இதயங்கள் மலரட்டும், முகங்கள் சிரிக்கட்டும்

இதயங்கள் மலரட்டும், முகங்கள் சிரிக்கட்டும் 

அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். – (சங்கீதம் 126:2).
ஒரு ஆசிரியரும், ஒரு டாக்டரும், ஒரு வக்கீலும் மரித்து, பரலோகம் சென்றார்களாம். அங்கு அவர்கள் போனபோது, அங்கு வாசலை காப்பவர், இங்கு உள்ளே நுழைய வேண்டுமென்றால், ‘நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். இல்லையென்றால் அனுமதி இல்லை’ என்று கூறினார். சரி என்று இவர்கள் கூறவும், ஆசிரியரிடம், ‘ஒரு பெரிய கப்பல் பனி மலை மேல் மோதி மூழ்கி போனதே அந்த கப்பலின் பெயர் என்ன’ என்று கேட்டார். அதற்கு ஆசிரியர் ‘டைடானிக்’  என்று கூறியவுடன், கதவை திறந்து உள்ளே செல்ல அனுமதித்தார். அடுத்ததாக டாக்டரிடம், ‘அதில் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்’ என்று கேட்க, அவரும் பட்டென்று, சுமார் 1500 பேர் என்று கூறினவுடன், அவருக்கும் வாசல் திறக்கப்பட்டது. இப்போது வக்கீல் மிகவும் குஷியுடன், இத்தனை எளிதான கேள்விதானே என்று நினைத்து கொண்டு, என்ன கேட்க போகிறார் என்று ஆவலோடு பார்த்தபோது, அந்த காவல் காப்பவர், ‘அந்த மரித்தவர்களின் பெயர்கள் ஒவ்வொன்றையும் சொல்’ என்றவுடன் பார்க்க வேண்டுமே அவர் முகத்தை!
 
நாம் சிரிக்க வேண்டும். வாய்விட்டு சிரிக்க வேண்டும். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று தமிழில் பழமொழி சொல்வார்கள். நாம் சிரிக்கும்போது, நம்மிடத்தில் இருக்கிற டென்ஷன், கவலை, பயங்கள் மற்றும் சோர்வுகள் நீங்கி போகும். சிரிக்கும்போது, நம் உடலில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். வாய் விட்டு சிரிக்கும்போது, நமது நுரையீரல் நன்கு விரிவடைந்து, நன்கு மூச்சு எடுக்க முடியும். நல்ல இரத்த ஓட்டம் உண்டாகும். முறுக்கேறின தசைகள்; தளர்ச்சி அடையும். நம்முடைய நாடி துடிப்பையும், இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும்.
 
கோபப்படும்போது நாம் உடல் இரத்த அழுத்தம் அதிகமாகி, சில வேளைகளில நாம் என்ன செய்யக்கூடாது என்று நினைக்கிறோமோ அதை செய்து விடுகிறோம். அது நம் உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கும். ஆனால் சிரிக்கும்போதோ, நாம் நமது கவலைகளை எல்லாம் மறந்து நம்முடைய இறுக்கமான சூழ்நிலைகள் மாறி, நாம் சந்தோஷமாய் இருக்க முடியும்.
 
சரி, எதை வைத்து சிரிக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம். சிலர் சினிமா பார்க்க மாட்டார்கள். ஆனால் அதில் வெளிவரும் காமெடிகளை பார்த்து நகைத்து கொண்டிருப்பார்கள். நான் சிரிக்கத்தானே செய்கிறேன் என்று நீங்கள் சொல்லலாம். நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம் (நீதிமொழிகள் 14:13) என்று வேதம் கூறுகிறது. நீங்கள் கிறிஸ்தவர்களாயிருந்து கொண்டு அவற்றை பார்த்து கொண்டிருந்தால், அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலமே! ‘பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராக்கூடாது’ என்று வேதம் கூறுகிறது. மற்றவர்களை பரியாசம் செய்து சிரிக்க வைக்கும் எதிலும் நாம் பங்கு பெற கூடாது.
 
