கிறிஸ்துவோடுக் கூட உடன் சுதந்தரர்
நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். – (ரோமர் 8:17).
ஒரு மனிதர் அநேக இடங்களில் வேலை தேடியும் கிடைக்காமல், பணமோ வசதியோ இல்லாமல், வறுமையினால் நிறைந்தவராய், ஒரு நாள் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார். கடலின் ஓரமாய் அவர் நடந்து சென்றபோது, அவருடைய காலில் ஒரு பாட்டில் இடறியது. அதை அவர் பார்த்தபோது, அதற்குள் ஒரு கடிதம் மடித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த பாட்டிலை உடைத்து பார்த்தபோது, ‘இந்த பாட்டிலை கிடைக்க பெறும் அதிர்ஷ்டசாலிக்கும், என்னுடைய வக்கீலுக்கும் என் முழு எஸ்டேட்டையையும் எழுதி வைக்கிறேன். இருவரும் சரிசமமாக பகிர்ந்து கொள்ளவும்’ என்று எழுதப்பட்டிருந்தது. அதை அப்படி எழுதி அனுப்பியவர் டெய்ஸி சிங்கர் அலெக்ஸாண்டர் என்னும் சிங்கர் தையல் மிஷன் உரிமையாளர்களில் ஒருவர். அவர் 12 வருடங்களுக்கு முன்பு லண்டனில் உள்ள தேமஸ் ஆற்றில் ஒரு பாட்டிலில் இவ்வாறு எழுதி போட்டிருந்தார். அது பன்னிரண்டு வருடங்கள் கழித்து, கலிபோர்னியாவில் உள்ள கடலில், ஜேக் உர்ம் (Jack Wurm) என்னும் வறுமையில் வாடிக் கொண்டிருந்தவரின்; கைகளில் கிடைத்தது. அது அவரை ஒரே நாளில் மிகவும் பெரிய பணக்காரராக மாற்றியது. எத்தனை ஆச்சரியம் பாருங்கள்!
வேதத்தில் நாம் தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுந்ததருமாயிருக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது. எப்படிப்பட்டதான சுதந்தரம் நமக்கு அருளப்பட்டிருக்கிறது? ‘இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்’ (1பேதுரு 1:4). ஆம், அழியாததும், மாசற்றதும், வாடாததுமாகிய சுதந்தரம் கிறிஸ்துவால் நம் ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கிறது. ஆவிக்குரிய வாழ்வில் வறுமையில் வாடும் ஒவ்வொருவரும் கிறிஸ்துவினால் சுதந்தரம் பெற்றவர்களாக, ஐசுவரியவான்களாக தேவன் நம்மை மாற்றியிருக்கிறார்.
டெய்சி சிங்கர் தன் ஐசுவரியத்தை, தன் உயிலை ஒரு பாட்டிலில் போட்டு வைத்தார், ஏனெனில் அவரால் தான் செல்லும் இடத்திற்கு எந்த ஐசுவரியத்தையும் கொண்டு போக முடியாது. அதே போல ஜேக்கும் எதையும் எடுத்துக் கொண்டு போக முடியாது. இந்த உலக ஐசுவரியம் இந்த உலகத்தோடு முடிந்து விடுகிறது. எத்தனை பெரிய ஐசுவரியவானாயிருந்தாலும் ஒன்றையும் தான் மரிக்கும்போது, தனக்காக ஒரு வீட்டை கட்டவோ, தனக்காக சொத்து சேர்த்து வைக்கவோ ஒரு பைசாவையும் கூட எடுத்துச் செல்ல முடியாது.
ஆனால் நமக்கு கிறிஸ்துவினால் அருளப்பட்டிருக்கிற சுதந்தரமாகிய இரட்சிப்போ இந்த உலகத்தில் ஆரம்பித்து, நித்தியத்தை நாம் சென்றடையும்போது, நித்திய நித்தியமாக தொடர்ந்து நாம் அனுபவிக்கும்படியானதாகும்.
