அற்பமானவர்களை தெரிந்து கொள்ளும் தேவன்

அற்பமானவர்களை தெரிந்து கொள்ளும் தேவன் 

உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். – (1 கொரிந்தியர் 1:28).
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாள் வசந்தா. தோற்றத்திலும், பேச்சுத்திறமையிலும் யாருடைய கவனத்தையும் ஈர்க்க இயலாதவள். உலகத்தாரால் ஏன் குடும்பத்தாரால் கூட அற்பமாய் எண்ணப்பட்டவள். ஆனால் ஆண்டவருடைய பார்வையில் விலையேறப் பெற்றவளாய், ரூபவதியாய் இருந்தாள். காரணம் கர்த்தருக்கு பயப்படுவதிலும், வேத வசனங்களுக்கு கீழ்ப்படிவதிலும் அவ்வளவு உண்மையாய் காணப்படுவாள். ஒரு அலுவலகத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தபோது. அவளது அப்பாவித்தனத்தினிமித்தம் அனைவரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானாள். அவர்கள் தங்கள் வேலையையும் அவ்வப்போது வசந்தாவின் தலையில் கட்டிவிடுவர். எதுவுமறியாத வெகுளியாக அதையும் முகமலர்வோடு செய்து முடிப்பாள்.
 
அவளுடைய திருமணக்காரியமும் ஒரு எட்டாக் கனியாகவே இருந்தது. இதனிமித்தம் வீட்டிலுள்ளவர்களுக்கு அவள் பாரமாகவே இருந்தாள். பெண் பார்க்க வந்த மாப்பிளளை; வீட்டாரும் அவளது வெளித்தோற்றத்தை வைத்து விலகிச் சென்றனர். ஆனால் மனிதன் பார்க்கிறபடியல்ல, இருதயத்தை பார்க்கிற தேவன் அவளுக்கு யாரும் எதிர்பாராத, பிரகாசமான வாழ்வை கொடுத்தார். அந்த மணமகன் கர்த்தருக்கு பயப்படுகிறவராய், அவளது உள்ளான அழகில் பிரியப்படுகிறவராய்,வெளித்தோற்றத்தையும் முழு மனதாய் ஏற்றுக் கொள்கிறவருமாய் அமைந்தார். இன்றும் அவர்கள் மனமகிழ்வோடு குடும்பமாய் வாழ்கிறார்கள்.
 
இந்த உலகத்தாரின் பார்வையில் அற்பமயாய் எண்ணப்படுபவர்கள் யாரோ, அவர்களை தூசியிலிருந்தும், குப்பையிலுமிருந்து எடுத்து அவர்ளை உயர்த்துவது தேவனுடைய உன்னத திட்டமாகும். காரணம் ஞானிகளும், பலமுள்ளவர்களும் தேவனுக்கு முன்பாக பெருமை பாராட்டாதபடிக்கு அப்படி செய்தார் (1 கொரிந்தியர் 1:26-31) என்றுவேதம் கூறுகிறது. உலகம் ஞானமுள்ளவர்களை, கல்விமான்களை, பெலமுள்ளவர்களை, திறமையானவர்களை, அழகானவர்களை தெரிந்தெடுத்து பதவிகளையும், பொறுப்புகளையும் கொடுக்கிறது. இது உலகத்தின் தெரிந்தெடுப்பு.
 
ஆனால் ஞான சொரூபியான தேவனின் தெரிந்தெடுப்பு வித்தியாசமானது. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி பைத்தியங்களையும், பலவீனமானவர்களையும், இழிவானவர்களையும், அற்பமாய் எண்ணப்படுகிறவர்களையும் அவர் தெரிந்தெடுக்கிறார். ஒருவனை தெரிந்தெடுக்க அவர் பார்க்கும் தகுதியை பாருங்கள், எல்லாராலும் தள்ளப்பட்ட ஆட்டிடையனான தாவீதை முழு இஸ்ரவேலுக்கு ராஜாவாக தெரிந்தெடுத்தார். திக்கு வாயை உடைய மோசேயை முழு இஸ்ரவேலையும் அடிமைத்தன எகிப்திலிருந்து விடுதலையாக்க தெரிந்து கொண்டார். மீதியானவர்களுக்கு பயந்து ஆலைக்கு சமீபமாய் போரடித்துக் கொண்டிருந்த கிதியோனை பராக்கிரமசாலியே என்று அழைத்து, இஸ்ரவேலை அதன் எதிரிகளிடமிருந்து இரட்சித்தார். தேவன் தகுதியுள்ளவர்களை அல்ல, தகுதியில்லாதவர்களை தகுதியுள்ளவர்களாக மாற்றி, தமக்கு என்று உபயோகிக்கிறார். அல்லேலூயா!
 
