கிறிஸ்துவைப் பற்றி அறிகிற அறிவு

கிறிஸ்துவைப் பற்றி அறிகிற அறிவு

தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம். – (நீதிமொழிகள் 22:4).
செல்வந்தனான மனிதர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஏராளமான கார்களும், பெரிய மாளிகையும், அநேக வீட்டு வேலைக்காரர்களும் இருந்தார்கள். அந்த மனிதன் கடவுளைக் குறித்து எந்த பயமும் இல்லாதவராக, தன் பணத்தை தன் இஷ்டப்படி அனுபவித்து கொண்டிருந்தார்.
 
அவருக்கு ஜான் என்கிற ஒரு கிறிஸ்தவ வேலைக்காரன் இருந்தார். அவர் வேதத்தை வாசித்து, தினமும் ஜெபித்து கர்த்தருக்கு பயந்து ஜீவிக்கிற மனிதனாக வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவருக்கு தேவன், அந்த ஊரில் உள்ள பணக்கார மனிதன் மரிக்க போகிறான் என்று வெளிப்படுத்தினார்.
 
ஜானுக்கு தெரியும், அந்த ஊரிலேயே மிகவும் பணக்கார மனிதர் தன் எஜமான்தான் என்று. அவருக்காக ஜெபித்து விட்டு, அந்த பணக்காரரிடம் சென்று, ‘ஐயா இன்று நான் ஒரு கனவு கண்டேன், அது என்னை மிகவும் கலங்க வைத்திருக்கிறது. இந்த ஊரில் உள்ள பணக்காரர் இன்று இரவு 12 மணிக்கு மரிக்க போகிறார் என்று தேவன் எனக்கு வெளிப்படுத்தினார். உடனே நான் எழுந்து விட்டேன். ஐயா நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா?’ என்று மிகவும் அக்கறையுடன் கேட்டபோது, ஜானை அந்த பணக்காரர் மேலும் கீழும் பார்த்தார். ஏழ்மையான தோற்றம், பணக்காரரிடம் பேசுவதற்கும் அச்சப்பட்டு பேசினது போலிருந்தது அவருடைய சத்தம், ஆனால் நம்பத்தக்கதான அளவு விசுவாசம் நிறைந்த மனிதர். பணக்காரர் சிரித்து விட்டு, சொன்னார், ‘ஜான் என்னைப் பற்றி கவலைப்படாதே, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்’ என்று கூறிவிட்டு, வீட்டின் உள்ளே சென்று விட்டார்.
 
சற்று நேரம் அங்கே நின்று, கர்த்தரை இவர் ஏற்றுக் கொண்டுள்ளாரா? ஓன்றும் தெரியவில்லையே என்று நினைத்தவாரே, ஜான் அவருக்காக ஜெபித்து விட்டு, தேவன் ஏன் தனக்கு இந்த காரியத்தை வெளிப்படுத்தினார் என்று யோசித்தவாறே தன் வீட்டிற்கு சென்றார். பணக்காரருக்கோ, ஜான் சொன்ன காரியம் உறுத்திற்று. சரி, குடும்ப வைத்தியரை அழைத்து, தன்னை பரிசோரித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து, அந்த வைத்தியரை அழைத்தார்.
 
அந்த வைத்தியரிடம் காரியத்தை சொல்லி, இரவு 12 மணி வரை அவரை தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தவராக, அவரோடு சீட்டு விளையாடிவிட்டு, உலகத்தின் காரியங்களை சுற்றி வலம் வந்து பேசி கொண்டிருந்தபோது, 12 மணியாக ஐந்து நிமிடம் இருந்தது. அந்த கடைசி ஐந்து நிமிடங்கள் அந்த பணக்காரரை இருப்புக் கொள்ளாமல் செய்தது.
 
மூன்று நிமிடம், இரண்டு நிமிடம், கடைசியாக ஒரு நிமிடமும் கடந்து, கடிகாரம் 12 அடித்தது. அந்த பணக்காரர் நிம்மதி பெருமூச்சு விட்டார். தான் சாகவில்லை என்ற உணர்வு அவரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. தன்னோடு இருந்த வைத்தியருக்கு விடைக் கொடுத்து அனுப்பி விட்டு, தன் படுக்கைக்கு சென்று படுத்திருப்பார், வீட்டு வாசலின் மணி வேகமாக அடித்தது. யார் இந்த நடுராத்திரியில் வந்து கதவை தட்டுவது என்று நினைத்தவராக, கதவை திறந்தபோது, ஒரு சிறுமி, கலைந்த தலையுடனும், ஏழ்மையான உடைகளுடனும், அழுது சிவந்த கண்களோடு நின்றிருந்தாள்.
 