எந்த மொழியிலும் மற்றவர்களை பரிகசியாமல், அசுத்தங்களில்லாத நம்மை சிரிக்க வைக்க கூடிய எத்தனையோ காரியங்கள் உண்டு. அவற்றை நாம் பார்க்கலாம், படிக்கலாம், சிரிக்கலாம்.
 
மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம் (நீதிமொழிகள் 17:22) என்று வேதம் கூறுகிறது. சிலர் தங்கள் முகத்தை எப்போதும் சீரியஸாக வைத்து கொண்டிருப்பார்கள். தாங்கள் சிரித்தால் தங்கள் பரிசுத்தம் கெட்டு போய் விடும் என்று அவர்கள் நினைப்பார்கள் போலிருக்கிறது. ‘அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது’ என்று வேதத்தில் காண்கிறோம். வாய்க்குள்ளே சிரித்தால் ஆனந்த சத்தம் வராது. தேவன் வாய் விட்டு சிரிப்பதை அனுமதிக்கிறார் என்பதை இந்த வசனத்திலிருந்து காண்கிறோம்.
 
நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்தசந்தோஷமடைவார்கள்’ (சங்கீதம் 68:3). இந்த வசனத்தை படித்தபோது என்னில் ஒரு ஆச்சரியம் எழுந்தது. சந்தோஷமாயிருப்பதற்கு நாம் என்னென்ன வார்த்தைகள் வைத்திருக்கிறோமோ அத்தனையும் இந்த வசனத்தில் வருகிறது. மகிழ்ச்சி, களிப்பு, ஆனந்தம், சந்தோஷம்! இவையெல்லாம் யாருக்கு? நீதிமான்களுக்குத்தான்! நீதிமான்களுக்கென்று தேவன் அத்தனை சந்தோஷத்தையும் வைத்திருக்கிறார். யாருக்கு முன்பாக? சினிமா மற்றும் டிவிக்கு முன்பாகவா சந்தோஷத்தை தேவன் வைததிருக்கிறார்? இல்லை! ஜீவனுள்ள தேவனுக்கு முன்பாக நீதிமான்கள் ஆனந்த சந்தோஷமடைவார்கள்!  எவ்வளவு நல்ல தேவன், எத்தனையாய் நாம் சந்தோஷமாய் இருக்க வேண்டும் என்று நினைக்கிற தேவன்!
 
சிலர் சிறு காரியத்திற்கும் பயங்கர டென்ஷன் ஆவார்கள். நாம் உண்மையான கர்த்தருடைய பிள்ளைகளாய் இருந்தால், நம்முடைய தேவனுடைய கரத்திற்கு மீறி எதுவும் நடக்க போவதே இல்லை! தேவையில்லாத டென்ஷன்களை நம்மிடத்தில் இருந்து மாற்றி, கர்த்தருக்குள் சந்தோஷமாயிருப்போம். வாய் விட்டு சிரிப்போம். மனமகிழ்ச்சியாய் இருப்போம். தேவனுக்கு முன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்தமாய் சந்தோஷமாயிருக்க தேவன் தானே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக. ஆமென் அல்லேலூயா!
 
சந்தோஷமாயிருங்க 
எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க
உயர்வானாலும், தாழ்வானாலும் 
சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார்
 
என்னதான் நேர்ந்தாலும் சோர்ந்துபோகாதீங்க
நம்மை அழைத்த தேவன் 
கைவிடமாட்டார்சந்தோஷமாயிருங்க 

ஜெபம்:

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நாங்கள் சந்தோஷமாய் இருப்பதை நீர் விரும்புகிற தேவனாய் இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். மனமகிழ்ச்சி நல்ல மருந்து என்று வேதத்தில் எழுதியிருக்கிறபடி நாங்கள் எப்போதும் மனமகிழ்ச்சியோடு இருக்க கிருபை செய்யும். நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்தசந்தோஷமடைவார்கள் என்ற வசனத்தின்படி நாங்கள் உம்மில் களிகூர கிருபை செய்யும்.   எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.