இருதயத்தை காத்துக்கொள்

இருதயத்தை காத்துக்கொள்

எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும். – (நீதிமொழிகள் 4:23).
ஸ்டீவ் இர்வின் என்பவரின் பெயரை சொன்னால் ஒருவேளை யாருக்கும் தெரியாது. ஆனால் Crocodile Hunter  என்றால் ஓ, அவரா என்று சொல்வார்கள். அந்த மனிதர் முதலைகளை பயமுமில்லாமல் தன் கையில் எந்த ஆயுதங்களும் இல்லாமல், அவற்றை தனியாக சென்று பிடித்து கொண்டு வருவதால் அவருக்கு அந்த பெயர் வந்தது. அநேக விஷ பாம்புகளையும் கையில் பிடித்து அவர் விளையாடியதுண்டு.
2006ம் வருடம் ஒரு நாள் கடலுக்கடியில் வாழும் மீன்களையும், மற்றவற்றையும் குறித்து அவர் நீரில் மூழ்கி கவனித்து கொண்டிருந்தபோது, stingray என்ற சொல்லப்படும் ஒருவகை மீனினம் தன் வாலினால் அவருடைய இருதயத்தில் குத்தினபடியால், அவருடைய இருதயத்திலுள்ள முக்கிய இரத்த நாளம் வெடித்து, ஒரு நிமிடத்தில் அவர் மரித்தார். மில்லியன் மக்களில் ஒருவருக்கு இந்த மாதிரியான மரணம் நேர்வதுண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அந்த மீனினத்தின் வாலில் விஷம் எதுவும் கிடையாது. ஆனால் அந்த வாலிலுள்ள எலும்புகள் மிகவும் கூர்மையானவை. அவை நேரே இருதயத்திற்குள் பாய்ந்து, இரத்தநாளங்களை வெடிக்க செய்பவை.
உடலில் வேறு இடத்தில் அந்த எலும்பு அடித்திருந்தால் ஒருவேளை அவர் பிழைத்திருக்கக்கூடும். ஆனால் அவருடைய இருதயத்தில் அடித்ததால் ஒரு நிமிட நேரத்தில் இரத்தம் முழுவதுமாக வெளிவந்து, உடனடி மரணம் நேரிட்டது.
‘எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்’  என்று வேதம் கூறுகிறது. ஆம், எல்லா காவலோடும் இருதயத்தை காத்து கொள்ள வேண்டும். ஏனெனில் சத்துருவானவன் இருதயத்தில் தான் வந்து களையை விதைத்து போகிறான். இருதயத்தில் தான் கவலைகளையும், அசுத்தங்களையும், காம விகாரங்களையும், மன்னிக்க முடியாத தன்மைகளையும், பயத்தையும் எல்லா முறைகேடுகளையும் விதைத்து போகிறான். நாம் நம் இருதயத்தை அவனுக்;கு திறந்து கொடுக்கும்போது, அவன் வந்து நம் வாழ்வையே கெடுத்து போடுகிறான். எல்லா காவலோடும் இருதயத்தை காத்து கொள்ளாத பட்சத்தில், கவலைகளும், அழுத்தங்களும், அசுத்தங்களும் பயங்களும் நம் இருதயத்தை அழுத்தி, அதினால் (ஆவிக்குரிய) மரணமும் ஏற்படலாம்.
அவன் அப்படி வந்து இருதயத்தில் விதைக்க வரும்போது, எல்லா காவலோடும் நம் இருதயத்தை காத்து கொள்வோமானால், நாம் அவனுடைய கண்ணிகளுக்கு விலகி ஜீவிக்க முடியும். கவலையை அவன் கொண்டு வந்தால், கர்த்தருடைய வசனம் நம் உள்ளே இருக்கும்போது,  நாம் உடனே, ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை  உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள் என்று இயேசுகிறிஸ்து சொன்ன வார்த்தையை சொல்லி, கவலையை