உங்களுக்கு தெரியுமா?

உங்களுக்கு தெரியுமா? 

‘கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.  தேவாதி தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது’. – (சங்கீதம் 136:1-4).
உங்களுக்கு சொந்தமாக ஒரு வேதாகமம் இருந்தால் நீங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர். ஏனெனில் உலகத்திலுள்ள மூன்றில் ஒரு பங்கு மக்களிடம் வேதாகமம் கிடையாது.
 
நீங்கள் காலையில் எழுந்தரிக்கும்போது, முழு சுகத்தோடும் பெலத்தோடும் எழுந்திருந்தால் நீங்கள் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவர். ஏனெனில் மில்லியன் மக்கள் இந்த வார இறுதி வரைகூட ஜீவிக்க மாட்டார்கள்.
 
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் போரில் ஈடுபடாதிருந்தால், சிறைச்சாலையின் தனிமையை அனுபவிக்காதிருந்தால், பசியின் கொடூரத்தை அனுபவியாதிருந்தால் நீங்கள் 500 மில்லியன் மக்களை காட்டிலும் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
 
நீங்கள் சபை ஆராதனைக்கு விடுதலையோடு எந்தவித பயமுமில்லாமல், எந்தவித பயமுறுத்தலும் இல்லாமல் கர்த்தரை தொழுது கொள்ள செல்வீர்கள் என்றால், மூன்று பில்லியன் மக்களைவிட நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
 
உங்களுக்கென்று ஒரு பிரிஜ் இருந்து, நீங்கள் தலை சாய்க்க ஒரு வீடு இருந்து, நீங்கள் அணிந்து கொள்ள நல்ல உடை இருந்தால் நீங்கள் உலகத்திலுள்ள 75 சதவிகித மக்களை விட பணக்காரர்.
 
உங்கள் மணி பர்சிலும், உங்கள் பேங்கிலும் உங்களுக்கென்று பணம் இருந்தால், நீங்கள் எட்டு சதவிகித பணக்காரர்களில் ஒருவர்.
 
உங்கள் பெற்றோர் உயிரோடும், இன்னும் இணைந்து இருந்தால், நீங்கள் மிகவும் அபூர்வமானவர்.
 
நீங்கள் உங்கள் தலையை உயர்த்தி, புன்னகைத்து தேவனுக்கு நன்றியுள்ளவர்களாயிருந்தால் நீங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர். அநேகர் அந்த நன்றியுணர்வு இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.
 
நீங்கள் ஒருவரின் கரத்தை பிடித்தோ, அணைத்தோ அல்லது அவர்களது தோள்களை தொட்டு ஆறுதல் படுத்துவீர்களானால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர். ஏனெனில் நீங்கள் கர்த்தரின் அன்பை வெளிப்படுத்துகிறீர்கள்.
 
நீங்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்று கொண்ட விசுவாசியாக இருந்தால் உலகத்திலுள்ள சிறுபான்மை மக்களை  சேர்ந்தவராவீர்கள்.
 
நீங்கள் இதை வாசிப்பீர்களானால், உலகில் உள்ள 3 பில்லியன் மக்களை விட ஆசீர்வதிக்கப்பட்டவர். ஏனெனில் அவர்களுக்கு வாசிக்கவே தெரியாது.
 
உலகில் எத்தனையோ பில்லியன் மக்கள் இருந்தும் தேவன் நம்மை அவருக்கு சொந்தமாக தெரிந்து கொண்டாரே, நாம் எத்தனை பாக்கியவான்கள்! வானத்தையும் பூமியையும் படைத்த சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நாம் பிள்ளைகளாகும் பாக்கியத்தை கொடுத்திருக்கிறாரே நாம் எத்தனை பாக்கியமுள்ளவர்கள்! நீங்கள் என்னை தெரிந்து கொள்ளவில்லை, நான் உங்களை தெரிந்து கொண்டேன் என்று நம்மை தெரிந்து கொண்டாரே அவர் எத்தனை நல்லவர்!
 
தேவர்கள் என்று எத்தனையோ பெயர்களும், மதங்களும், மார்க்கங்களும் இருந்தாலும், எத்தனையோ பேர் மாயையான தேவர்களை பின்பற்றி தங்கள் ஜீவனையே அதற்கு கொடுக்கிறவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது, நம்மை ஜீவனுள்ள தேவனை கண்டு கொள்ளவும், அறிந்து கொள்ளவும், அவருக்கு சொந்தமாக நம்மை தெரிந்து கொள்ளவும் கிருபை அளித்தாரே அவருடைய கிருபை எத்தனை பெரியது!
 
மதம் என்று வரும்போது ஒவ்வொருவரும் தங்கள் மதங்களில் மிகுந்த வைராக்கியம் உடையவர்களாக இருக்கும்போது, தங்கள் மதமே உண்மையானது என்று அதற்காக நிற்கும்போது ஒன்றுக்கும் தகுதியில்லாத நம்மை, ஜீவனுள்ள தேவனை தொழுதுகொள்ளும்படி கிருபை செய்தாரே, அவர் எத்தனை நல்லவர்!
 
உங்களுடைய என்னுடைய ஜெபத்தை புறம்பே தள்ளாமல் கேட்டு நல்ல தேவன் பதிலளிக்கிறாரே அவர் எத்தனை நல்லவர்!
 
ஆயிரமாயிரமான நன்மைகளை உங்களுக்கும் எனக்கும் செய்தாரே அவர் எத்தனை நல்லவர்!
 
அவருடைய கிருபைகளை நன்மைகளை சொல்ல ஆயிரம் நாவுகளும் போதாதே! அந்த நல்ல தேவனை வாயார, மனதார துதிப்போமா?
 
கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்
 
உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்
 
கன்மலையை நீர் பிளந்து 
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்
உம்மை போல யாருண்டு 
இந்த ஜனங்களை நேசித்திட

ஜெபம்:

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நீர் எங்களுக்கு செய்த மகத்தான கிருபைகளுக்காக நாங்கள் உம்மை துதிக்கிறோம். நாங்கள் நினைப்பதற்கும் கேட்பதற்கும் அதிகமாய் எங்கள் வாழ்க்கையில் நீர் எங்களுக்கு பாராட்டுகிற நன்மைகளுக்காக உம்மை துதிக்கிறோம். உலகில் உள்ள எத்தனையோ மக்களை விட நாங்கள் எல்லாவிதத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கிறோமே அது உம்முடைய மிகப்பெரிய கிருபை அல்லவா? நீர் எங்களுக்கு செய்த எல்லா உபகாரங்களையும் நாங்கள் மறவாதபடிக்கு நன்றியறிதலுள்ளவர்களாக ஜீவிக்க எங்களுக்கு உதவி செய்யும்.   எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.