பணக்காரர், ‘யார் நீ? உனக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டார், அதற்கு சிறுமி, ‘என் தகப்பனார் சற்று நேரம் முன்புதான் இறந்தார்’ என்று கூறினாள். அந்த பணக்காரர் ‘யார் உன் தகப்பன்?’ என்று கேட்டபோது, அந்த சிறுமி, ‘உங்கள் வீட்டில் வேலை செய்யும் ஜான்தான் என் அப்பா’ என்று கூறினாள். ஜான் தேவனுக்கு பயந்து அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தபடியால், அவரே தேவனுடைய பார்வையில் ஐசுவரியவானாக, விலைமதிப்பற்றவராக காணப்பட்டார்.
 
பிரியமானவர்களே, இந்த உலகத்தின் செல்வம் தேவனுக்கு முன்பாக ஒரு செல்வமே இல்லை. கர்த்தரை அறிகிற அறிவே நமக்கு செல்வமாக இருக்கிறது. கிறிஸ்துவே நமக்கு செல்வமாக,  ஐசுவரியமாக, நமக்கு மகிமையாக, எல்லாவற்றிற்கும் எல்லாமுமாக இருக்கிறார். அதுவே தனக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய ஐசுவரியம் என்பதை உணர்ந்த பவுல் அப்போஸ்தலன், ‘அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்… இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,  அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்’ என்று கூறுகிறார்.
 
அவர் தன்னைக்குறித்து சொல்லும்போது, ‘நான் எட்டாம் நாளிலே விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்; பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன்’ (பிலிப்பியர் 3:5-6) என்று அத்தனை தகுதியுள்ளவரும், மிகவும் படித்தவருமாயிருந்தபோதிலும், கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவிற்காக எல்லாவற்றையும் நஷ்டமும் குப்பையுமாக எண்ணுகிறேன் என்று கிறிஸ்துவை பற்றிய அறிவிற்காக ஏங்குகிறவராக காணப்படுகிறார்.
 
பிரியமானவர்களே, தேவன் விரும்புகிற கிறிஸ்துவை பற்றி அறிகிற அறிவாகிய ஐசுவரியம், அதைக்குறித்ததான தாகம் நமக்குள் காணப்படுகிறதா? கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டேன், இரட்சிக்கப்பட்டு விட்டேன் என்று அந்த நிலையிலேயே நின்று கொண்டிருக்கிறோமா?
 
உலக காரியங்களைக் குறித்த பெருமையே நம்மிடத்தில் காணப்படுகிறதா? நம் வீட்டைக் குறித்தும், நம்முடைய வேலையைக் குறித்தும், நம்முடைய பிள்ளைகளைக் குறித்தும், நம்முடைய ஊழியங்களைக் குறித்துமே நாம் மேன்மையும் பெருமையும் பாராட்டிக் கொண்டிருக்கிறோமா?
 
தேவனுக்கு முன்பாக இவை ஒன்றும் பெரிதல்ல, இவையெல்லாம் ஒரு நாள் மாறிப்போகும். ஆனால் கிறிஸ்துவைக் குறித்த அறிவே அவருடைய பார்வையில் கனமுள்ளதாகவும், ஐசுவரியமானதாகவும் காணப்படுகிறது. அதை பெற்றுக்கொள்ளும்படியாக, நம்முடைய பார்வையில் கனமுள்ளதாக, பெரிய காரியங்களாக தோன்றும் காரியங்களை குப்பையாக எண்ணவும், நஷ்டமென்று விட்டுவிடவும் நம்மால் கூடுமா? அப்படியானால், ‘கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.  அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்’ (சங்கீதம் 112:1-3) என்ற வார்த்தைகளின்படி நம்முடைய வீடும், குடும்பமும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். கர்த்தருக்கு பயப்படும்போதுதான் நம் பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். ஆமென் அல்லேலூயா! 
 
 
என் ஞானம் கல்வி செல்வம் எல்லாம்
ஒன்றுமில்லை குப்பை என்றெண்ணுகிறேன்
என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை
என்றே உணர்ந்தேன் என் இயேசுவே
 
அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே -உம்
அனுக்கிரகம் தர வேண்டுமே
 

ஜெபம்:

எங்களை அதிகமாய் நேசித்து வரும் அன்பின் பரலோக தகப்பனே, இந்த வேளையிலும், கிறிஸ்துவைப் பற்றி அறிகிற அறிவே எல்லா ஐசுவரியத்தைப் பார்க்கிலும் பெரிதாயிருக்கிறது என்பதை அறிந்து கொண்ட நாங்கள், எங்களுடைய மேன்மை எல்லாம் குப்பை நஷ்டம் என்று தள்ளிவிட்டு, கிறிஸ்துவை அறிகிற அறிவையே மேன்மையாக எண்ண கிருபை செய்வீராக. பவுல் அப்போஸ்தலன் தன்னைக் குறித்து மேன்மை பாராட்டிக் கொள்ள அநேக காரியங்கள் இருந்தாலும் ஒன்றிலும் தன்னை மேன்மை பாராட்டாமல், அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன் என்று கூறினாரே, அவரைப்போல நாங்களும் கிறிஸ்துவை அறிகிற அறிவிலே வளர்ச்சி அடைய கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.