ஜெபத்தை கேட்பவர்

ஜெபத்தை கேட்பவர்

காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ? – (சங்கீதம் 94:9).
ஒரு போதகர் தன்னுடைய அலுவலகத்தில் ஒரு சனிக்கிழமை அதிக நேரம் வேலை செய்து விட்டு, இரவு பத்து மணிக்கு வீட்டிற்கு போகுமுன் தன் மனைவியை கூப்பிட்டு ‘இப்போதுதான் புறப்படுகிறேன்’ என்று சொல்வதற்கு போனில் தன் மனைவியை கூப்பிட்டார். ஆனால் அவருடைய மனைவி போனை எடுக்கவேயில்லை.
ஏன் போனை எடுக்கவில்லை என்று நினைத்தவாறே, எல்லாவற்றையும் எடுத்து கொண்டு, மீண்டும் கூப்பிடுவோம் என்று நினைத்து திரும்பவும் கூப்பிட்டார். அப்போது அவரது மனைவி எடுத்தார்கள். போதகர், ‘ஏன் நான் முன்பு கூப்பிட்டபோது நீ எடுக்கவில்லை’ என்று கேட்டார். அதற்கு மனைவி, போன் அடிக்கவேயில்லையே’ என்று கூறினார்கள். அதன் பின் அவர் வீட்டிற்கு சென்று, பின்னர் அதை குறித்து மறந்து விட்டார்கள்.
அடுத்த திங்கட்கிழமை போதகரின் அலுவலகத்திற்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய மனிதர் போதகரிடம், ‘ஏன் என்னை சனிக்கிழமை போனில் கூப்பிட்டீர்கள்’ என்று கேட்டார். அப்போது போதகருக்கு அந்த மனிதர் என்ன பேசுகிறார் என்று புரியவில்லை. அந்த மனிதர், ‘என் வீட்டு போன் அதிக நேரம் ஒலித்து கொண்டே இருந்தது, ஆனால் நான் போனை எடுக்கவில்லை’ என்று கூறினார். அப்போதுதான் போதகருக்கு புரிந்தது, தான் சனிக்கிழமை தன் மனைவியை அழைத்தது தவறாக இந்த மனிதருக்கு போய் விட்டது என்று. உடனே அந்த மனிதரிடம் ‘தயவு செய்து என்னை மன்னித்து கொள்ளுங்கள். நான் தவறாக உங்கள் நம்பரை அடித்து விட்டேன்’ என்று கூறினார். அப்போது அந்த மனிதர், ‘பரவாயில்லை, நான் என்ன நடந்தது என்று உங்களுக்கு சொல்கிறேன்’ என்று ஆரம்பித்தார்.
‘நான் சனிக்கிழமை அன்று என் பிரச்சனைகளுக்கு முடிவு தெரியாததால், தற்கொலை செய்து கொள்ள நினைத்து, அதற்கென்று ஆயத்தப்பட்டு கொண்டிருந்தேன்.
அதற்கு முன்பாக, நான் ஒரு சிறு ஜெபம் செய்து, ஆண்டவரே நீர் இருப்பது உண்மையானால், நான் தற்கொலை செய்யக்கூடாது என்று நீர் நினைப்பீரானால், இப்போதே எனக்கு ஒரு அடையாளத்தை காட்டும் என்று கேட்டு கொண்டேன். அதை நான் சொல்லி முடிக்கவும், இந்த போன் வரவும் சரியாக இருந்தது.
என்னுடைய காலர் ஐடியில் (Caller Id) யார் என்று பார்த்தால், சர்வவல்லதேவன் என்று இருந்தது. நான் பயத்தில் உறைந்து போய், போனை எடுக்கவில்லை’ என்று கூறினார்.
அவருடைய போனில் Caller Id – யில் சர்வவல்ல தேவன் என்று பெயர் ஏன் வந்திருந்ததென்றால், அந்த போதகரின் சபையின் பெயர்,  சர்வ வல்ல தேவனின் கூடாரம் என்பதாகும்.
