கர்த்தர் கொடுத்த பெற்றோர்

கர்த்தர் கொடுத்த பெற்றோர்

உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே. –  (நீதிமொழிகள் 23:22).
ஒரு வேடிக்கையான கதை உண்டு. ஒரு தாயின் மூன்று குமாரர்கள் நன்கு படித்து, வீட்டை விட்டு வெளியே சென்று நன்கு சம்பாதித்து, நல்ல நிலைமையில் இருந்தார்கள். ஒரு நாள் அவர்கள் மூவரும் கூடி தங்கள் தாயாருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒருவரோடொருவர் சொல்லி கொண்டார்கள். அதன்படி மூத்தவன் ‘நான் அம்மாவுக்கென்று ஒரு பெரிய வீட்டை கட்டியிருக்கிறேன். ஏசியெல்லாம் போட்டு, சூப்பரா கலக்கியிருக்கிறேன்’ என்று கூறினான். அடுத்தவன், ‘நான் அம்மாவுக்கென்று ஒரு மெர்சிடஸ் காரும், அவர்கள் ஹாயா உட்கார்ந்து போகத்தக்கதாக ஒரு டிரைவரையும் ஏற்பாடு பண்ணியிருக்கிறேன்’ என்று கூறினான். கடைசி மகன், ‘உங்களுக்கெல்லாம் தெரியும், அம்மா பைபிளை அதிகமாக வாசிக்க பிரியப்படுவார்கள் என்று. ஆனால் அவர்களுடைய கண் சரியாக தெரியாததால் அவர்களால் சரியாக வாசிக்க முடிவதில்லை. ஆகவே நான் ஒரு கிளியை வாங்கியிருக்கிறேன். அது பைபிளை அப்படியே சொல்லும். அதை பழக்குவிக்க 12 வருடங்கள் ஆனதாம். அம்மா சோபாவில் உட்கார்ந்து, எந்த அதிகாரம், எந்த வசனம் என்று சொன்னால் போதும், அது பட்பட்டென்று சொல்லும்’ என்று கூறினான். மூவரும் தங்கள் அன்னைக்கென்று தாங்கள் வாங்கிய பரிசுகளை பெருமிதமாக நினைத்தபடியே, அவற்றை தங்கள் அன்னைக்கு அனுப்பி வைத்தார்கள்.
அவற்றை பெற்று கொண்ட அன்னையிடமிருந்து ஒவ்வொருவருக்கும் கடிதம் வந்தது. அதன்படி, அவர்கள், மூத்தவனுக்கு ‘நீ கொடுத்த வீடு மிகவும் பெரியது. நான் ஒரே ஒரு அறையில் தான் இருக்கிறேன். ஆனால் மற்ற இடம் முழுவதையும் நான் சுத்தப்படுத்த வேண்டி இருக்கிறது’ என்று எழுதியிருந்தார்கள். அடுத்தவனுக்கு ‘நான் எங்கே வெளியே போகிறேன், நீ எனக்கு அவ்வளவு பெரிய காரை அனுப்பி வைத்திருக்கிறாய்? நீ அனுப்பியிருக்கிற அந்த டிரைவர் அதற்கு மேல் மிகவும் மோசம், முகம் கொடுத்து பேச மாட்டேன் என்கிறான்’ என்று எழுதியிருந்தார்கள். மூன்றாமவனுக்கு ‘நீ மட்டும்தான் என்னுடைய தேவையையும், என்னை பற்றியும் நன்கு அறிந்திருக்கிறாய்! நீ அனுப்பியிருந்த கோழி; நன்றாக ருசியாக இருந்தது’ என்று எழுதியிருந்தார்களே பார்க்கணும்!
பிரியமானவர்களே, நம்முடைய பெற்றோர் நாம் அனுப்பி வைக்கும் பரிசுகளின் மேல் அல்ல, நம்மிடமிருந்து அன்பையே எதிர்ப்பார்க்கிறார்கள். நாம் நினைக்கிறோம், நாம் பரிசுகளை அனுப்பி வைத்தால் அவர்கள் அதிலே திருப்தி அடைந்து விடுவார்கள் என்று. ஒருக்காலும் இல்லை! நீங்கள் அவர்களோடு அன்போடு பேசும் வார்த்தைகளையும், கரிசனையோடு கேட்கும் விசாரிப்புகளையும் அவர்கள் அதிகமாய் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கிறார்கள். என்னுடைய பெற்றோர், சீக்கிரமே மரித்து விட்டதால், வயதான பெரியவர்களை காணும்போது, நமக்கு அந்த கிருபை இல்லையே என்று கலங்குவதுண்டு. வயதான பெரியவர்கள் வீட்டில் இருப்பது நமக்கு எத்தனை ஆசீர்வாதம்! ஆனால் இந்த காலத்தில் வயதான பெற்றோரை பாரமாக நினைத்து, அவர்கள் எப்போது மரிப்பார்கள் என்றும், அவர்களை எப்போது முதியோர் இல்லத்தில் சேர்ப்போம் என்றும் காத்திருப்பவர்கள் அதிகம்! வேதம் சொல்கிறது,  ‘உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே’ என்று. பெற்றோர் கண்கலங்க நாம் ஒருபோதும் காரணமாக இருக்ககூடாது. என் பிள்ளை என்னை மோசமாக நடத்துகிறான் என்று அவர்கள் கர்த்தரிடம் கதறினால், அது நமக்கு சாபமாக முடியும். என்னை போன்று எத்தனையோ பேருக்கு வயதான பெற்றோர் வீட்டில் இல்லை. ஆனால் கர்த்தர் உங்களுக்கு அந்த கிருபையை கொடுத்திருக்கிறார். அதை அன்போடு அனுசரணையோடு பெற்று பெற்றோரை பாதுகாத்து கொள்ளுங்கள். நிச்சயமாக தேவன் அதில் மகிழுவார், உங்களை ஆசீர்வதிப்பார். ‘நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பாய்’ (சங்கீதம் 128:6) என்பது கர்த்தர் அருளிய வாக்குதத்தம்! உங்கள் பெற்றோர் உங்கள் பிள்ளைகளை சந்தோஷமாய் காணட்டும். அப்போது நீங்கள் உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பீர்கள்! ஆமென் அல்லேலூயா!
நல்ல குடும்பம் நீர் தந்தீரய்யா
செல்ல பிள்ளைகள் தந்தீரய்யா
அணைக்கும் தகப்பனை தந்தீரய்யா
அன்பு அன்னையை தந்தீரய்யா
நன்றி தகப்பனே நன்மை செய்தீரே
நன்றிப்பலிபீடம் கட்டுவோம்
நல்ல தெய்வம் நன்மை செய்தார்
செய்த நன்மை ஆயிரங்கள்
சொல்லிச் சொல்லி பாடுவேன்

ஜெபம்:

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த நல்ல நாளுக்காக உம்மை துதிக்கிறோம். நீர் எங்களுக்கு கொடுத்த நல்ல பெற்றோருக்காக உம்மை துதிக்கிறோம். நீர் எங்களுக்கு கொடுத்த ஈவு என்று நாங்கள் அவர்களை நினைத்து அருமையாக அன்பாக நடத்த எங்களுக்கு உதவி செய்யும். எங்கள் பெற்றோர் வயதாகும்போது நாங்கள் அவர்களை தள்ளிவிடாமல், அன்போடு கவனித்து கொள்ள கிருபை செய்வீராக. அதன் மூலம் உம்முடைய ஆசீர்வாதத்தை நாங்கள் பெற்று கொள்ள கிருபை செய்யும்.   எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.