ஜாக்கிரதையுள்ள நினைவுகள்

ஜாக்கிரதையுள்ள நினைவுகள்

அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான். – (நீதிமொழிகள் 23:7).
ஒருவனுடைய இருதயம் அவனை எப்படி நடத்துகிறதோ அப்படியே அவனும் இருக்கிறான். ஒருவன் தவறானவனாக நடப்பான் என்றால் முதலாவது அவனது இருதயம் அவனை அந்த வழியில் நடத்தும்போது அவன் அந்த தவறை செய்கிறவனாக இருப்பான். நல்லவனாக நடப்பவனுடைய இருதயம் அவனை நல்வழியில் நடத்தும்போது, அவனும் நல்ல காரியங்களை செய்கிறவனாக இருப்பான்.  ஒருவன் தன்னை மிகவும் தாழ்ந்தவனாகவும், மற்றவன் தன்னை மிகவும் உயர்ந்தவனாகவும் நினைத்து கொள்வது அவனது இருதயத்திலிருந்து வரும் சிந்தனைகளே ஆகும்.
கோலியாத் என்னும் காத் ஊரை சேர்ந்த இராட்சதன், பெலிஸ்தருக்கு தலைமையாய் இருந்து, இஸ்ரவேலருக்கு விரோதமாக யுத்தம் செய்ய தினமும் காலையிலும், மாலையிலும் நாற்பது நாள் வந்து நின்று, ‘உங்களில் ஒருவனைத் தெரிந்துகொள்ளுங்கள். அவன் என்னிடத்தில் வரட்டும். அவன் என்னோடு யுத்தம்பண்ணவும் என்னைக் கொல்லவும் சமர்த்தனானால், நாங்கள் உங்களுக்கு வேலைக்காரராயிருப்போம்; நான் அவனை ஜெயித்து அவனைக் கொல்வேனானால், நீங்கள் எங்களுக்கு வேலைக்காரராயிருந்து, எங்களைச் சேவிக்கவேண்டும் என்று சொல்லி’ (1 சாமுவேல் 17:8-9) என்று தன்னுடைய பெலத்தையும் உருவத்தையும் நம்பி, அதன் மூலமாக அவன் இஸ்ரலேலை பயமுறுத்தி கொண்டு இருந்தான்.
இஸ்ரவேலர் கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், அவர்களின் அரசனாயிருந்த சவுல் எல்லாரும் அவனுக்கு கீழ் நிற்கத்தக்கதான உயரத்தை உடையவன். தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணியிருந்தால் ஒரே நாளில் தேவன் கோலியாத்தை முறியடித்து, பெலிஸ்தியரை இஸ்ரவேலரின் கைகளில் ஒப்புக் கொடுத்திருப்பார். ஆனால் அவர்களோ, கோலியாத்திற்கு பயந்து, தினமும் அவன் தங்களை நிந்திக்கிறதை கேட்டவர்களாக, அவனை விட்டு பயந்து, ஓடிப்போகிறவர்களாகவே இருந்தார்கள். யாரும் துணிவோடு அவனை எதிர் கொள்ள முன்வரவில்லை. அவர்கள் அனைவரும் இருதயத்தில் கோழையர்களாகவே இருந்தார்கள்.
இச்சமயத்தில தன் சகோதரர்களை போய் பார்த்து வர சொன்ன தன் தகப்பனின் கட்டளையின் பொருட்டு, அவர்களை காண வந்திருந்த தாவீதுக்கு கோலியாத்தின் சவால் காதில் விழுந்தது. மற்றவர்களுக்கு ஐயோ அவன் வந்து விட்டானே என்ற பயம், ஆனால் தாவீது அவனுடைய சவாலை கேட்டபோது, ‘ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்தப் பெலிஸ்தன் எம்மாத்திரம்’ (1 சாமுவேல் 17:26) என்று தேவன் பேரில் வைராக்கியமாய் இருந்தான். மற்றவர்களுக்கும், தாவீதிற்கும் இருந்த இருதயத்தின் நினைவுகளின் வித்தியாசத்தை பாருங்கள்!
தாவீதினுடைய நினைவுகள் தேவனை பற்றியிருந்தது. தான் நம்பியிருக்கிற தேவனால் எல்லாம் கூடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவனுக்குள் இருந்தது. ‘ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்’ (நீதிமொழிகள் 23:5) என்று வேதம் கூறுகிறது. ஜாக்கிரதையாய், தன் தேவனை நிந்தித்தவனை அவன் தன்னுடைய ஜீவனுள்ள தேவனுக்கு முன் எம்மாத்திரம் என்று நினைத்தவனாக அவனை ஈட்டிகளோடும், தடிகளோடும் அல்ல, தன் தேவனுடைய துணையோடு எதிர்க்க தாவீது துணிந்தான்.
அந்த கோலியாத், தன் தலையின்மேல் வெண்கலச்சீராவைப் போட்டு, ஒரு போர்க்கவசம் தரித்துக்கொண்டிருப்பான்; அந்தக் கவசத்தின் நிறை ஐயாயிரம் சேக்கலான வெண்கலமாயிருக்கும் (1 சாமுவேல் 17:5) .
