உண்மையான மனத்தாழ்மை
மாயமான தாழ்மையிலும் …கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள். – (கொலோசேயர் 2:19)..
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் ஊழியம் பால் என்பவர் உண்மையாக கர்த்தருக்கு ஊழியம் செய்து வந்தார். அவருடைய ஊழியத்தின் நாட்களில் தேவன் அவருக்கு ஒரு தரிசனத்தை காண்பித்தார். அதில் பரலோகத்திற்கு செல்ல ஏழு படிக்கட்டுகள் இருப்பதை கண்டார். அதில் முதலாவது படியில், ‘தாழ்மை’ என்று எழுதப்பட்டிருந்தது. இயல்பாக அவர் அடுத்த படியில் வேறொரு தெய்வீகத்தகுதி எழுதப்பட்டிருக்கும் என்று எதிர்ப்பார்த்தார். ஆனால் பெரும் வியப்புக்கிடையில் அங்கேயும் தாழ்மை என எழுதப்பட்டிருந்தது, அவர் நிமிர்ந்து பார்த்போது ஏழு படிகளிலும் தாழ்மை என்று எழுதப்பட்டிருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டு போனார். அது அவருடைய முழு வாழ்வையும் மாற்றியது. அவர் தாழ்மையுள்ளவராக மாறினார். உயர்ந்த கல்வித்தகுதி எதுவுமில்லாத அவரது ஊழியம் உலகின் நான்கு திசைகளிலும் பரவியது. அந்த ஊழிய வெற்றிக்கு காரணம் அவரிடம் காணப்பட்ட தாழ்மையே ஆகும்.
கிறிஸ்துவை போன்ற தாழ்மை நம் உள்ளத்தில் காணப்படுமென்றால் தேவன நம்மை உபயோகப்படுத்துவது நிச்சயம். நம்மை கர்த்தர் உயர்த்தும்போது எந்த அளவு நம்மை தாழ்த்துகிறோமோ அந்த அளவு அவர் நம்மை உயர்த்துவார். பரிசேயனைப் போல அல்ல, ஆயக்காரனை போல உண்மையாய் நம் நிலையை உணர்ந்து, நம்மை தாழ்த்தும்போது, ‘அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்’ என்றார் (லூக்கா 18:14) என்று கர்த்தர் நம்மை பார்த்தும் கூறுவார்.
தாழ்மையுள்ள இருதயத்தோடு நாம் வாழ பிரயாசமெடுக்கும்போது தாழ்மையில் பெருமை அடைந்து விடாதபடிக்கு கவனமாயிருக்க வேண்டும். அதாவது இவர் மிகவும் தாழ்மையுள்ளவர் என பிறர் உங்களை பற்றி கூறும்போது, ‘நான் மற்றவரை விட தாழ்மையுள்ளவன்’ என உள்ளத்தில் பெருமை கொள்ள செய்யும் பிசாசின் வஞ்சகத்திற்கு இடம் கொடாமலிருக்க எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.
வேதத்திலே இருவகையான தாழ்மையை குறித்து காண முடியும். ஒன்று மெய்யான மனத்தாழ்மை, மற்றொன்று மாயமான தாழ்மை. இந்த மாயமான தாழ்மையுள்ளவர்களின் செயல்கள் எல்லாம் தாழ்மையாக இருப்பதைப் போல இருக்கும். ஆனால் மனதில் தாழ்மை என்ற எண்ணமே இருக்காது. வெளி மனிதர்கள் மெச்சும்படி தாழ்மையாக நடந்து கொள்ளும் அவர்களால் குடும்பத்தில் அதை தொடர முடியாமல் தங்கள் சுயரூபத்தை காட்டி விடுவர். தேவ ராஜ்யத்தை அடைய இது ஒரு போதும் உதவாது.
சமீபத்தில் செய்தித்தாளில் ஒரு செய்தி வந்திருந்தது. அதில் ஒரு 32 வயது வாலிபர் தன் குடும்பத்தை விட்டு, வேறு இடத்தில் வார இறுதியை செலவிட தனிமையாக சென்றிருந்தார். குடும்பத்தினர் அதை அறிந்திருந்தாலும், அது வழக்கமான நிகழ்ச்சி என்று இருந்து விட்டனர். நான்கு நாட்கள் கழித்து, அவருடைய சகோதரர்கள் சென்று பார்த்த போது, அவர் எழுந்தரிக்கவில்லை.
