இயேசுகிறிஸ்துவின் கண்ணீர்
இயேசு கண்ணீர் விட்டார். – (யோவான் 11:35)
வேதத்திலேயே மிகவும் சிறிய இந்த வசனத்தை நமது பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே கற்று கொடுத்து, அவர்கள் அழகாக அந்த வசனத்தை சொல்வதை கேட்டிருக்கிறோம். உலகத்தில் வாழும் நமக்கு அநேக பாடுகளும் உபத்திரவங்களும் வருகிறபடியால் நாம் சில வேளைகளில் என்ன செய்வது என்று தெரியாமல் அழுவது உண்டு. துக்க நேரங்களிலும், மனம் பாரத்தால் நிறைந்திருக்கிற போதும் நாம் அழுவது உண்டு. ஆனால் சகலவற்றையும் படைத்தவர், தேவனுக்கு சமமாக எண்ணப்பட்டவர், தேவனுடைய ஒரே பேறான குமாரன் இந்த உலகத்தில் வந்திருந்தபோது கண்ணீர் விட்டார். அவர் ஒரு முறை, இரண்டு முறை அல்ல, மூன்று முறை கண்ணீர் விட்டார் என்று வேதம் நமக்கு கூறுகிறது.
1. இயேசு கண்ணீர் விட்டார். – (யோவான் 11:35)
2. அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது (லூக்கா 19:41-42)
3. அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு… (எபிரேயர் 5:7)
இதில் முதலாவது முறை லாசருவின் கல்லறையினிடத்தில் வந்து, அவர் அழுவதை காண்கிறோம். இரண்டாவது முறை எருசலேம் நகரத்தண்டை வந்து, அவருடைய வார்த்தைகளையும், அவரையும் தள்ளி விட்ட அந்த நகரத்தையும், அதினால் அவர்களுக்கு வர இருக்கும் அழிவையும் நினைத்து அவர்கண்ணீர் விட்டார். மூன்றாவது முறை சிலுவையில் தாம் அறையப்படுவதற்கு முன்பு, தாம் கடந்து செல்ல இருக்கும் பாடுகளின் பாதையை நினைத்தவராக கண்ணீரோடு விண்ணப்பம் செய்தார் என்றும் பார்க்கிறோம்.
மனிதர்களாகிய நாம் விடும் கண்ணீருக்கும், சர்வ வல்லமையுள்ள தேவன் விடும் கண்ணீருக்கும் நிச்சயமாக அதிக வித்தியாசமுண்டு. நம்முடைய கண்ணீர் நமது விடுதலைக்காக, நமது பாரம் நீங்குவதற்காக விடுவதாகும்.
அவர் சகலத்தையும் அறிந்தவர், அவர் நம் ஒவ்வொருவரின், மற்றும் உலகத்தின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் அறிந்தவர். அதினால்தான் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்று அவரை குறித்து கூறப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட தேவன் கண்ணீர் விட்டார் என்பது விந்தையிலும் விந்தையல்லவா?
நம் தேவன் நம்மை விசாரிக்கிறவர். அவர் நம்மை தேற்றுகிறவர். நம் கண்களில் கண்ணீர் வரும்போது, அதை கண்டும் காணாமல் போகிறவர் அல்ல, லாசருவின் கல்லறையினிடத்திற்கு வந்தபோது, யூதர்கள் அழுகிறதை கண்ட அவருக்கும் கண்ணீர் வந்தது. மக்கள் அவரிடம் தங்கள் வியாதினிமித்தமும், வருத்தத்தினிமித்தமும் வந்த போது, அவருடைய உள்ளம் உருகிற்று. அவர்களை தொட்டு அவர் சுகப்படுத்தினார். அதே தேவன் இன்றும் மாறாதவராயிருக்கிறார். நம்முடைய தேவைகளிலும் அவர் உடனே நமக்கு வந்து உதவி செய்யவும், நம்முடைய தேவைகளை சந்திக்கவும் அவர் வாஞ்சையுள்ளவராயிருக்கிறார். அவருடைய சித்தமில்லாமல் நம்முடைய தலையிலிருந்து ஒரு முடிக்கூட கீழே விழுவதில்லை.
தாம் அடையப்போகும் சிலுவையின் மரணத்தை கண்டு அவர் அஞ்சினவராக கண்ணீரோடு ஜெபிக்கவில்லை, அவர் அந்த கொடிய மரணத்தின் வழியாக சென்று, சத்துருவை ஜெயம் கொண்டு, அவனை சிலுவையில் வெற்றி சிறந்தவர். அவருக்கு தாம் படப்போகும் பாடுகளை குறித்து முன்பே தெரியும். அவர் உலக தோற்றமுதல் முன்னே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி (வெளிப்படுத்தின விசேஷம் 13:8). இத்தனை பாடுகள் பட்டு மனிதகுலத்திற்கு இரட்சிப்பை வாங்கி கொடுத்தும் அதை ஏற்க மறுக்கும் மனிதர்களை குறித்து, நினைத்தவராக அவர் கண்ணீர் வடித்திருக்க வேண்டும்.