தன் தலையின் மேல் வெண்கலச்சீராவை அணிந்திருந்தபடியால், அவன் தலையில் ஒரு சிறு இடம் தவிர மற்ற தலை பூராவும் தலைச்சீராவினால் மூடப்பட்டிருந்தது. தாவீதுக்கு எப்படி தன்னுடைய கவணால் அடித்தால் அது சரியாக போய் அவன் நெற்றியில் படும் என்ற கவலை இருக்கவில்லை. அவருடைய இருதயம் தன் தேவனை நிந்தித்த இந்த பெலிஸ்தனை எப்படியாவது கொல்ல வேண்டும், அதற்கு தன் தேவன் உதவி செய்வார் என்பதாகவே இருந்தது. அதன்படி தன் கையிலிருந்த ஐந்து கூழாங்கற்களில் ஒன்றை எடுத்து, சுழற்றி அடித்தபோது, அது சரியாக வெண்ச்சீராவின் இடையில் இருந்த நெற்றியில் போய் பதிந்தது. கோலியாத் அப்படியே சரிந்து விழுந்தான். மரித்து போனான். அல்லேலூயா!
நாற்பது நாட்கள் தங்களை நிந்தித்தவனை எதிர்க்க தகுதி இல்லாமல் போன இஸ்ரலேரின் நினைவுகள், ‘ஓ, அவன் மிகவும் பெரியவன், இராட்சதன், பலத்தவன், போர் வீரன், அவனை எதிர்க்க எங்களுடைய அத்தனை பெரிய சேனைகளாலும் முடியாது’ என்று நினைத்து ஒன்றுமே செய்யாமல், அவனுக்கு முன்பாக கலங்கி கொண்டிருந்தார்கள். ஆனால், தாவீதிற்கு மாத்திரம் எப்படி அந்த முழு சேனையும் சாதிக்க முடியாததை ஒருவனாக சாதிக்க முடிந்தது? ‘தாவீது பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும் ஈட்டியோடும் கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலே உன்னிடத்தில் வருகிறேன். கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக் கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார்’ என்றான் (1 சாமுவேல் 17:45,47). ஆம், தாவீது தன் தேவன் தன்னோடு இருப்பதை நன்கு அறிந்திருந்தார். அவருடைய இருதயத்தில் தன் தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றும், அதனால் தன்னாலும் எல்லாம் கூடும் என்றும் உறுதியான விசுவாசம் இருந்தது.
பிரியமானவர்களே, ஒருவேளை ஒரு கூட்டத்து மக்கள் சொல்லலாம், நம்மால் இந்த காரியம் எதுவும் செய்ய முடியாது என்று! நீங்கள் அவர்கள் கூட்டத்தில் இருக்கிறீர்களா அல்லது என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு என்று கிறிஸ்துவின் மேல் வைராக்கியமாய் இருக்கிறீர்களா?
நான் ஒரு புழு, நான் ஒரு பூச்சி, நான் ஒரு குப்பை என்று சொல்லி கொண்டிருந்தால் அப்படியே தான் நாம் இருப்போம். வேதம் நம்மை ஆசாரியர்கள் என்றும் ராஜாக்கள் என்றும் அழைக்கும்போது, நம் எண்ணத்தின் சிந்தனைகளை மாற்றி, என் தேவனால் நான் இராஜாவாய் இருக்கிறேன் என்றும்,  அவருக்குள் என்னால் எதையும் சாதிக்க முடியும் என்றும் ஆழமான விசுவாசம் நமக்குள் வர வேண்டும். நம் சிந்தனைகள் மற்றும் நினைவுகள் நம்மை தேவனுக்குள் பெரியவர்களாக மாற்றும்போது, நாமும் அப்படிப்பட்டவர்களாய் மாறுவோம். அப்படிப்பட்டவர்களாய் நம்மை தேவன் தாமே மாற்றுவாராக! ஆமென் அல்லேலூயா!

எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கிறார்
உலக மனிதர்கள் எனக்கு எதிராக
என்ன செய்ய முடியும்?

தோல்வி இல்லை எனக்கு
வெற்றி பவனி செல்வேன்
தோல்வி இல்லை நமக்கு
வெற்றி பவனி செல்வோம்

ஜெபம்:

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்களுக்கு உதவிடும் நல்ல தேவன் எங்களுக்குள் இருக்கிறபடியால், யாரும் எங்களை அசைக்க முடியாது என்கிற தைரியம் எங்களுக்குள் எப்போதும் இருக்கவும், அதினால் நாங்கள் உலகத்தை மேற்கொள்ளவும் கிருபையை தாரும். எங்களை குறித்து சோர்வான எண்ணங்களை வைத்து கொண்டு, சோர்ந்து போய் விடாதபடி, எங்களை பெலப்படுத்துகிற கிறிஸ்துவால் எல்லாவற்றையும் செய்யும்படி எழுந்து நிமிர்ந்து நிற்க கிருபை செய்யும்.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.