இயன்ற மட்டும் |
என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன். – (ரோமர் 1:15).
ஒரு வாலிபன் ஒரு கனவை கண்டான். அவன் ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்று கொண்டவன். பாவங்களற கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, நித்திய ஜீவனை பெற்று கொண்டவன். அவன் கண்ட கனவில், நியாயத்தீர்ப்பு நாளில் அவன் நிற்கிறதை போலவும், அவனுடைய முறை வந்தபோது, தேவன் அவனை பார்த்து, சில கேள்விகளை கேட்டப்பின், பரலோகத்தில் அவனுக்கென்று நியமிக்கப்பட்டிருந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டான்.
அவன் அப்படி கடந்து சென்றபோது, அவனுக்கு பின்னால் அவனுடைய உயிர் நண்பன் கர்த்தருக்கு முன்பாக நிற்பதையும், அவன் இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்று கொள்ளாததால், அவன் நித்திய ஆக்கினைக்கு தள்ளப்பட்டதையும் கண்டான். அவனுடைய நண்பனின் கண்களில் கண்ணீர்! அவனது பார்வை அந்த கிறிஸ்தவ வாலிபனின் இருதயத்தை துளைத்தது! ‘எத்தனை நாட்கள் நான் உன்னோடு படுத்து உறங்கினேன், எத்தனை நாட்கள் நாம் ஒன்றாக சேர்த்து கழித்தோம்? ஒரு நாளாவது எனக்கு நீ கர்த்தரை குறித்து அறிவிக்க வில்லையே?’ என்று பார்த்து கேட்டதை போன்று உணர்ந்தான். ‘ஐயோ, நான் அந்த நண்பனோடு சேர்ந்து கர்த்தரை குறித்து அறிவிக்க எனக்கு கொடுக்கப்பட்ட தருணங்களை வீணாக்கி போட்டேனே!’ என்று கதறினான்.
(பரலோகத்தில் கண்ணீர் உண்டு, அந்த கண்ணீர் இதை போன்றதாய்த்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்! வெளிப்படுத்துதல் 21:4) ஆனால் இனி சென்ற காலம் திரும்ப வரப்போவதில்லை! நித்திய அக்கினிக்கு சென்ற ஆத்துமா மனம் திரும்ப மீண்டும் ஒரு தருணம் கொடுக்கப்பட போவதில்லை! இப்படி நம் நண்பர்கள், உறவினர்கள், கணவர்கள், மனைவிகள், பிள்ளைகளை நாம் இழந்து போவோமானால் எத்தனை பரிதாப நிலைமையாயிருக்கும்!!!
‘கிறிஸ்துவின் சுவிசேஷத்தை இவ்வுலகிலுள்ள ஒவ்வொருவரும் ஒருமுறை கேட்பதற்கு முன் இன்னொருவர் ஏன் பலமுறை கேட்க வேண்டும்’ இக்கேள்வியை கேட்டவர் ஆஸ்வால்ட் ஸ்மித் என்ற தேவ ஊழியர். ‘இயேசு என்ற வார்த்தையை கேள்விப்பட்டிராத ஜனங்கள் கோடிக்கணக்கில் இருக்கும்போது கிறிஸ்தவர்களாகிய நாம் மட்டும் மீண்டும் மீண்டும் கேட்கவும், அறியவும் செய்வதில் என்ன நியாயம் உண்டு?’ என்று தன் செய்தி ஒன்றில் ஆஸ்வால்ட் வாதிடுகிறார்.
இவருடைய கேள்வியில் நிச்சயம் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. இவ்வுலகம் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு பின் 2011 வருடங்களை கடந்தும் இன்னும் நம் தேச மக்கள் தொகையில் சொற்ப அளவில்தான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ளனர். உலகளவில் நற்செய்தி அறிவிக்கப்படாத மக்களினங்களில் 25 சதவிகிதம் இந்தியாவில் உள்ளனர். அதாவது மூன்றறை இலட்சம் கிராமங்களுக்கு இன்னும் சுவிசேஷ நற்செய்தி சென்றடையவில்லை. இவர்களின் எண்ணிக்கை நாற்பது கோடிக்கும் அதிகம். இன்னும் குறிப்பாய் கூற வேண்டுமானால் நம் கிறிஸ்தவ ஊழியம் என்பது புறமார்கத்தினர் மத்தியில் செய்வதை காட்டிலும், கிறிஸ்தவர்களை கிறிஸ்தவர்களாக மாற்றும் பணியிலேயே முடங்கி கிடக்கிறது. சாப்பிட்டவர்களுக்கே மீண்டும் மீண்டும் உணவுகளை ஆயத்தம் செய்து கொடுத்து கொண்டிருக்கிறோம். ஜீவ அப்பமாகிய இயேசுவை தேடும் தரித்திரருக்கோ சுவிசேஷத்தை அறிவியாதபடிக்கு நம்மில் அநேகருடைய கண் சொருகி போய் இருக்கிறது.