எருசலேம் நகரத்தை கண்டும் அவர் கண்ணீர் வடித்தார். அந்த எருசலேம் நகரத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர் அவரை ஏற்று கொள்ளாமல் புறக்கணித்ததாலும், அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்வை அவர் கண்டபடியினாலும், மேசியா அவர்தான் என்று அறியாமல், அவர்கள் அவரை ஏற்று கொள்ளாமல், தங்கள் பாவ வாழ்க்கையிலே தரித்து இருந்தபடியினாலும், அவர்களை பிரகாசிப்பிக்கிற ஒளியாகிய அவரை அவர்கள் வேண்டாம் என்று தள்ளினபடியினால், தேவ கோபாக்கினை அவர்கள் மேல் வர இருக்கிறதையும் கண்டு அவர் கண்கள் கலங்கியது. கிறிஸ்துவை ஏற்று கொள்ளாதவர்கள் நித்திய நரகத்திற்கும், நித்திய அழிவிற்கும் நேராக செல்வதை நினைத்து அவருக்கு கண்ணீர் வந்தது. மட்டுமல்ல, தாங்கள் பக்தி வைராக்கியமுள்ளவர்கள் என்று சொல்லி கொண்டு, ஆனால் தேவனிடமிருந்து அனுப்பப்பட்ட அவருடைய குமாரனை அவர்கள் வைராக்கியமாக ஏற்க மறுத்து விட்டதை நினைத்து அவருடைய கண்களில் கண்ணீர் வந்தது.
பிரியமானவர்களே, நாம் வாழும் இந்த காலத்திலும், கிறிஸ்துவை ஏற்று கொள்ளாமல், அவர் தான் மேசியா என்று அறியாமல், அழிந்து கொண்டிருக்கும் ஆத்துமாக்களை காணும்போது நம்முடைய கண்களிலும் கண்ணீர் வரவேண்டும். அவர்கள் நம்பிக்கை அற்றவர்களாக நரகத்தை நோக்கி செல்கிறார்களே என்று அவர்களுக்காக கண்ணீர் விட்டு, கர்த்தரிடம் அவர்களுக்காக மன்றாட வேண்டும்.
வேதனையிலும், கண்ணீரிலும் இருக்கும் ஒவ்வொருவருக்காகவும், நாம் தேவனிடம் மன்றாட வேண்டும். அழிந்து போகிற ஆத்துமாக்களை நினைத்து அவர் கண்ணீர் வடித்தது போல நாமும் திறப்பின் வாசலில் நின்று அவர்களை தேவன் எப்படியாவது சந்தியும் என்று கண்ணீரோடு ஜெபிக்க வேண்டும். நாம் கடைசி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கர்த்தரின் வருகை எப்பொழுது வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அவரை ஏற்று கொள்ளாமல் நித்திய அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்காகவும் நாம் நிச்சயமாக ஜெபித்திருக்க வேண்டும்.
அழிந்து போகிற ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற தாகமும், வாஞ்சையும் நம் ஒவ்வொருவருக்கும் நம் ஆண்டவரை போல வர வேண்டும். அவர்களுக்காக பாரப்பட்டு, தேவையுள்ளவர்களுக்காக தேவனிடத்தில் கண்ணீர் விட்டு மன்றாடும்போது, கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் என்ற வசனம் நம் வாழ்விலும் நிறைவேறும். ஆத்துமாக்களை கொள்ளை பொருளாக தேவன் தம்மிடத்தில் சேர்த்து கொள்வார்! ஆமென் அல்லேலூயா!
கட்டி பிடித்தேன் உந்தன் பாதத்தை
கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே
தேசங்கள் இரட்சிப்பு அடைய வேண்டுமே
இளைஞரெல்லாம் இயேசுவுக்காய் வாழ வேண்டுமே
இரங்கும் ஐயா மனம் இரங்கும் ஐயா
ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, சர்வ உலக இரட்சகராம் கிறிஸ்து மூன்று முறை இந்த உலகத்தில் வந்திருந்த போது கண்ணீர் விட்டார் என்று நாங்கள் வேதத்தில் வாசிக்கிறோமே தகப்பனே, இந்த மனுக்குலம் இரட்சிக்கப்பட வேண்டும் என்று நினைத்து அவர் விட்ட கண்ணீர் வீணாக போய் விடாதபடி, எங்கள் தேசங்களை இரட்சியும் தகப்பனே. கிறிஸ்துவின் ஆத்தும் பாரம் எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் கடந்து வரட்டும். அழிந்து போய் கொண்டிருக்கிற ஒவ்வொருவருக்காகவும், கண்ணீரோடு ஜெபிக்கிறவர்களாக எங்களை மாற்றும். வேதனையிலும், துன்பத்திலும் இருப்பவர்களை நாங்கள் தாங்கவும், அவர்களுக்கு உதவி செய்யவும் எங்களுக்கு உணர்த்தும். . எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.