சந்தோஷமே சமாதானமே

சந்தோஷமே சமாதானமே

ஒருவனையும் தூஷியாமலும், சண்டைபண்னாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு.  – (தீத்து 3:2).
நம்மில் சிலருடைய வீடுகளில் மீன் வளர்க்கும் தொட்டிகள் உண்டு. அதில் வண்ண வண்ண மீன்கள், சிறிய பெரிய மீன்கள் என்று மீன்களை வாங்கி வளர்ப்பவர்களும் உண்டு. அப்படி மிகவும் ஆர்வமாய் மீன்களை வாங்கி, அவற்றை பராமரித்து, சரியான தண்ணீரை மாற்றி, சுத்தம் செய்து, ஏற்ற உணவை ஏற்ற வேளையில் கொடுத்து வளர்த்து வந்தார் ஒருவர். அவருடைய மூன்று வயது பேரனும் அவரோடு சேர்ந்து கொள்வான்.
ஒரு நாள் காலையில் மீன்களுக்கு உணவு போட தாத்தாவுடன் வந்த பேரன், ஒரு சிறிய மீன் தொட்டியில் ஒரே ஒரு நீலநிற மீன் மட்டும் தனியாய் போடப்பட்டிருப்பதை கண்டு, ‘ஏன் தாத்தா இது மாத்திரம் தனியாக போடப்பட்டிருக்கிறது?’ என்று கேட்டான். தாத்தா கூறினார், ‘இந்த மீன் ரொம்ப சண்டைக்கார மீனாக இருக்கிறது. மற்ற மீன்களை விரட்டுவதும், கடிப்பதுமாய் இருக்கிறது. ஆதலால் அவைகள் எப்போதும் பயத்துடனே காணப்படுவதால், சரியாக உணவு கூட உட்கொள்வதில்லை. ஆகவே தான் அதை தனியாக போட்டுள்ளேன்’ என்று கூறினார். ‘நீயும் சண்டை போடுகிறவனாக இருந்தால் யாரும் உன்னிடம் சேர மாட்டார்கள், நீ தனியாகத்தான் இருக்கவேண்டும்’ என்றார். ‘உனக்கு இந்த நீலநிற மீனைப்போல தனியாக இருக்க ஆசையா? அல்லது, கூட்டமாக மற்ற மீன்களோடு சந்தோஷமாக இருக்க ஆசையா?’ என்று கேட்டார். அதற்கு பேரன், ‘எனக்கு மற்ற மீன்களை போல மற்றவர்களோடு சந்தோஷமாக இருக்கத்தான் ஆசை’ என்றான்.
பிரியமானவர்களே, நம்மோடு கூட இருப்பவர்களில் கூட பலதரப்பட்ட மக்கள் உண்டு. நம் கையிலுள்ள ஐந்து விரல்களும் ஒன்றாய் இராததுபோல, நம் சமுதாயத்திலும், சபையிலும், குடும்பத்திலும் ஒவ்வொருவருடைய குணநலன்களும், பழக்கங்களும் வித்தியாசமானதாய் தான் இருக்கும். தேவனுடைய திட்டம் இப்படிப்படட சூழலில், பிறரை ஏற்று கொண்டு, பிறரது நிறைகளை ஏற்றுகொள்வது போல அவர்களின் குறைகளையும் சகித்து கொண்டு தேவனுக்கு சாட்சியாய வாழ வேண்மென்பதே. ஆகவே நாம் நம்மை சுற்றியுள்ளவர்களுடன் அன்போடு சமாதானத்தோடு இசைந்து வாழ கற்று கொண்டால், இன்பம், இல்லாவிட்டால் தனிமைப்படுத்தப்பட்டு அன்பிற்காய், உதவிக்காய் ஏங்கும் நிலை ஏற்படும்.
அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி (நீதிமொழிகள் 27:15), சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும் வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம் (நீதிமொழிகள் 25:14) என்று சண்டையிடும் பெண்களை குறித்து வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு குடும்பத்தில் இருக்கும் குடும்ப தலைவி, எல்லா நேரமும் குடும்பத்தினரோடு சண்டையிட்டு கொண்டு இருக்கக்கூடாது. அப்படிப்பட்டவளோடு இருப்பதை பார்க்கிலும் வனாந்தரத்திலும், வீட்டின் மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பது நல்லது என்று குடும்பத்தினர் யாரும் வனாந்தரத்திற்கோ, வீட்டின் மேல் ஒரு மூலையில் இருக்கவோ போய்விட ஒரு குடும்ப பெண் காரணமாக இருக்க கூடாது. குடும்பம் சந்தோஷமாக இருக்கவோ, அல்லது குறைவோடு இருக்கவோ அதன் குடும்ப தலைவியே முக்கிய காரணம். ஆகவே குடும்பத்தை சந்தோஷமாக வைத்து கொள்ள ஒவ்வொரு சகோதரியும் முயற்சி செய்ய வேண்டும்.
எதற்கெடுத்தாலும் சண்டையிடும் ஒருவருடன் நட்பு வைத்து கொள்ள யாரும் தயக்கம் காட்டுவார்கள். கூட வேலை செய்பவர்களுக்கு உபத்திரவமாக, பிரச்சனை உண்டு பண்ணுகிறவர்களாக இருந்தால், யாரும் அவர்களோடு கூட வேலை செய்யக்கூட பயப்படுவார்கள். அப்படிப்பட்டவர்களாக நாம் ஒருபோதும் இருக்க கூடாது. என்னோடு ஒருவர் வேலை செய்கிறார். அவர் ஒவ்வொருவரையும் தன் வாய்க்கு வந்தபடி பேசுவார். தான் என்ன சொல்கிறோம் என்று உணராமல், மற்றவர்களுடைய உணர்வுகளை புண்படுத்தும் வண்ணம் வார்த்தைகளை கொட்டுவார். அவரோடு வேலை செய்ய அனைவருக்கும் பயம். அவரோடு ஷிப்ட் வந்தால், ஐயோ, எப்படி முடிக்க போகிறோம் என்று முந்தின நாளிலிருந்தே பயப்படுவார்கள்! இப்படிப்பட்டவர்களாக இருந்தால் யாருக்கு என்ன பிரயோஜனம்! ‘ஒருவனையும் தூஷியாமலும், சண்டைபண்னாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு’ என்ற வார்த்தைகளின்படி நாம் ஒருவரோடும் சண்டை பண்ணாமலும், ஒருவரையும் தூஷிக்காமலும், அனைவரோடும் சமாதானமும், சந்தோஷமுமாய் இருக்கவும், ஒருவருக்கொருவர் ஜெபம் செய்யவும், ஒருவரையொருவர் வாழ்த்துதல் சொல்லியும், ஒருவர் பாரத்தை மற்றவர் சுமக்கவும், ஒருவரிலொருவர் அன்பு கூறவும் செய்வோம். தேவன் இப்படி செய்கிறவர்களை நேசிக்கிறார். இப்படிப்பட்டதான குணாதிசயங்கள் நம் ஒவ்வொருவரிலும் காணப்பட தேவன் தாமே ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக. ஆமென் அல்லேலூயா!

மாயமற்ற அன்பு செய்வோமே
தீமையற்ற வாழ்வு வாழ்வோமே
நன்மையை நாம் பற்றி கொள்வோமே – பிறரை
கனம் பண்ண முந்தி கொள்வோமே

ஜெபம்:

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் சண்டை பண்ணுகிறவர்களாக இராமல், அனைவரோடும் சமாதானமும், சந்தோஷமுமாய் இருக்க உதவி செய்யும். அனைவரையும் அரவணைத்து, மாயமற்ற அன்பினை வெளிப்படுத்தவும், மற்றவர்களின் பாரத்தை சுமந்து, மற்றவர்களோடு ஒற்றுமையோடு வாழ உதவி செய்யும்.   எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.