நம் தேவன் ஜெபத்தை கேட்கின்றவர். காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ? என்று வேதம் கூறுகின்றது. அவர் நம் காதை உண்டாக்கியிருப்பதால், நிச்சயமாக அவருக்கு நாம் கதறும் சத்தம் கேட்கும். அவர் நம் கண்களை உண்டாக்கியிருப்பதால், நாம் கண்ணீர் விட்டு புலம்புவதை அவருடைய கண்கள் காணும். அவர் ஜீவனுள்ள தேவன்.
மாம்சமான யாவரும் அவரிடத்தில் வருவார்கள். ‘உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மைநோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்’ (சங்கீதம் 22:24) என்று வேதம் கூறுகிறது. நாம் படுகிற உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாத தேவன். எகிப்து தேசத்தில் கர்த்தருடைய ஜனம் அடிமைகளாக இருந்து படுகிற பாடுகளை கண்ட தேவன், ‘எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்’ (யாத்திராகமம் 3:7) பார்க்கவே பார்த்து, கூக்குரலை கேட்டு, வேதனைகளை அறிந்த தேவன், பதிலை அனுப்பினார். அவர்கள் தேவனை நோக்கி கூப்பிட கூப்பிட பதில் வந்து கொண்டிருந்தது.
ஒருவேளை வெளியே தேவன் ஒன்றுக்குமே பதில் கொடாதது போல தோன்றலாம். ஆனால் அங்கே மோசே பிறக்கிறார். இஸ்ரவேலின் இரண்டு வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொலை செய்து, இரட்சகர் தோன்றாவண்ணம் தடை செய்ய நினைத்த சத்துருவின் திட்டங்கள், தேவன் மோசேயை கொண்டு செய்ய நினைத்த காரியங்களை தடை செய்ய முடியவில்லை. இறுதியாக இஸ்ரவேலரின் ஜெபத்திற்கு தேவன் கொடுத்த பதிலாக மோசே வளர்ந்து, அவர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்தார். காலங்களானாலும் பதில் ஒரு நாள் நிச்சயமாக வந்தது.
நீங்கள் படுகிற பாடுகளையும், உங்கள் இருதயத்தின் வேதனைகளையும் அறிந்த தேவன் ஒருவர் உண்டு. ஒருவேளை பதில் உடனே வராமலிருக்கலாம், ஆனால் நிச்சயமாக ஒரு பதில் உண்டு. நீங்கள் தேவன் மேல் வைத்த நம்பிக்கை ஒருநாளும் வீணாகாது. கர்த்தர் உங்களுக்கு பதிலை கொடுக்கும்போது, நீங்களும் தாவீது ராஜாவோடு சேர்ந்து, என் புலம்பலை ஆனந்த களிப்பாக மாறப்பண்ணினீர் என்று பாடுவீர்கள். ஆமென் அல்லேலூயா!
கண்ணீரை காண்கிறார் – உன்
கதறலை கேட்கிறார்
வேதனை அறிகிறார்
விடுதலை தருகிறார்
நம் இயேசு நல்லவர்
ஒருபோதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்

ஜெபம்:

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நாங்கள் படுகிற பாடுகளையும், எங்கள் இருதயத்தின் வேதனைகளையும் அறிந்த தேவனாக நீர் இருப்பதற்காக உமக்கு நன்றி. ஏற்ற வேளையில் எங்களுக்கு நீர் பதிலை கொடுக்க போகிறதற்காக உமக்கு ஸ்தோத்திரம். எங்களது நம்பிக்கையாக நாங்கள் உம்மையே சார்ந்து கொள்கிறோம். எங்களது கண்ணீரை துடைப்பீராக. அதிசயங்களை செய்வீராக. எங்கள் புலம்பலை ஆனந்த கண்ணீராக மாற்றுவீராக.  எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.