பிரியமானவர்களே, வேதத்தில் எழுதப்பட்டிருக்கும் வசனங்கள் எல்லாம் சத்தியமும் உண்மையுமானவைகள். அவைகளுக்கு ஜீவன் உண்டு. அந்த வசனமே நம்மை நியாயம் தீர்க்கும் என்று இயேசுகிறிஸ்து கூறினார். அந்த அற்புத வசனத்திலேயே நாம் கிறிஸ்துவோடு உடன் சுதந்தருமாய் இருக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, கிறிஸ்து பரலோகத்தில் என்னென்ன சுதந்தரிக்கிறாரோ அவற்றை நாமும் அவரோடுக் கூட சுதந்தரிப்போம். அவருக்கு என்னென்ன உண்டோ, அவை அனைத்தும் நமக்கும் உண்டு. ஆனால் அவற்றை பெறுவதற்கு கிறிஸ்துவை நாம் உடையவர்களாக இருக்க வேண்டும். கிறிஸ்து இல்லாத நித்தியம் நரகமே! குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன் (1யோவான் 5:12).
அந்த வசனத்தின் அடுத்த பகுதி, கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும் என்று கூறப்பட்டுள்ளது. நாம் அவருடனே பாடுபட்டால்தான் அவருக்கு கிடைக்கும் மகிமை நமக்கும் கிடைக்கும். அநேகர் இந்நாட்களில் நாம் பாடு அனுபவிக்க வேண்டுவதில்லை, கிறிஸ்து நமக்காக எல்லாவற்றையும் சுமந்து விட்டார் என்று கூறுகின்றனர். ஆம், நம் பாவம் சாபம் எல்லாவற்றையும் கிறிஸ்து சிலுவையில் சுமந்து தீர்த்து விட்டார். அது உண்மைதான், ஆனால் பவுல் எழுதும் போது அவிசுவாசிகளுக்கு எழுதவில்லை, விசுவாசிகளுக்குத்தான் எழுதுகிறார், ‘ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியரும் பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுமாகிய அனைவருக்கும் எழுதுகிறதாவது’ (ரோமர் 1:2). ஆகையால் நமக்கு இந்த உலகத்தில் பாடுகள் வருவதும் உண்மைதான். ‘உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்’ என்று இயேசுகிறிஸ்துவும் கூறினாரே.
நமக்கு பாடுகள் வந்தாலும் நமக்கு இருக்கிற நம்பிக்கை உலகத்தை ஜெயித்தவர் நம்மோடுக் கூட இருக்கிறார் என்பதுதான். அப்படி இருக்கும்போது, பாடுகள் உபத்திரவங்களை தாங்கி கொள்ளும்படியான கிருபையை நமக்கு அவர் தருகிறார். மட்டுமல்ல, அந்த உபத்திரவத்திலிருந்தும் பாடுகளிலிருந்தும் நாம் வெளியே வரும் வழியையும் நமக்கு காட்டுவார். ஆகவே நம் பாடுகளும், பிரச்சனைகளும் இனிவர இருக்கும் நமது நம்பிக்கையான மகிமைக்கும் சுதந்தரத்திற்கும் ஒருபோதும் ஈடாகாது. ஆகவே பாடுகளின் மத்தியிலும் முறுமுறுக்காமல் நம்மை அதிலிருந்து வெளியே கொண்டு வரும் தேவனை துதிப்போம். ‘நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்’ ஆமென் அல்லேலூயா!
கர்த்தருக்குள் நம் பாடுகள்
ஒரு நாளும் வீணாகாது
அசையாமல் உறுதியுடன்
அதிகமாய் செயல்படுவோம்
வாதை உந்தன் கூடாரத்தை
அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது
நேரிடாது மகளே
ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, கிறிஸ்துவுடனே நாங்கள் உடன் சுதந்தராய் நீர் தகுதியில்லாத எங்களுக்கு பாராட்டுகிற கிருபை எத்தனை பெரியது ஐயா. அந்த சுதந்தரத்தை நாங்கள் பெற்றுக் கொள்ளத்தக்கதாக கிறிஸ்துவுடனே பாடுகளையும் அனுபவிக்கவும், அவற்றின் மேல் வெற்றிப் பெற்று அவரோடுக் கூட என்றென்றும் சுதந்தரத்தை அனுபவிக்கிறவர்களாக வாழ கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.