந்த தெரியாதவர்களும் அங்கு போய் மிதக்க முடியும்.
முதலாவது நான் சென்றிருந்தபோது, சபையாக சென்றிருந்தோம். எனக்கு நீந்த தெரியாது. நீந்த தெரிந்தவர்கள் அந்த கடலில் ஜாலியாக நீந்த ஆரம்பித்தார்கள். எனக்கு மிகவும் ஆசையாக இருந்தது. நானும் போய் அங்கு நீந்தலாம் என்று சென்றால், என்னால் முடியவில்லை. நான் மூழ்க ஆரம்பித்தேன். எல்லாரும் என்னை ‘நீங்கள் எந்த முயற்சியும் செய்யாமல் சும்மா விட்டு விடுங்கள் தானாகவே மிதப்பீர்கள்’ என்று சொன்னார்கள். நானும் முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் மீண்டும் மூழ்க ஆரம்பித்தேன். மட்டுமல்ல, அந்த தண்ணீர் கண்களில் பட்டு, சரியாக எரிய ஆரம்பித்தது. தண்ணீரை குடித்ததினால், தொண்டையில் சரியான எரிச்சல், மூக்கில் எரிச்சல். மூழ்க ஆரம்பித்தபோது, கண்களை இறுக மூடிக்கொண்டு, என்ன செய்வது என்று தெரியாமல் பயப்பட ஆரம்பித்தேன்.
நல்லவேளை அங்கு இப்படி மூழ்குபவர்களை காப்பாற்ற வேண்டி ஆட்களை வைத்திருக்கிறார்கள். அவர்கள் வந்து என்னை பிடித்து இழுத்து, காப்பாற்றினார்கள். எப்படியும் நான் மூழ்க போவதில்லை, ஆனால் பயம் என்னை பற்றி கொண்டபோது, யாரும் வந்து என்னை தூக்கி எடுக்க முடியவில்லை. அப்படியே உள்ளே போக ஆரம்பித்தேன். அந்த கடல் மிகவும் ஆழமாக இருந்தாலும், யாரும் மூழ்க முடியாது. ஆனால் நான் பயத்தில் கண்களை மூடிக்கொண்டு, உள்ளே செல்கிறேன் என்று நினைத்த நேரத்தில் அந்த பாதுகாவலர்கள் வந்து என்னை காப்பாற்றினார்கள்.
இரண்டாவது முறை சென்றிருந்தபோது, எப்படி மிதப்பது என்று கற்று கொண்டு மற்றவர்களை காட்டிலும் அதிக நேரம் மிதக்க தேவன் கிருபை செய்தார். அல்லேலூயா! அநேகர் தண்ணீரிலும், கடலிலும் மூழ்கும்போது, பயம் அவர்களை தாக்குகிறது. தங்களால் முடியாது என்று உணரும்போது, அவர்கள் எப்படியாவது கரையேற வேண்டும் என்று கைகளை கால்களை ஆட்டி, போராடுகிறார்கள். அதினால் அவர்களுக்கு உதவி செய்ய வருகிறவர்களையும் சேர்த்து தண்ணீரில் மூழ்கடித்து விடுகிறார்கள்.
நாம் கர்த்தரை நம்புவதும் இதை போலத்தான் இருக்கிறது. எல்லாரும் நீங்கள் எந்த முயற்சியும் செய்யாமல் சும்மா விட்டு விடுங்கள் என்று சொன்னாலும், நான் நானாக மிதக்க முயற்சித்தபோது, நான் மூழ்க ஆரம்பித்தேன். நாம் நம் கவலைகளையும் பயத்தையும் கர்த்தர் பேரில் வைத்து நீங்கள் பொறுமையாக இருங்கள் என்று நமக்கு சொல்லப்பட்டாலும், நாமாக அதிலிருந்து மீளும்படியாக முயற்சி செய்கிறோம். ஆனால் நம் முயற்சி நமக்கு எந்த உதவியும் செய்யப்போவதில்லை.
சங்கீதக்காரனாகிய தாவீது, ‘உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்’ (சங்கீதம் 18:16) என்று எழுதுகிறார். அவர் என்ன தண்ணீரில் மூழ்க இருந்தாரா? இல்லை, அவர் உலக கவலைகளிலும், சத்துருக்களின் போராட்டங்களிலும், துக்கத்திலும், துன்பத்திலும் இருந்தபோது, கர்த்தரை நோக்கி, ‘என்னால் முடியாது ஆண்டவரே, நீரே பொறுப்பெடுத்து கொள்ளும்’ என்றபோது, ஆண்டவர் அவரை அந்த பிரச்சனைகள் போராட்டங்களிலிருந்து தூக்கி எடுத்ததையே அவர் குறிப்பிடுகிறார்.
கடலைப்போல எனக்கு அதிக பாரங்கள், அதிக பிரச்சனைகள், அதிலிருந்து எப்படி மீள்வது, அவைகள் என்னை மூழ்கடித்து விடும் போலிருக்கிறது என்று அங்கலாய்க்கிறீர்களோ? ‘நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?’ என்று தாவீதை போல கர்த்தரையே நாம் நம்பி இருப்போம். அவர் தமது கரத்தை நீட்டி, ஜலப்பிரவாகம் போன்ற பிரச்சனைகளிலிருந்து நம்மை தூக்கி விடுவார். ஆமென் அல்லேலூயா!
யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
எரிகோ கோட்டை முன்னே வந்தாலும்
பயமும் இல்லை, கலக்கம் இல்லை
மீட்பர் நம்முடனே
ஓசன்னா ஜெயமே ஓசன்னா ஜெயம் நமக்கே
ஓசன்னா ஜெயம் நமக்கே
எரிகோ கோட்டை முன்னே வந்தாலும்
பயமும் இல்லை, கலக்கம் இல்லை
மீட்பர் நம்முடனே
ஓசன்னா ஜெயமே ஓசன்னா ஜெயம் நமக்கே
ஓசன்னா ஜெயம் நமக்கே
ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, துன்பங்களும், பாடுகளும் எங்களை கடலை போல சூழ்ந்து கொள்ளும்போது, அதிலே அமிழ்ந்து விடுவோமோ என்று பயப்படும் நாளில், நாங்கள் உம்மையே நம்பும்போது, எங்களை அதிலிருந்து மீட்டு விடுகிற நல்ல தெய்வமே உம்மை துதிக்கிறோம். எங்களது பிரச்சனைகளை உம்முடைய பாதத்தில் வைத்து விடுகிறோம். நீரே விடுதலை தருவீராக. நீரே எங்களை தூக்கி விடுவீராக. உம்மையே நாங்கள் நம்புகிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.