அதரிசனமுள்ள தேவன்
தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். – யோவான் 4:24.
இயேசுகிறிஸ்து இந்த பூமியில் அவதரித்து, வாழ்ந்த நாட்களில் ரோம சாம்ராஜ்யம் உலகெங்கும் பரவி இருந்தது. இந்த ரோமர்களின் சிறப்பம்சம் என்னவென்றால், இவர்கள் சகல கலைகளிலும் தேறினவர்கள். குறிப்பாக சிற்பக்கலையில் மிக தேறினவர்களாக இருந்தார்கள். இன்றைய புதைபொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட ரோம மன்னர்களின் சிலைகளை நாம் பார்ப்போமானால், அது நம்மை அசர வைப்பதாக இருக்கும். ஒரு நபரை அப்படியே துல்லியமாக சிலை வடிப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. பளிங்கு கற்களில் ஒரு முகத்தை செதுக்கினார்களானால், கண்களின் மேலுள்ள புருவத்தை முடிகள் போலவே தத்ரூபமாக செதுக்கும் திறன் வாய்ந்தவர்கள். அந்நாட்களில் வாழ்ந்த அத்தனை மன்னர்களின் சிலையும் இவர்களால் செதுக்கப்பட்டிருந்தன.
ஆனால் ஒரு ஆச்சரியமான விஷயத்தை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்தார், மரித்தார், உயிர்த்தெழுந்தார், பரத்திற்கு சென்றார். அவரை ஆயிரக்கணக்கான மக்கள் நேராக பார்த்திருந்தனர். சீஷர்கள் அவரை குறித்து சுவிசேஷங்களை எழுதினார்கள். மத்தேயு எழுதின சுவிசேஷம், மாற்கு எழுதின சுவிசேஷம் என்று வாசிக்கிறோம். ஆனால் இன்னார் செதுக்கிய ஓவியம் அல்லது இன்னார் செதுக்கிய இயேசுவின் சிற்பம் என்று எந்த ஒரு உருவமோ, சிற்பமோ செதுக்கப்படவில்லை. ஏன்? அப்போஸ்தலருக்கு தெரியும், ஒருவேளை அவர் எபபடியிருந்தார் என்று ஒரு சிற்பத்தை உருவாக்கினால், மக்கள் நாளடையில் அந்த சிற்பத்தை ஒரு வணக்கத்திற்குரிய விக்கிரகமாக மாற்றி விடுவர் என்று நன்றாக அறிந்திருந்தனர். ஆகவே அப்படிப்பட்ட ஒரு தவறை அப்போஸ்தலர்களோ, ஆதித்திருச்சபையோ, விசுவாசிகளோ செய்யவில்லை.
இதிலிருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய காரியமென்ன? இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்தபோது, எப்படி இருந்தார் என்ற எந்தவித சரித்திர ஆதாரங்களும் நமக்கு கொடுக்கப்படவில்லை, ஏன் அது நமக்கு தேவையும் இல்லை. இன்று அவர் பிதாவின் வலது பாரிசத்திலே மகிமையாய் வீற்றிருக்கிறார். அவரை தரிசனத்தில் கண்ட யோவான் மரித்தவனை போல விழுந்தார் என்று எழுதப்பட்டுள்ளது. ஒரு நபரை பார்த்தால், ஏன் ஒருவன் மரித்தவனை போல விழ வேண்டும்? இது ஒரு ஆச்சரியமான விஷயம்! அவரோடு இரண்டரை வருடங்கள் கூடவே இருந்து, அவர் செய்த ஊழியத்தை பார்த்து, கிறிஸ்துவுக்கு பிரியமான சீஷனாக அவரது தோளில் சாய்ந்து இருந்த யோவான், மறுரூபமாக்கப்பட்ட கிறிஸ்துவை தரிசனத்தில் கண்ட போது, செத்தவனை போல அவர் பாதத்தில் வீழ்கிறார். ‘ஏழு பொன் குத்துவிளக்குகளையும், அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன். அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப்போலிருந்தது; அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம்போலிருந்தது; அவருடய சத்தம்பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது. தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது’ – (வெளிப்படுத்தின விசேஷம் 1:12-16) என்று யோவான் தான் கண்ட தரிசனத்தில் முற்றிலும் மாறுபட்ட இயேசுகிறிஸ்துவை கண்டவராக கூறுகிறார்.
மனிதராகிய நாம் ஒவ்வொருவரும் ஆவி ஆத்துமா சரீரம் என்னும் மூன்று நிலைகளில் உருவாக்கப்பட்டிருக்கிறோம். இதில் ஆவியையும் ஆத்துமாவையும் எப்படி நாம் காண முடியாது. ஆனால் சரீரத்தை நாம் காணமுடியும். அதுப்போல ஆவியான தேவனை நாம் காண முடியாது. ஆனால் நம்முடைய ஆவியில் நாம் தேவனுடைய தொடுதலை உணர முடியும்.
இயேசுகிறிஸ்து ‘அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும்.’.’ (கொலோசேயர் 1:15) என்று பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார். அப்படி ஆவியான தேவனை ஒரு ஒரு படமாகவோ, அல்லது சொரூபமாகவோ வீட்டில் வைத்துள்ளோமா? அவைகளை உங்கள் வீட்டை விட்டு அகற்றி விடுங்கள். ஒருவேளை சிறுபிள்ளைகளுக்கு இயேசுவின் செயல்களை விளக்க ஞாயிறு பள்ளியில் படங்களை காட்டுவதில் தவறில்லை, இயேசு திரைப்படத்தில் ஒரு மனிதன் நடித்து அவர் வாழ்வை விளக்குவதிலும் தவறில்லை. ஆனால் அவரது படங்களை நாம் வீட்டில் வைத்திருப்போமானால், அது வேதத்திற்கு புறம்பானதாகும், தவறான ஒன்றாகும். ஒரு வேளை நாம் அதை வணங்காவிட்டாலும், நம் வீட்டிற்கு வரும் மற்றவர்கள் வணங்கினாலும் அது பாவமே. தேவன் ஆவியாயிருக்கிறார். ஆகவே ஆவியாயிருக்கிற தேவனை நாமும் ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்வோம். ஆமென் அல்லேலூயா!
ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே
ரூபமில்லையாகையால் சொரூபமொன்றுமில்லையே
வாஞசையுள்ள ஆத்துமாவின் இருதயம் தன்னிலே
வார்த்தையினால் பேசுகின்ற ஆண்டவர் இவர்
என்னை உண்டாக்கிய என் தேவாதிதேவன்
அவர் தூங்குவதுமில்லை உறங்குவதுமில்லை
ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, ஆவியான தேவனாகிய அதரிசனமுள்ள தேவனாகிய உம்மை நாங்கள் எந்த உருவ படத்தை கொண்டோ, சிற்பங்களை கொண்டோ வணங்காதபடி, ஆவியான தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள கிருபை செய்யும். எந்த வீட்டிலாவது, அது போன்ற சுரூபங்கள் இருந்தால் அவற்றை எடுத்துவிட உதவி செய்யும். லிபியா நாட்டில் சமாதானத்தை தாரும். பிரச்சனைகளை மாற்றி போடும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.