பிரியமானவர்களே, கூச்சக்கண் உள்ளவளாயிருந்த லேயாள் கணவரால், குடும்பத்தால் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்பதை தேவன் கண்டு, ராகேலின் கர்ப்பத்தை அடைத்து, லேயாளுக்கு பிள்ளைப் பேற்றை கொடுத்தார். நீங்கள் உலகத்தால் அற்பமாய் எண்ணப்படுகிறீர்களோ? யாரும் என்னை சட்டை செய்வதில்லை என்று நினைக்கின்றீர்களோ? நான் எங்கோ ஒரு மூலையில், பூமியின் கடையாந்தரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், யார் என்னை அறிவார் என்று நினைக்கிறீர்களோ? நானும் ஒரு காலத்தில் அப்படித்தான் நினைத்திருந்தேன். தேவன் என்னை தெரிந்து கொண்டாரே! அற்பமாய் எண்ணப்பட்ட என்னை தேவன் தமக்காக தெரிந்து கொண்டாரே, உங்களையும் நிச்சயமாய் காண்கிற தேவன் உண்டு. கலங்காதிருங்கள். சோர்ந்து போகாதீர்கள்.
 
கர்த்தரை நேசிக்கிற இருதயம் உங்களுக்கு இருந்தால், நிச்சயமாக உலகம் முழுவதும் உங்களை வெறுத்தாலும், தள்ளி விட்டாலும், கர்த்தர் உங்களை காண்கிறார். உங்களை தமக்காக தெரிந்து கொள்வார். நீங்கள் உலகத்தின் எந்த மூலையிலிருந்தாலும் தேவன் உங்களை தேடி வந்து, தமக்காக எடுத்து உபயோகிப்பார். அல்லேலூயா!
 
திருமணம் தள்ளிப் போகிறதென்று கலங்காதிருங்கள், நீஙகள் கர்த்தரை நேசிப்பீர்களென்றால், உங்களுக்கென்று தேவன் நியமித்திருக்கிறவர் மற்றவர்கள் ஆச்சரியப்படுமளவு உங்களை ராஜக்குமாரத்தியைப்போல நடத்துபவர் உங்களை தேடி வந்து திருமணம் செய்வார்.
 
தேவன் தம்மை நேசிக்கிறவர்களை அறிவார். அவர் எந்த காட்டில் இருந்தாலும், ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாலும், கர்த்தர் அவர் இருக்கும் இடத்தை அறிவார். அங்கிருந்து அவர்களுடைய தலையை உயர்த்துவார். அவரை நேசிக்கிற ஒவ்வொருவரின் வாழ்விலும் அப்படியே செய்வார். அவரை நம்புகிற ஒருவரும் வெட்கப்பட்டு போக மாட்டார்கள். ஆமென் அல்லேலூயா! 
 
உன்னை விசாரிக்கும் தேவன் உண்டு – உன்
கவலையை அவர்மேல் வைத்துவிடு
கண்ணீர் கவலை தீர்க்கும் தேவன்
உன்னை தேற்றிடுவார்
 
கர்த்தர் உன்னை விசாரிப்பார்
கர்த்தர் உன்னை ஆதரிப்பார்
கர்த்தர் உன்னை தேற்றிடுவார்
கர்த்தர் உன்னை தாங்கிடுவார்

ஜெபம்:

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, என்னை விசாரிப்பார் யார் உண்டு என்று கலங்கி நிற்கிற ஒவ்வொருவரையும் கண்ணோக்கி பார்ப்பீராக. அவர்களையும் தேடி வந்து, ஆசீர்வதிக்கிற தேவன் ஒருவர் உண்டு என்பதை அவர்கள் அறியும்படியாக அவர்களை உயர்த்துவீராக. அற்பமாய் எண்ணப்பட்டவர்களையும், இழிவாய் உலகத்தாரால் எண்ணப்பட்டவர்களையும் தெரிந்துக் கொண்டு அவர்களை கொண்டு உலகத்தையே அசைத்த தேவன் இன்னும் மாறாதவராக இருக்கிறார் என்பதை அவர்கள் உணர்ந்து, தங்களை ஆறுதல்படுத்திக் கொள்ள உதவி செய்யும். அவர்களின் தேவைகளை சந்திப்பீராக. உயர்த்துவீராக.   எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.