நம் தேசம் இன்னும் சந்திக்கப்படாததற்கு பாவம், சாபம், விக்கிரக ஆராதனை என சாக்கு போக்கு சொல்லி தப்பி விடுகிறோம். ஆனால் அதற்கான காரணத்தை சரியாய் சொல்ல போனால் கிறிஸ்தவர்களாகிய நாம் செயல்படாததே காரணம்! பவுல் தான் அநேக ஜனங்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும்படியாக கடன் பட்டுள்ளேன் என்றும் ‘என்னால் இயன்ற மட்டும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க விரும்புகிறேன்’ என்றும் கூறுகிறார். ஆம் மிஷனெரி ஊழியம் என்பது ஏதோ ஒரு சிலருக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் செய்ய வேண்டிய கட்டாய கடமையாகும்.
ஆத்தும ஆதாயம் செய்வதற்கு முன் நமக்கு ஆத்துமாக்களை குறித்த பாரம் வேண்டும். அது இல்லாதபடி நாம் அழிகின்ற ஆத்துமாக்களுக்காக ஒன்றும் செய்ய முடியாது. ஆண்டவரே, ஆத்தும பாரத்தை தாரும் என்று ஜெபிக்க வேண்டும். அந்த ஆத்தும் பாரத்தோடு நாம் கண்ணீரோடு ஜெபிக்கும் ஜெபங்களும், ஆத்துமாக்களுக்காக திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கும் ஜெபங்களும் ஒரு நாளும் வீணாய் போகாது. ‘இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை’ (ஏசாயா 59:1) என்று வேதம் கூறுகிறது. கர்த்தர் ஆத்துமாக்களை இரட்சிக்கவும், நம்முடைய ஜெபத்தை கேட்கவும் ஆயத்தம்! ஆனால் நாம் திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கவும், ஆத்துமாக்களுக்கு சுவிசேஷம் சொல்லவும் ஆயத்தமா?
நாம் வசிக்கும் பகுதியை பணித்தளமாக எண்ணி கொள்வோம். நம்மால் இயன்ற அளவிற்கு சுவிசேஷத்தை பிறருடன் பகிர்ந்து கொள்ளுவோம். மேலும் நம்மால் இயன்ற அளவிற்கு மிஷனெரி பணிகளுக்கு உதாரத்துவமாக காணிக்கைகளை கொடுத்து ஆதரிப்போம். ஆத்துமாக்களுக்காக முழங்கால் யுத்தம் செய்வோம்! ‘இவன் அல்லது இவள் தன்னால் இயன்றதை செய்தாள்’ என்ற வாசகம் நம்மை குறித்தும் சொல்லப்படட்டும்! ஆமென் அல்லேலூயா!
கரை ஏறி உமதண்டை நிற்கும்போது இரட்சகா
உதவாமல் பலனற்று வெட்கப்பட்டு போவேனோ?
ஆத்துமா ஒன்றும் இரட்சிக்காமல் வெட்கத்தோடே என் ஆண்டவா
வெறும் கையனாக உம்மை கண்டு கொள்ளல் ஆகுமா?
உதவாமல் பலனற்று வெட்கப்பட்டு போவேனோ?
ஆத்துமா ஒன்றும் இரட்சிக்காமல் வெட்கத்தோடே என் ஆண்டவா
வெறும் கையனாக உம்மை கண்டு கொள்ளல் ஆகுமா?
வாழ்நாள் எல்லாம் வீணாளாக சென்று போயிற்றே ஐயோ!
மோசம் போனேன் விட்ட நன்மை அழுதாலும் வருமோ?
மோசம் போனேன் விட்ட நன்மை அழுதாலும் வருமோ?
ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை என்ற வார்த்தையின்படி நீர் இரட்சிக்க ஆயத்தமாயிருக்கும் போது நாங்கள் எங்களுடைய வேலையாகிய சுவிசேஷத்தை அறிவிக்காமலும், ஜெபிக்காமலும் இருந்த குற்றத்தை மன்னிப்பீராக. எங்களுடைய தேசத்தில் 40 கோடிக்கும் மேலான மக்களுக்கு இன்னும் சுவிசேஷம் அறிவிக்கப்படவில்லையே, நாங்கள் அக்கறை அற்று இராதபடிக்கு எங்கள் ஒவ்வொருவருக்கும் ஆத்துமாக்களை குறித்த பாரத்தை தாரும் தகப்பனே. முழங்காலில் நிற்கவும், ஜெபிக்கவும், சுவிசேஷத்தை அறிவிக்கவும், சுவிசேஷ ஊழியம் செய்பவர்களை நாங்கள் ஜெபத்தாலும், பொருளாலும் தாங்கவும் கிருபை செய்யும். . எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.