கொல்லப்படும் ஜீவன்கள்
உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்; நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள். – (ஏசாயா 1:16-17).
கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி அமெரிக்காவில் ஒரு சினிமா தியேட்டரில் புதிய படத்தை முதலாவது பார்த்து விட வேண்டும் என்ற வாஞ்சையோடு வந்து பார்த்து கொண்டிருந்தவர்கள் மேல் கண்மூடித்தனமாக ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் 12பேர் கொல்லப்பட்டும், 58க்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்ததும் நாம் செய்தியில் படித்தும், கேள்விப்பட்டும் இருக்கிறோம்.
அநியாயமாக ஒன்றுமறியாத ஜனங்களை இப்படி செய்துவிட்டானே என்று நாம் வருத்தப்பட்டோம். அமெரிக்காவில் இப்படிப்பட்டதான கொலைகள் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறதே. இதை தடுக்க எந்தசட்டமும் ஒழுங்கும் இல்லையா என்கிற ஆதங்கமும் அங்கலாய்ப்பும் நம் அனைவருக்கும் ஏற்படுவது இயற்கையே! அநியாயமாய் தங்களுக்கு பிரியமானவர்களை இழக்க கொடுத்தோர் எத்தனையாய் அங்கலாய்த்திருப்பார்கள்? அவர்களை கொன்றவன் மிருகம் போன்றவன், இருதயம் இல்லாதவன் என்று பலவிதங்களில் அவனை தூற்றி நாம் நம்மையே ஆறுதல்படுத்த நினைத்தாலும், மனம் அடங்குவதில்லையே!
இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, அதே இடத்தில் 15 மைல்கள் தள்ளி ஒரு ஆஸ்பத்திரியில் தினந்தோறும் அபார்ஷன் என்ற பெயரில் 15லிருந்து, 20 கொலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன! இப்படி ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் நடைபெற்றால் எத்தனை ஜீவன்கள் தினமும் கொல்லப்படுகின்றன? இந்த கொலையை நடத்துகிறவர்கள் கொலை வெறி பிடித்தவர்கள் இல்லை, மருத்துவர்கள் என்ற போர்வையில் இருக்கும் ஓநாய்கள்! ஒன்றும் தெரியாத ஒரு பாவமும் அறியாத கருக்களை உயிர்களை அவர்கள் கலைத்து, சிதைத்து, கொன்று கொண்டிருக்கிறார்கள்!! துப்பாக்கியால் கொன்றவன், ஈவிரக்கமற்ற கொலை பாதகன் என்றால், சின்னஞ்சிறு சிசுக்களை கர்ப்பத்திலேயே கொல்லும் இவர்கள் யார்?? இதற்கு அரசும் ஆதரவு தருகிறது! தேவ கோபம் இறங்கி வராமல் இருக்குமா?
இந்தியாவிலும் கருக்கலைப்பு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஆறுமாத கருவையும், முழு வளர்ச்சி அடைந்து இருக்கிற கருக்களையும் தயங்காமல், மிஷன் ஆஸ்பத்திரி என்று சொல்லப்படுகிற கிறிஸ்தவ ஆஸ்பத்திரிகளிலும் நடந்து கொண்டிருக்கிறது. பணத்தை எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று இந்த ஆஸ்பத்திரிகளும் இந்த மாதிரி சம்பங்கள் நடக்க அனுமதிக்கின்றன. பெண் குழந்தை என்றால் கரு எத்தனை மாதங்களானாலும் கலைத்து விட பெற்றோரும், அதற்கு துணையாக வைத்தியர்களும், ஒரு சில கிறிஸ்தவ ஆஸ்பத்திரிகளும் இருக்கின்றன! எத்தனை வெட்கம்!!! இதே ஆஸ்பத்திரியில் இதை போன்ற ஆபரேஷன்களை செய்யும் வைத்தியர்களுக்கு உதவி செய்ய மாட்டோம் என்று மறுத்து கர்த்தருக்காக நிற்கிற செவிலியர்களும் உண்டு! அவர்களின் வைராக்கியம் ஆச்சரியப்படத்தக்கது!
இப்படி கலைக்கப்பட்ட கருக்களின் இரத்தம் கர்த்தரை நோக்கி கூப்பிடும், நீர் நியாயம் செய்யும் என்று கூக்குரலிடும். தேவன் நியாயம் செய்ய எழுந்தாரானால் யார் நிற்க கூடும்?
தேவன் அருவருக்கிற காரியங்களை நாம் செய்யாதபடி நம்மை காத்து கொள்ள வேண்டும். தேவ கோபம் நம் மேலும், நம் பிள்ளைகளின் மேலும் இறங்காதபடி நம்மை காத்து கொள்ள எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த காரியங்களை செய்யாதபடி உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்; நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள் என்ற வார்த்தையின்படி நீதியை செய்வோம். கர்த்தர் அதில் பிரியப்படுவார். ஆமென் அல்லேலூயா!
பாவம் பெருகுதே பாரும் பரன் இயேசுவே
அழியும் மனுக்குலம் அதையும் சந்திப்பீரே
கருவில் தன் ஜீவனை இழந்தோர் ஆயிரமாயிரமாய்
அன்றாடகம் இந்த மண்ணில் அழிந்து சாகின்றாரே
பாவம் பெருகுதே பாரும் பரன் இயேசுவே
அழியும் மனுக்குலம் அதையும் சந்திப்பீரே
அழியும் மனுக்குலம் அதையும் சந்திப்பீரே
கருவில் தன் ஜீவனை இழந்தோர் ஆயிரமாயிரமாய்
அன்றாடகம் இந்த மண்ணில் அழிந்து சாகின்றாரே
பாவம் பெருகுதே பாரும் பரன் இயேசுவே
அழியும் மனுக்குலம் அதையும் சந்திப்பீரே
ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, தேவன் அருவருக்கிற அசுத்தமான காரியங்களை நாங்கள் செய்யாதபடி எங்களை காத்து கொள்ளவும், தேவ கோபத்திற்கு ஆளாகி விடாதபடி நாங்கள் எச்சரிக்கையோடு நடந்து கொள்ளவும் கிருபை செய்யும். தீமை செய்தலை விட்டு ஓயவும், திக்கற்ற பிள்ளைகளின் நியாயத்தை விசாரிக்கவும், நீதியை செய்யவும் கற்று தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.