பயப்படாதிருங்கள்

பயப்படாதிருங்கள்

நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார். –  (ஆதியாகமம் 15:1).
இந்நாட்களில் பயம் என்னும் காரியம் மனிதனை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. சிலருக்கு எதையெடுத்தாலும் பயம். சிலருக்கு இருட்டைக் கண்டால் பயம், சிலருக்கு வியாதியைக் குறித்து பயம், சிலருக்கு எதிர்காலத்தை நினைத்து பயம் இப்படி பயம் பல விதங்களில் மனிதனுக்கு வருகிறது.
ஒரு வாலிபன், அவனுக்கு ஒரு வியாதியும் இல்லை, ஆனால் தனக்கு எப்போதும் நெஞ்சில் வலியிருப்பதைப் போல ஒரு உணர்வு, தான் சீக்கிரம் மரித்துவிடுவோமோ என்று பயம். அதனால் தினமும் ஆஸ்பத்திரிக்குச் சென்று, தினமும் ECG எடுத்துப் பார்த்து திருப்திபட்டுக் கொள்வான். அங்குள்ள டாக்டர்களும் நர்சுகளும் இவன் வந்தால், தினமும் ECG  எடுக்கத்தான் வருகிறான் என்று ஆரம்பத்தில் அக்கறையாக கவனித்தவர்கள், பிற்பாடு ஒரு வருடகாலமானபோது, அவனை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். ஏனென்றால், அவனுடைய ECG  எப்போதும் நார்மலாக இருந்தது.  ஒரு நாள் அவன், உண்மையில் நெஞ்சுவலியுடன் வந்தபோது, அவனை கவனிப்பார் இல்லை.  எல்லாரும் மற்ற நோயாளிகளுடன் பிஸியாக இருந்தபடியால், அவன் எப்போதும் வருகிறவன்தானே என்று மெத்தனமாக விட்டுவிட்டார்கள். ஆனால் அவன் உண்மையாகவே நெஞ்சுவலிவந்து, அந்த நாளில் மரித்துப் போனான். இது உண்மையில் நடந்த சம்பவம். யோபு  சொல்வதுப் போல ‘நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது’ –  (யோபு 3:25) அந்த வாலிபனுக்கு நேரிட்டது.
இன்னும் சிலருக்கு இந்த வியாதி தனக்கு வந்து விடுமோ, கேன்சர் வந்து விடுமோ, இரத்த பரிசோதனை செய்யும் போது ஏதாவது ஒரு லெவல் அதிகமாக வந்துவிட்டால் போதும், உடனே தனக்கு இருதய வியாதி வந்து விடுமோ என்று பயங்கர பயம். இது கிறிஸ்தவர்களையும் அதிகமாய் பாதிக்கிறது என்றால் மிகையாகாது. வியாதி வருவதைக் குறித்து மாத்திரமல்ல, அது வந்தால் தான் சீக்கிரம் மரித்துப் போய் விடுமோ என்பதுதான் மிகப் பெரிய பயம்.
நான் சில நேரங்களில் மரிக்கும் மனிதர் முன்பு இருந்திருக்கிறேன். அவர்கள் மரிப்பதற்கு முன்பு தங்கள் கைகளை ஆட்டி போராடுவதை கண்கூடாக கண்டிருக்கிறேன். அப்போது நான் நினைப்பது உண்டு, சாவின் தூதன் வரும்போது, இவர்கள் சாகாதபடிக்கு அவனோடு போராடுகிறார்கள் என்று. மரித்தப்பின் அவர்களின் முகத்தில் வேதனையின் சாயல் தெரியும். கிறிஸ்து இல்லாமல் மரிக்கும் மானிடருக்கு சாவைக் குறித்த நம்பிக்கை இல்லை. நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக (எண்ணாகமம் 23:10) என்று பிலேயாம் தீர்க்கதரிசி வேண்டுகிறான். அநேக பரிசுத்தவான்கள், தங்கள் சாவு மிகவும் பயங்கரமாக, கொடியதாக, சித்தரவதை செய்யப்பட்டு மரித்தாலும், சந்தோஷமாக தங்கள் ஜீவனை ஒப்புக் கொடுத்தார்கள். ஏனென்றால் தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்ளூ என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான். (மத்தேயு 16:25) என்பதை அவர்கள் அறிவார்கள்.
