நெடுங்காலமாய் காத்திருத்தல்

நெடுங்காலமாய் காத்திருத்தல்

நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது. – (சங்கீதம் 97:1).
அன்று வகுப்பறையில் ஒரே கலகலப்பு. உள்ளே நுழைந்த ஆசிரியர், ஒவ்வாரு பிள்ளைக்கும் ஒருமரக்கன்று கொடுத்தார். அதை வீட்டில் நட்டு தினமும் அதை பராமரிக்குமாறும் கூறினார். ராஜாவுக்கும் ஒரு மாங்கன்று கொடுக்கப்பட்டது. அவன் வீட்டிற்கு வந்து மகிழ்ச்சியோடு தன் பெற்றோரிடம் காண்பித்து அதை வீட்டிற்கு பின்னாலுள்ள தோட்டத்தில் கவனமாக நட்டான். சுற்றி வேலி அடைத்தான். வாரம் ஒரு முறை உரம் போட்டான். தினமும் தவறாமல் தண்ணீர் ஊற்றினான். காலை எழுந்தவுடன் அம்மரக்கன்று இலை விட்டுள்ளதா என தினமும் ஆராய்ச்சி செய்வான்.
மாதங்கள் உருண்டோடின. அவன் அடுத்த வகுப்பிற்கு சென்றான். மறுநாள் செடியை பார்த்த ராஜாவிற்கு கடும் விரக்தி ஏற்பட்டது. நான் எவ்வளவு கவனமாக வளர்த்தேன், அதை நட்டு எவ்வளவு மாதமாகி விட்டது, நானும் பெரிய வகுப்பிற்கு சென்று விட்டேன். ஆனால் இந்த மாமரம் காய்க்கவே இல்லையே, இனி நான் இதற்கு தண்ணீர் ஊற்றப்போவதுமில்லை, உரம் போடப்போவதுமில்லை என்று புலம்பினான்.
அவனது அம்மா அவனருகில் அமர்ந்து பொறுமையாக எடுத்து கூறினார்கள், ‘மாமரம் காய் காய்க்க பத்திலிருந்து பன்னிரெண்டு வருடம் ஆகும் மகனே, அதுவரை நாம் பொறுத்திருக்கத்தான் வேண்டும். ஒவ்வொன்றிற்கும் ஒரு காலமுண்டு’ என கூறினார்கள். அவனுக்கு ஏதோ புரிந்தது போலிருந்தது. நாமும் அநேக நேரங்களில் இந்த சிறுவனைப்போல எந்த ஒரு காரியத்திற்கும் பொறுத்திருக்க முடியாமல் அவசரப்படுகிறோம். நான் ஒழுங்காக வேதம் வாசிக்கிறேன், ஆலயம் செல்கிறேன், கர்த்தருக்கு பிரியமான வாழ்வு வாழ்கிறேன், ஆனால் இன்னும் என் ஜெபத்திற்கு பதில் வரவில்லையே, என அநேக நேரங்களில் அங்கலாய்க்கிறோம். இனி நான் ஜெபிக்க போவதே இல்லை, என்று கூட விரக்தியில் சொல்லலாம்.
ஆனால் வேதம் என்ன சொல்லுகின்றதென்று பாருங்கள், ‘நீதிமானுக்காக வெளிச்சமும், மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது’. ஆம் தேவன் உங்களுக்குரிய நன்மைகளை முன்குறித்து விட்டார். அவற்றை நமக்கென்று விதைத்து விட்டார். அதை எவரும் தடை செய்ய முடியாது, ஆனால் அந்த மகிழ்சசி என்னும் விதை நமக்கு பலன் தரும் வரை நாம் பொறுமையோடு காத்திருக்க வேண்டும். வாக்குதத்தத்தின் பிள்ளையை பெற வாக்குதத்தம் பெற்ற பிறகும், ஆபிரகாம் 25வருடம் பொறுமையோடு காத்திருக்கவில்லையா? ‘நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்’ (நீதிமொழிகள் 13:12) என்று வேதம் கூறுகிறது. ஆம், நீங்கள் நெடுங்காலமாய் காத்திருக்கிறீர்கள் என்பதை தேவன் அறிவார். அதை அவர் ஏற்ற வேளையில் கொடுக்கும்போது நிச்சயமாகவே அது ஜீவ விருட்சத்தை போல நல்ல பலனை கொடுப்பதாக இருக்கும். அல்லேலூயா!
அப்படி காத்திருக்கும் காலம் நமக்கு விலையேறப்பெற்ற காலமாகும். அதில் நாம் தேவன் மேல் வைத்துள்ள அன்பின் ஆழத்தை அவர் கண்டு கொள்ள ஏதுவாகும். காத்திருக்கும் நாட்களில் சாத்தானுக்கு இடம் கொடுத்தோமானால் அவன் நம்மை இதை காரணம் காட்டியே தேவனை விட்டு பிரித்து விடுவான். ஆகவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பிரியமானவர்களே, எவ்வளவு காலம் காத்திருப்பது என சோர்ந்து போகாதீர்கள், உங்களது ஜெபத்திற்கும் கண்ணீருக்கும், கிரியைக்கும் ஏற்ற காலம் வரும்போது, அத்தனை பலனையும் காண்பீர்கள். தேவ சமுகத்தில் விட்ட ஒரு சொட்டு கண்ணீரும் வீணாக போகாது. அவை சர்வ வல்ல தேவனுடைய கணக்கில் இருக்கிறது. ஆகவே இதுவரை நீதியாய் வாழ்ந்து என்ன பயன்? ஜெபித்து, கடவுளுக்கு பிரியமாய் வாழ்ந்து என்ன பயன்? என்று இருதயத்திலும் நினைக்காதீர்கள். நிச்சயமாகவே முடிவு உண்டு. உங்கள் நம்பிக்கை வீண் போகாது. ஆமென் அல்லேலூயா!
ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை
சோர்ந்துபோன நேரம் என்னை தாங்கிக்கொண்ட கிருபை
தோல்வியான நேரம் கலங்கி நின்ற வேளை
திகைத்து நின்றபோது தேடிவந்த கிருபை
மனமுடைந்த நேரம் நொறுங்கிப்போன வேளை
கதறியழுதபோது அணைத்துக்கொண்ட கிருபை

ஜெபம்:

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த நாளிலும், அநேக நாட்களாக காத்திருந்து, கர்த்தரிடத்திலிருந்து இன்னும் பதில் வரவில்லையே என்று சோர்வோடு இருக்கும் ஒவ்வொருவரின் ஜெபத்திற்கும் பதிலை தாருமையா. நிச்சயமாகவே ஒரு நாள் எங்கள் தேவன் எங்களுக்கு ஏற்ற பதிலை கொடுக்க போகிற தயவிற்காக நன்றி. எங்கள் நம்பிக்கையே நீர் தானையா, அந்த நம்பிக்கையை நாங்கள் இழந்து போகாதபடி, சீக்கிரமாய் நல்ல பதிலை கொடுத்து எங்களை ஆதரிக்கும்படியாக உம்மிடத்தில் மன்றாடுகிறோம்.  எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.