கர்த்தரை கனப்படுத்துவோம்

கர்த்தரை கனப்படுத்துவோம்

என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன். – (1: சாமுவேல் 2:30).
எரிக் லிட்டில் ஒரு புகழ்பெற்ற விளையாட்டு வீரர். ஒலிம்பிக் விளையாட்டுகளில் 100 மீட்டர் தடகளப்போட்டியில் ஓடும் தகுதியை பெற்றிருந்தார். ஆயினும் இறுதி சுற்றிற்கு தகுதி பெற செய்யும் அரையிறுதி சுற்று ஞாயிற்று கிழமை நடைபெறும் என்பதை அறிந்தவுடன், தான் அந்த ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொளள் போவதில்லை என்று தன் மேலாளரிடம் கூறினார். கர்த்தருடைய நாளை கனவீன்ப்படுத்துவது கர்த்தரையே கனவீனப்படுத்துவதற்கு ஒப்பானது என அவர் எண்ணினார். இதினிமதித்தம் விமர்சனங்கள் அவர் மேல் மலை போல குவிந்தன. தனது நாட்டின் புகழை கெடுத்தவர், குறுகிய மனப்பான்மையுடையவர், மத வெறி பிடித்தவர், பிறரது மகிழ்ச்சியை கெடுத்தவர் என பலவாறு அவதூறுகளை அவர் மேல் சாற்றினர். என்றாலும் தனது முடிவை அவர் மாற்றி கொள்ளவில்லை. பின்பு 220 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் அனைத்து சுற்றுகளும் வார நாட்களில் குறிக்கப்படடிருப்பதை கண்டு, அதில் கலந்து கொள்ள அனுமதி கோரினார் முதல் சுற்று, இரண்டாவது சுற்று, என அனைத்திலும் வெற்றி பெற்றார். இறுதி சுற்று நாளும் வந்தது. ஓடுவதற்கென்று தனது இடத்தை நோக்கி சென்றபோது, யாரோ ஒருவர் ஒரு சிறு துண்டுத்தாளை அவருடைய கரத்தில் திணித்தார். அதை பிரித்து பார்த்தபோது, ‘என்னை கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்’ என அதில் எழுதியிருந்தது, அன்று அவர் வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது மட்டுமன்றி புதிய உலக சாதனையையும் நிகழ்த்தினார்.
பாருங்கள், 100 மீட்டர் ஓடவே பழகிய அவரது கால்களை 220 மீட்டர் ஓட செய்து வெற்றி பெற செய்தார் தேவன். காரணம் என்ன? அவரது வாழ்வில் முதலாவது தேவன் இருந்ததே ஆகும். ஆம், தானியேலும அவன் நண்பர்களும் தேவனுடைய வார்த்தையை விட்டு கொடுக்காமல் வைராக்கியமாய் வாழ்ந்ததால் பாபிலோனிய நாட்டின் அரசின் மேன்மையான பதவியை அடைந்தனர். தேவனுக்கு முன்பாக பாவம் செய்ய துணியாது தனது தூய வாழ்வால் தேவனை கனப்படுத்தின யோசேப்பு பஞ்சத்தின்போது, தனது மக்களுக்கும் பாதுகாவலானக உயர்த்தப்பட்டார். தேவனுக்கு உண்மையுள்ளவனாக மோசே வாழ்ந்ததால் இஸ்ரவேல் மக்களை வழி நடத்தும் தலைவனாகி தேவனால் கனப்படுத்தப்பட்டார். எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுகிறிஸ்து தமது பிதாவை கனம் பண்ணினார். எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் அவருக்கு கொடுக்கப்பட்டது.
பிரியமானவர்களே, ஆண்டவருடைய வார்த்தையை விட்டு கொடுக்க வேண்டும் என்னும் வற்புறுத்தல்களுக்கு இணங்காமல் உறுதியோடு நிற்பதும் கர்த்தரை கனம் பண்ணக்கூடிய வழியாகும். நமது அலுவலகத்திலோ அல்லது கிறிஸ்துவை ஏற்று கொள்ளாத உறவினர்கள் முன்பாகவோ வேதத்தை விட்டு கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரும்போது, கர்த்தரிடத்தில் உறுதியாக நின்று நம் வாழ்வில் மூலம் தேவனை கனப்படுத்துவோமென்றால் தேவனும் நம்மை அநேகருடைய கண்களுக்கு முன்பாக நம்மை கனப்படுத்துவது அதிக நிச்சயம்.!
சில வேளைகளில் பெரிய காரியங்களில் தேவனை கனப்படுத்திவிட்டு, சிறு காரியங்களில் நாம் விட்டு விடுவது உண்டு. ஆலயத்திற்கு செல்லும்போது, சரியானபடி உடை அணிந்து செல்ல வேண்டும். பெண்கள், டீ ஷர்ட்டும், ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்து செல்வதை கண்டிருக்கிறேன். என் மனம் புண்பட்டதுண்டு. அதே போல ஆண்களும், டீ ஷர்ட்டும், ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்து ஆலயத்திற்கு செல்கிறார்கள். நாம் சந்திக்க போவது, நம்மை படைத்த சர்வ வல்லமையுள்ள தேவனை, அவரை காண செல்லும்போது, எப்படி இந்த மாதிரியான உடைகளை அணிந்து செல்வது? மட்டுமல்ல, இராப்போஜனமும் அப்படியே எடுக்கிறார்கள்! தயவு செய்து நாம் மாற வேண்டும்! தேவனை அவருக்குரிய பரிசுத்த அலங்காரத்தோடு அவரை தொழுது கொள்ள வேண்டும். நாம் வெளியே செல்லும்போது எந்த மாதிரியான உடையையும் அணிந்து கொள்ளலாம், ஆனால் தேவாலயத்திற்கு வரும்போது, நடையையும் உடையையும் கவனித்து, அதன் மூலம் தேவனை கனப்படுத்த வேண்டும்! என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன் என்று தேவன் வாக்களித்து இருக்கிறபடியால், அவரை கனம் பண்ணி, அவரால் நாம் கனத்தை பெற்று கொள்வோமாக! ஆமென் அல்லேலூயா!
கனத்திற்குரியவரே உம்மை ஆராதனை செய்கிறோம்
மகிமைக்கு பாத்திரரே உம்மை ஆராதனை செய்கிறோம்
ஆராதனை எங்கள் தேவனுக்கே
ஆராதனை எங்கள் கர்த்தருக்கே
ஆராதனை ஆராதனை ஆராதனை

ஜெபம்:

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எல்லா கனத்திற்கும், மகிமைக்கும் பாத்திரரே, உம்மை உயர்த்துகிறோம் ஐயா. உம்மை கனம் பண்ணுகிறவர்களை கனம் பண்ணுகிற தேவன் நீர் ஐயா. நாங்கள் எதற்கும் தகுதி இல்லாதவர்களாக இருந்தும், நீர் எங்களை உயர்த்தி வைத்திருக்கிற கிருபைக்காக உமக்கு நன்றி. எங்கள் வாழ்வின் எல்லா காரியங்களிலும் நாங்கள் உம்மை முதன்மையாக வைத்து கனப்படுத்தவும், உமக்கே முதலிடம் தந்து ஜீவிக்கவும் உணர்த்தும். எங்கள் நடை உடை பாவனை எல்லாவற்றலும் உம்மையே உயர்த்த கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.