பிரியமானவர்களே, நம்மைப் படைத்த தேவன் யார் என்கிற அறிவு நமக்கு இருக்க வேண்டும். அவர் சர்வ வல்லமையுளள் தேவன். அவர் சித்தமில்லாமல் நம் தலையிலிருந்து ஒரு முடிக் கூட கீழே விழுவதில்லை. அப்படி இருக்கும்போது, நாம் எதைக் குறித்தும் ஏன் கவலைப்பட வேண்டும்? பயப்பட வேண்டும்? ஜீவனுள்ள தேவன் நம்மோடு கூட இருக்கும்போது இருளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்? இருள் நம்மை சூழ்ந்தாலும் அவர் வெளிச்சமாய் நம்மைக் காத்துக் கொள்வாரே! இந்த உலகத்தில் இருக்கிறவனிலும் நமக்குள் இருக்கிறவர் பெரியவர். பெருங்காற்று அடித்து, கடல் கொந்தளித்தபோது, சீஷர்கள் பயந்திருக்கும்போது பயப்படாதிருங்கள் என்று சொல்லி அவர்களை கரைசேர்த்த தேவன் (யோவான் 6:18-21) இன்றும் நம் வாழ்க்கையில் வரும் கொந்தளிப்புகளையும், புயல்களையும் அடக்கி, நம்மை கரை சேர்க்க வல்லவராயிருக்கிறார். வேதாகமத்தில், 365 தடவை பயப்படாதிருங்கள் என்று தேவன் நம்மை ஆறுதல்படுத்துகிறார். அது வருடத்தின் ஒவ்வொரு நாளும் நம்மை பயப்படாதிருங்கள் என்று ஆறுதல் படுத்துவதற்கு சமம்.  தேவன் நம்மை நேசிப்பதால் நம்மை பயப்படாதிருங்கள் என்று தேற்றுகிறார்.
ஆகவே எதைக் குறித்தும் பயப்படாதிருங்கள். யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும்,  இஸ்ரவேலே,  உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப்பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன். – (ஏசாயா 43:1).  என்று நம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளவர், அவர் நம்மை கடைசி பரியந்தம் காத்துக் கொள்ள வல்லவராயிருக்கிறார்.
அநேகருக்கு எதிர்காலத்தை குறித்த பயம்! எதிர்காலம் நமக்குண்டு, அதனால் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. நம்மை உள்ளங்கைளில் வரைந்து நம்மை பாதுகாக்கிற தேவன் நமக்கு உண்டு.  நம் ஜீவனைக் குறித்தும் நமக்கு என்னவாகுமோ என்றும் நாம் பயப்படக் கூடாது. தேவனை ஏற்றுக் கொண்டவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. இன்று நாம் மரித்தால் நாம் தேவனோடு இருப்போம். மரிக்காவிட்டால் தேவ்ன நம்மோடு கூட இருக்கிறார். ஆதலால் நாம் அஞ்ஞானிகளைப் போல பயப்படக்கூடாது. நம் காலங்கள் நம் கர்த்தருடைய கரங்களில் இருப்பதால் எதைக் குறித்தும் பயப்படாமல், எல்லாவற்றையும் தேவன் மேல் வைத்து அவருக்கென்று வாழ்வோம். பயப்படாமல் வாழ்வோம். ஆமென் அல்லேலூயா!
பயப்படாதே வலக்கரத்தாலே தாங்குவேனே
என்றதாலே ஸ்தோத்திரம்
பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
எவரும் பறிக்க இயலாதென்னை

ஜெபம்:

எங்களை பயப்டாதிருங்கள் என்று சொல்லி தேற்றுகிற எங்கள் நல்ல கர்த்தாவே, உம்மைத் துதிக்கிறோம். நீர் எங்களுடன் இருக்கும்போது நாங்கள் எதைக் குறித்தும் பயப்பட தேவையில்லையே, நீர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வீரே அதற்காக உம்மைத துதிக்கிறோம். இந்நாட்களில் இருக்கிற பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தங்கள் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று தவிக்கிற ஒவ்வொருவரையும் உம்முடைய வார்த்தைகளினால் தேற்றுவீராக. ஆறுதல் படுத்துவீராக. அவர்களுடைய தேவைகளை சந்திப்பீராக. அவர்களுடைய எதிர்காலம் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய உம்மிடத்தில் உள்ளது என்பதை உள்ளத்தின் ஆழத்தில் விசுவாசிக்க அவர்களுக்கு உதவிச் செய்வீராக.   எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.