நேபுகாத்நேச்சாரின் சொப்பனம் பாகம் -1

நேபுகாத்நேச்சாரின் சொப்பனம் பாகம் -1

நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் இரண்டாம் வருஷத்திலே, நேபுகாத்நேச்சார் சொப்பனங்களைக் கண்டான்; அதினால் அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய நித்திரை கலைந்தது. – (தானியேல் 2:1).
இஸ்ரவேலர் தங்கள் தேவனை மறந்து, அந்நிய தேவர்களை பற்றி கொண்ட போது, அவர் அவர்களை மனம் திரும்பும்படி பல தீர்க்கதரிசிகளை கொண்டு எச்சரித்தும், அவர்கள் திரும்பாதபோது, பாபிலோனியரின் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தார். அவர்கள் வந்து, எருசலேமை கைப்பற்றி, ஆலயத்தின் பொன்னும் வெள்ளியும் எல்லா பொருட்களையும் எடுத்து கொண்டதுமன்றி, நாட்டின் மக்களை அடிமைகளாக கொண்டு போயினர். அப்பொழுது தானியேலும், அவருடைய மற்ற மூன்று நண்பர்களாகிய சாத்ராக், மேஷாக், ஆபெத்நெகோ ஆகிய நான்கு பேரும் பாபிலோனிய அரசாங்கத்தில் யூத அடிமைகளாக இருந்தார்கள். அந்த சமயத்தில் பாபிலோனிய சக்ரவர்த்திக்கு ஒரு கனவு வந்தது. அந்த கனவை கண்டபோது, அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய தூக்கம் கலைநத்து. அந்த கனவு அத்தனை குழப்பமாக அவனுக்கு இருந்தபடியால், அவன் அதன் அர்த்தத்தை அறிந்து கொள்ள விரும்பினான்.
அதன்படி அவன் தன் நாட்டில் இருந்த சாஸ்திரிகளையும்  ஜோசியரையும் சூனியக்காரரையும் கல்தேயரையும் அழைக்கச்சொன்னான்; அவர்கள் வந்து, ராஜசமுகத்தில் நின்றார்கள். அவர்களை பார்த்து அவன், நான் ஒரு சொப்பனத்தை கண்டேன், அந்த சொப்பனத்தை எனக்கு அறிவிக்க வேண்டும் என்றான். அதை கேட்ட அந்த ஜோசியர்களும் மற்றவர்களும், ‘இது என்ன இந்த ராஜா இப்படி கேட்கிறார், சொப்பனம் என்ன என்று சொன்னால், அதற்கு அர்த்தத்தை சொல்ல முடியும், ஆனால் சொப்பனமே என்னவென்று கேட்கிறாரே’ என்று வியந்தவர்களாக, ‘ராஜாவே, நீர் என்றும் வாழ்களூ சொப்பனத்தை உமது அடியாருக்குச் சொல்லும், அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம்’ என்று சொன்னார்கள்.
ஆனால் ராஜாவோ, ‘என்னிடத்திலிருந்து பிறக்கிற தீர்மானம் என்னவென்றால், நீங்கள் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்கு அறிவியாமற்போனால் துண்டித்துப்போடப்படுவீர்கள்; உங்கள் வீடுகள் எருக்களங்களாக்கப்படும். சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் தெரிவித்தீர்களேயாகில், என்னிடத்தில் வெகுமதிகளையும் பரிசுகளையும் மிகுந்த கனத்தையும் பெறுவீர்கள்; ஆகையால் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்குத் தெரிவியுங்கள்’ என்றான்.
தமது பிள்ளைகள் அடிமைத்தனத்தில் இருப்பதையும், இருந்தும் அவர்கள் உண்மையாக தேவனை நோக்கி மன்றாடுவதையும் கேட்ட  தேவன் சும்மா இருப்பாரா? அவர்களை விடுவிக்கும் பொருட்டு, அவர் அந்த நாட்டை ஆளும் ராஜாவுக்கு சொப்பனத்தை கொடுத்து அவருடைய நித்திரையை கலைத்து, அதினால் ஏற்பட்ட பின்விளைவுகளை தான் நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.
யாராவது சொப்பனத்தை சொன்னால் அதின் அர்த்தத்தை இந்நாட்களிலும் சொல்லுபவர்கள் உண்டு. ஆனால் சொப்பனத்தையே சொல்ல சொன்னால் யாரால் முடியும்? ஆம், மனிதனால் கூடாதது, தேவனால் கூடும்! ஆமென்! சொப்பனத்தை அந்த ராஜாவுக்கு கொடுத்தவரே அவரல்லவா!
அந்த தேசத்திலுள்ள ஞானிகளுக்கும், ஜோசியருக்கும், மற்றவர்களுக்கும் அந்த காரியம் முடியாமற்போனபோது, ராஜா மகா கோபமும் உக்கிரமுங்கொண்டு, பாபிலோனில் இருக்கிற எல்லா ஞானிகளையும் கொலைசெய்யும்படி கட்டளையிட்டான். அப்படி கட்டளையிட்ட உடனே, கொலை செய்யும்படி கட்டளையிட்டவர்கள், அந்த தேசத்திலுள்ள ஞானிகளை அல்ல, தானியேலையும் அவன் தோழரையும் கொலைசெய்யத் தேடினார்கள். ஏனெனில் இந்த நான்கு பேரும் அடிமைகளாயிருந்தும், எல்லாவிதத்திலும் ஞானிகளாக, எல்லாரை பார்க்கிலும் பத்து மடங்கு சமர்த்தராக இருந்தபடியால், அவர்களை கொன்று விட வேண்டும் என்றே அவர்கள் விரும்பினார்கள்.
தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சில வேளைகளில் உபத்திரவமும், துன்பமும் அதிகம் வரத்தான் செய்யும். ஆனால் அந்த துன்பமும், துயரமும் அவர்களை இன்னும் அதிகமாக உயர்த்தும்படியாகவே தேவன் அனுமதிக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும். அப்போது தானியேலுக்கு என்ன விஷயம் என்று தெரியவந்தபோது, அந்த கட்டளையை நிறைவேற்ற வந்த மனிதனோடு ஞானமும் புத்தியுமாய் அவர் பேசி, பின் ராஜாவினிடத்திலேயே நேரடியாக சென்று, தங்களுக்கு தவணை கொடுக்கும்படி வேண்டினார். அதன்படி தவணை காலம் கொடுக்கப்பட்டபோது, அவரும் அவருடைய மூன்று தோழர்களும், தேவனிடத்தில் போய் ஜெபிக்க ஆரம்பித்தார்கள். நம் தேவன் நம் ஜெபத்தை கேட்டு பதில் கொடுக்கிற தேவனல்லவா? ஜெபம் ஜெயத்தை தரும், ஜெபம் பதிலை கொண்டு வரும், ஜெபம் ராஜ கட்டளையை மாற்றும், ஜெபம் விடுதலை கொண்டு வரும் அல்லேலூயா!
அவர்கள் ஜெபித்தபோது, ராத்திரியிலே தரிசனத்திலே தானியேலுக்கு சொப்பனமும் அதின் அர்த்தமும் வெளிப்படுத்தப்பட்டது! அல்லேலூயா! ஆம், மறைபொருளை வெளிப்படுத்த வல்லவர் நம் தேவன் மாத்திரமே! பூச்சகரத்தை அவருடைய சித்தத்தின்படி ஆளுகை செய்ய வைக்கிறவர் அவரே! மறைபொருள் தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்டபோது, அவர் தேவனை துதித்து, ‘தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது. அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும். என் பிதாக்களின் தேவனே, நீர் எனக்கு ஞானமும் வல்லமையும் கொடுத்து, நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக்கொண்டதை இப்பொழுது எனக்கு அறிவித்து, ராஜாவின் காரியத்தை எங்களுக்குத் தெரிவித்தபடியினால், உம்மைத் துதித்துப் புகழுகிறேன்’ என்று சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு நன்றி செலுத்தினார்.
ஆம், நம் தேவனை போல நல்ல தேவன் ஒருவர் உண்டோ? தேவன் தம் பிள்ளைகளை விடுதலையாக்கும்படியாக ராஜாவுக்கு சொப்பனத்தை கொடுத்தார். ஆனால் சத்துருவானவன் அதை தன் கையிலே எடுத்து, யூத ஞானிகளை கொல்ல திட்டமிட்ட போது, சர்வ ஞானியான தேவன், தம் பிள்ளைகளின் ஜெபத்தை கேட்டு அவர்களுக்கு மனிதர் யாராலும் முடியாத காரியமாகிய சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் வெளிப்படுத்தி தம் ஜனத்தை காத்து கொள்ள வல்லராயிருந்தார். அதே தேவன் இன்றும் மாறாதவராயிருக்கிறார்!
உங்களுக்கு எதிராக ஒரு கூட்டமாக எதிர்கொண்டு வருகிறார்களோ, நீங்கள் எத்தனை ஞானமாய் காரியங்களை செய்தாலும், உங்களை எப்படியாவது கீழே தள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களே? நீங்கள் கர்த்தருக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தால், அந்த துன்பத்தின் பின் தேவன் உங்களை எல்லார் முன்னிலும் உயர்த்த போகிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அவரை நம்பின ஒருவரும் வெட்கப்பட்டு போவதில்லை!  நாளைய தினத்தில் அந்த சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் குறித்து தியானிப்போம். ஆமென் அல்லேலூயா!
எனக்கு குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே ஐயா நீரே
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே ஐயா நீரே
அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
அன்பே உமக்கு ஸ்தோத்திரம்
உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை
எல்லாமே உம்மால் ஆகும் அல்லேலூயா
எல்லாமே உம்மால் ஆகும்

ஜெபம்:

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, உம்முடைய பிள்ளைகளின் தலையை உயர்த்தி வைக்கிற தேவன் நீரல்லவோ! எத்தனை பேர் எதிர்த்து வந்தாலும், எங்களுக்காக யுத்தம் செய்கிறவர் நீர் ஐயா! மனிதரால் முடியாத காரியத்தை எங்களுக்காக செய்து முடிப்பவர் நீர் ஐயா! உம்மை துதிக்கிறோம். எங்களுடைய பிரச்சனைகளுக்குப்பின் எங்களை உயர்த்தி, வெட்கப்பட்டு போகாதபடி எங்களை காத்து கொள்ள போகிற தயவிற்காக உமக்கு நன்றி! எங்கள் துதி ஸ்தோத்திரங்களை இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.