நம் இருதயத்தில் குடிவராதபடி காத்து கொள்ள முடியும். அசுத்தமான எண்ணங்களை கொணடு வரும்போது, என் தேவன் பரிசுத்தர், ஆகவே நானும் பரிசுத்தமாய் என்னை காத்து கொள்ள வேண்டும் என்று அந்த அசுத்த எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ஒரு மனிதன் மரிக்க நேர்ந்தால், அவனுடைய இருதயத்தை துடிக்க வைக்க வைத்தியர்கள் மிகவும் பாடுபடுகிறார்கள். ஏன் அப்படி பாடுபடவேண்டும், மூன்று அல்லது நான்கு நிமிடங்களுக்குள் இருதயம் திரும்பவும் பழைய மாதிரி துடிக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் நின்று போய், மூளை வேலை செய்ய ஆரம்பிக்காது. மூளை வேலை செய்யாவிட்டால், நம் உடலும் வேலை செய்யாது. ஒருவேளை மூளைக்கு இரத்தம் செல்வது நின்று விட்டப்பிறகு, மூளை மரித்து போயிருந்தாலும், இருதயத்தை அதன்பின் துடிக்க வைத்து, வைத்தியர்கள் வெற்றி பெறலாம். அதினால் ஒரு பயனும் இல்லை. இருதயம் ஒருவேளை துடிக்கலாம், கிட்னி ஒருவேளை செய்யலாம், மற்ற உள் உறுப்புகள் வேலை செய்யலாம், ஆனால் சரீரம் வேலை செய்யாது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் படுத்த படுக்கையாக இருக்க வேண்டியதுதான். அதனால் இருதயம் சரியானபடி துடிக்க வேண்டும்.
பிரியமானவர்களே, நம் இருதயத்தை ஆவிக்குரிய வாழ்விலும் சரியானபடி இருக்கும்படியாக நாம் பாதுகாத்து கொள்ள வேண்டியது மிக அவசியம். நம் ஆவிக்குரிய வாழ்வின் இருதயத்தை நாம் சீராக பாதுகாத்து கொள்ளாத நிலையில் விட்டு விடுவோமானால், நம் மூளையில் தேவையில்லாத காரியங்கள் சிந்திக்க வைத்து, பாவ காரியங்களுக்கு அடிமையாகிப் போவோம். பின் ஆவிக்குரிய மரணம் நேரிட்டபிறகு இருதயம் என்ன சொன்னாலும் அதை கேட்கும் நிலையில் நாம் இருக்க மாட்டோம், பின் இருதயமும் கடினப்பட்டு போய் விடும். தேவ கிருபையை இழந்துவிடும் பரிதாப நிலைமைக்கு சென்று விடுவோம்.
ஆகவே நம் இருதயத்தை எல்லா காவலோடும், பாவத்திற்கும், அசுத்தத்திற்கும், கவலைகளுக்கும் பயத்திற்கும் விலக்கி காத்துகொள்வோம். அப்பொழுது அதினிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும். ஆமென் அல்லேலூயா!
காத்துக்கொள் காத்துக்கொள் – உன்
இருதயத்தை எல்லா காவலோடும் காத்துக்கொள்
பொருட்கள் மேலே இதயம் போச்சுனா
போச்சய்யா உன் அபிஷேகம்
ஆட்கள் மேலே இதயம் போச்சுனா
அம்போதான் உன் அபிஷேகம்

ஜெபம்:

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த நாளிலும் எங்கள் இருதயத்தை எல்லா காவலோடும் காத்து கொள்ள ஆவியானவரின் கிருபையை தருவீராக. இருதயம் கடினப்பட்டு நாங்கள் உமது கிருபையை இழந்து போய் விடாதபடி, எங்கள் இருதயத்தை கவனமாக காத்து கொள்ளவும், எந்த காரியத்திற்கும் அடிமையாகி போய் விடாதபடியும் காத்து கொள்ள கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.