காணாமற்போன வெள்ளிக்காசு

காணாமற்போன வெள்ளிக்காசு

அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி,  அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ? கண்டுபிடித்தபின்பு,  தன் சிநேகிதிகளையும் அயல்வீட்டுக்காரிகளையும் கூடவரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா?.  –  (லூக்கா 15:8-10).
மேற்கண்ட உவமையில், ஒரு வெள்ளிகாசு காணாமற்போனபோது அந்த பெண் ஜாக்கிரதையாக தேடுவதைக் காண்கிறோம். நாம் நினைக்கலாம்,  என்ன ஒரு வெள்ளிக்காசுதானே என்று. ஆனால் இயேசுகிறிஸ்து வாழ்ந்த அந்நாட்களில், அத்தேசத்தில் இருந்த கலாச்சாரத்தை நாம் பார்க்கும்போது,  அது எவ்வளவு முக்கியமானது என்று விளங்கும்.
 
ஒரு பெண்ணை திருமணம் செய்தப்பின் கணவன்,  அப்பெண்ணுக்கு பத்து வெள்ளிக்காசுகளால் ஒரு செயினை போல செய்து,  அதை அப்பெண்ணிடம் கொடுத்து,  தங்கள் திருமணத்தை உறுதி செய்வான். அதை அந்த பெண் தன் நெற்றியில் அணிந்து கொள்வாள். இக்காலத்தில் கைகளில் மோதிரம்போடுவதை போன்று, அக்காலத்தில் கல்யாணம் ஆன பெண்கள் அந்த வெள்ளிக்காசை தங்கள் நெற்றிகளில் அணிந்து கொள்வார்கள். அதில் ஒரு வெள்ளிக்காசு காணமற்போனால் அது அவள்தன் கணவனுக்கு துரோகம் செய்ததாக கருதப்படும். ஆகையால், ஒரு வெள்ளிக்காசு காணாமற் போகும்போது, அப்பெண் தன்னுடைய எல்லா வேலைகளையும் நிறுத்திவிட்டு எப்படியாவது அந்த வெள்ளிக்காசை தேடி கண்டுபிடித்து தன் திருமணத்தை காப்பாற்ற முயலுவாள். அதை கண்டுபிடிக்கும் வரைக்கும் அவளுக்கு வேறு எதுவும் ஓடாது. ஏனெனில் அவளுடைய நடத்தையை குறித்தே சந்தேகம் வரும்பட்சத்தில் அவள் அதை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று விளக்கைக் கொளுத்தி,  வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடுவாள் அல்லவா?  கண்டுபிடித்தபின், அதை மீண்டும் தன் நெற்றியில் உள்ள செயினில் கோர்த்து, நிம்மதி பெருமூச்சுடன் மகிழ்வாள். அதைதான் இயேசுகிறிஸ்து உவமையாக, கண்டுபிடித்தபின்பு தன் சிநேகிதிகளையும் அயல்வீட்டுக்காரிகளையும் கூடவரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பாள் என்று கூறினார்.
 
இயேசுகிறிஸ்து இந்த உவமையை கூறியதன் நோக்கம் என்னவெனில், அப்பெண் எப்படி அந்த வெள்ளிக்காசை தேடினாளோ,  அதைப் போல நமது பிதாவும்,  பாவத்தினிமித்தம் காணாமற் போன ஒவ்வொருவரையும் அவர்கள் மனம் திரும்பி, திரும்ப தன்னிடம் வரும்வரைக்கும் தேடுகிறார். அவர் எங்கோ ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு, அவர்களாக என்னிடம் வரட்டும் என்று இருப்பதில்லை. அவர் வெளிச்சமாகிய பரிசுத்த ஆவியானவரை நம் இருதயங்களில் அனுப்பி, நாம் காணாமற்போய் விட்டோம் என்பதை உணர வைத்து, நம்மை அவரிடம் திரும்ப கொண்டு வந்து சேர்க்கவும்,  வெள்ளிக்காசு காணாமற்போய் கிடைத்தபோது,  இழந்த இடத்தில் திரும்பவும் வைக்கப்பட்டதுப் போல நாம் இழந்த இடத்தை திரும்ப பெற்று,  அவரோடு என்றும் வாழும்படியாக நம்மை ஆயத்தப்படுத்தும்படி இன்றும் அவர் பாவத்தில் காணாமற் போன ஒவ்வொருவரையும் தேடி கொண்டே இருக்கிறார். உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து,  அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டு பிடிக்குமளவும் தேடித்திரியானோ?  கண்டுபிடித்தபின்பு,  அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு, வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன் என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?  (லூக்கா 15:4-7).  காணாமற் போன இடத்திலேயே இருந்து கொண்டு, நம் தகப்பனின் வீட்டிலுள்ள ஆசீர்வாதங்களை இழந்து வாழ்வதைவிட நம் பாவ பழக்க வழக்கங்களை விட்டுவிட்டு, நம்மை கருத்தாய் தேடும் அப்பாவிடம் வந்து சேர்ந்துவிடுவோம். அன்று கெட்டகுமாரனை தன்னிடம் சேர்த்துக்கொண்ட தகப்பனைப் போல நம்மை அவர் சேர்த்து கொள்வார். மகனாய் மகளாய் சேர்த்து அணைத்துக் கொள்வார்.
 
அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரேபாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்ற இயேசுகிறிஸ்து கூறினாரல்லவா? அதுபோல நாம் அவரிடம் திரும்ப வரும்போது, அவர் தமது தூதர்களுக்கும், தம்மோடு இருக்கிற மூப்பர்களுக்கும் நாம் திரும்பி வந்த செய்தியை அறிவிப்பார். அப்போது மனந்திரும்புகிற ஒரேபாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்.
 
உலகமும் அதன் ஆசை இச்சைகளும் மாயை. அவைகளை விட்டுவிட்டு, நாம் திரும்ப கிடைக்க வேண்டும் என்று ஆதங்கத்தோடு தேடுகிற தகப்பனிடம் வந்து சேர்ந்து, மகிழ்ந்து களிகூருவோம். அல்லேலூயா!
 
மன்னித்து அணைத்து கொண்டார்
மகனாய் சேர்த்து கொண்டார்
கிருபையின் முத்தங்களால் 
புது உயிர் தருகின்றார்
கோடி நன்றி பாடி கொண்டாடுவோம்
மனமகிழ்ச்சி நல்ல மருந்து 

ஜெபம்:

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, ஒரு ஆடு காணாமற் போனால் அதற்காக தேடி அலைந்து கண்டுபிடித்து மகிழ்ந்து களிகூருகிற நல்ல தேவனே உம்மை துதிக்கிறோம். எங்களை உம்மோடு சேர்ந்து அணைக்கிறவரே உமக்கு நன்றி. அந்த வெள்ளிக்காசை போல்  விசேஷித்தவர்களாக எங்களை நீர் வைத்த தயவிற்காக நன்றி. அதை நாங்கள் உணர்ந்து, உம்மை விட்டு காணாமற்போய் விடாதபடிக்கு எங்களை காத்தருளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.