அப்படியே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதை பார்த்த டாக்டர்களும், நர்சுகளும் மூர்ச்சித்து போயினர். நாற்றம் பொறுக்க முடியவில்லை, வாயிலிருந்தும், மூக்கிலிருந்தும் புழுக்கள் வந்து கொண்டிருந்தன. உடல் வீக்கம் கண்டு, கறுப்பாகி இருந்தது. நான்கு நாட்களுக்கு முன்பே மரித்திருக்க வேண்டும்!
நான்கு நாட்கள் நம் நாசியில் சுவாசம் இல்லை என்றால் புழுக்கள் வந்து விடுகிற இந்த சரீரத்தில், நாம் மேன்மை பாராட்ட என்ன இருக்கிறது? எதை குறித்து நாம் மேன்மை பாராட்ட முடியும்? நம் அழகை பற்றியா? நம் ஐசுவரியத்தை பற்றியா? நம் பிள்ளைகளின் கல்வியை பற்றியா? எல்லாமே மாறிப் போகிற உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மில் வாழும் கிறிஸ்துவை தவிர நாம் மேன்மை பாராட்டும் எல்லாமே வீண்தான்!
நாம் மெய்த்தாழ்மையுடையவர்களாக மாற வேண்டுமானால் அதற்கு தேவ பெலத்தோடு பிரயாசம் எடுப்பது மிகவும் அவசியம். இயல்பாகவே நம் இருதயம் இறுமாப்புடைய சிந்தையோடுதான் இருக்கிறது. கொஞ்சம் மற்றவர்களை பார்க்கிலும் உயர்த்தப்பட்டால், உடனே பெருமையான எண்ணங்கள் நம் இருதயத்தில் வந்து விடுகிறது. ‘நான் மற்றவர்களை போல அல்ல, நான் உயர்ந்தவன்’ என்கிற எண்ணம் மனதில் அடித்தளத்தில் வந்து விடும். வெளியே காட்டாவிட்டாலும், மனதில் அப்படிப்பட்ட எண்ணம் இருந்தாலும், நம் உள்ளிந்திரியங்களை ஆராய்ந்து அறிகிற தேவனுக்கு முன்பாக மறைந்திருக்க மாட்டாது. ஆகவே வெளியில் மாத்திரமல்ல, உள்ளான இருதயத்திலும் உண்மையான தாழ்மை நமக்குள் காணப்பட வேண்டும். நாம் ஜெபத்தில் நாம் தேவனை நெருங்க நெருங்க, அவரை கிட்டி சேர சேர, அவருடைய பரிசுத்தத்தை நம் இருதயத்தில் உணரும்போது, அவருடைய முகப்பிரகாசம் நம்மேல் படும்போது மட்டுமே, நம் அபாத்திர தன்மையை உணர்ந்து மெய் மனத்தாழ்மையால் நிரப்பப்பட முடியும்.
அப்படிப்பட்ட நம்முடைய அபாத்திர தன்மையை உணர்ந்து, நமக்குள் வருகின்ற தாழ்மையின் குணத்தினால், நம்மிடத்திலிருந்து வெளிவரும் செயல்கள் நமக்குள் வாழ்கிற கிறிஸ்துவை பிறருக்கு எடுத்துக் காட்டும். அதை போன்ற தாழ்மையிலே நாம் வளர்ந்து கனி கொடுக்க தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!
எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
எங்களைத் தரைமட்டும் தாழ்த்துகின்றோம்
தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும்
உம் ஜீவன் தந்தீரன்றோ
எங்களைத் தரைமட்டும் தாழ்த்துகின்றோம்
தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும்
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, மாயையான தாழ்மை எங்களுக்கு வேண்டாம் தகப்பனே, உண்மையான தாழ்மை எங்களுக்குள் காணப்பட வேண்டுமே ஐயா. நாங்கள் எதை குறித்தும் மேன்மை பாராட்டாதபடி, எங்கள் தேவனுடைய நாமத்தை குறித்தே மேன்மையும், பெருமையும் கொள்ளத்தக்கதாக கிருபை செய்யும். பரலோகத்திற்கு செல்லும் படிகளில் எல்லாவற்றிலும் தாழ்மை என்றே இருக்கிறபடியால் எங்களை தரை மட்டும் தாழ்த்தி, உண்மையான தாழ்மையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.