கர்த்தரின் அழைப்பு – 2ம் பாகம்

கர்த்தரின் அழைப்பு – 2ம் பாகம்

நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும், தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம். – (2 தெசலோனிக்கேயர்1:12).
கர்த்தரின் அழைப்பை குறித்து நேற்றைய தினம், கர்த்தர் சகோதரன் பக்தசிங் அவர்களை எப்படி அழைத்தார் என்று பார்த்தோம். இன்றைய நாளிலும், தேவனின் அழைப்பு என்பது என்ன என்பதை குறித்து ஆராய்வோம்.
 
ஒரு வீட்டில் ஒரு பிள்ளை சரியாக படிக்காமல், பெயில் ஆகி அவனின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறி என்று ஆகும்போது, அவனை ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்துவிட்டோம் என்று சொல்லும் பெற்றோர்கள் உண்டு.
 
ஒரு சில தேவன் மேல் அன்பு வைக்கும் பெற்றோர், என் முதலாவது மகனை தேவனுக்கு என்று ஊழியத்திற்கு ஒப்புக்கொடுப்பேன் என்று சொல்லி, ஒப்புக்கொடுத்து ஜெபிப்பார்கள். அது நல்லதுதான். ஆனால், ஒவ்வொருவரின் வாழ்விலும் தேவனுடைய அழைப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மதிப்பிற்குரிய போதகர் திரு பி.எஸ் இராஜாமணி அவர்கள் கூறிய காரியம் ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது. அவர் கூறினார், ‘ஒரு சிலர் தங்கள் பிள்ளைகளை ஜனாதிபதியாக வேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் அது நடக்குமா? சிலர் பிரதம மந்திரி ஆக வேண்டுமென்று விரும்புகிறார்கள், ஆனால் அது முடியுமா? அதுப்போல தங்கள் பிள்ளைகள் ஊழியக்காரராக வேண்டும் என்று பெற்றோர் விரும்புகிறார்கள். ஆனால் கர்த்தரின் அழைப்பு இல்லாதபடி செய்யப்படும் ஊழியங்கள் பிரயோஜனமற்றவையாக போய்விடும். அநேகர் ஊழிய அழைப்பு இல்லாமல் ஊழியம் செய்வதால் அதன் கனி இல்லாமற் போகிறது’ என்று கூறினார்.
 
தேவனுடைய அழைப்பில் நான்கு விதங்கள் உண்டு.
 
முதலாவது, தேவன் நாம் இரட்சிக்கப்படும்படி நம்மை அழைத்திருக்கிறார். ‘..பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்’ (மத்தேயு 9:13) என்று இயேசுகிறிஸ்து கூறினார். ஆகவே நாம் அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டுமென்பதற்காகவே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.
 
இரண்டாவது அழைப்பு, நாம் பரிசுத்தமாய் வாழ்வதற்கே நம்மை தேவன் அழைத்திருக்கிறார். ‘தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்’ (1 தெசலோனிக்கேயர் 4:7). நாம் பரிசுத்தமாய் வாழ வேண்டுமென்பதையே தேவன் விரும்புகிறார். அதற்கென்றே நம்மை அழைத்திருக்கிறார்.
 
மூன்றாவது அழைப்பு, தேவன் தம்முடைய ஊழியத்திற்கென்று சிலரை தெரிந்துகொண்டு, அவர்களை பெயர் சொல்லி அழைத்தார்.
 
மோசேயை ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அழைத்தார். 
யோசுவாவை மோசேக்கு பின் இஸ்ரவேல் ஜனங்களை நடத்தி செல்ல அழைத்தார்.  
ஏசாயாவை தரிசனத்தின் மூலம் அழைத்தார். 
நெகேமியாவை அழைத்தார்.  
எரேமியாவை தாயின் கர்ப்பத்தில் உருவாகுமுன்னே அழைத்தார்.
இப்படி சொல்லி கொண்டே போகலாம்… இவர்களை தேவன் அழைத்த போது அவர்கள் எல்லாரும் உடனே ஒப்புக்கொடுத்து போய் விடவில்லை. சாக்குபோக்கு சொன்னாலும், தேவன் அவர்களை அழைத்து அவர்களை கொண்டு தாம் செய்ய நினைத்த காரியங்களை செய்தார்.
 
நான்காவது அழைப்பு, ஒரு குறிப்பிட்ட வேலையை செய்வதற்கு தேவன் அழைத்தார். உதாரணமாக, சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள். இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்தஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு, அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள் (அப்போஸதலர் 8:14-17) சமாரியர் பரிசுத்த ஆவியானவரை பெறவில்லை என்பதால், பேதுருவையும் யோவானையும் அனுப்பி அவர்கள் பரிசுத்த ஆவியை பெறும்படியாக தேவன் அவர்களை அப்போஸ்தலர் மூலம் அவர்களிடத்தில் அனுப்பினார்.
 
தேவன் அழைக்கும்போது, அழைக்கப்படுகிற நபருக்கு தேவனுடைய அழைப்பு உறுதியாக தெரியும். என்னை தேவன் ஊழியத்திற்கு அழைத்தபோது, அவருடைய மெல்லிய குரல் என் காதில் துல்லியமாக கேட்டது. இன்னும் என் காதுகளில் அது தொனித்து கொண்டே இருக்கிறது. ‘வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக் கொண்டுபோகிறான். அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது’ – (யோவான் 10:3-4) என்று வசனம் சொல்கிறது. அவர் கூப்பிடும் சத்தம் நமக்கு நிச்சயமாய் கேட்கும். அவர் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக அழைக்கிறார். எல்லாரையும் ஒரேவிதமாக அழைப்பதில்லை. அவர் தெரிந்து கொள்ளும் விதம் வித்தியாசமானதாக இருந்தாலும், அவர் அழைப்பு உறுதியானது, உண்மையானது, சரியானது.
 
தேவ அழைப்பை பெற்ற ஒவ்வொருவரும், அவருடைய அழைப்பில் நிலைத்திருந்து அவருக்கென்று உண்மையாய் ஊழியம் செய்ய வேண்டும். ஏனெனில் நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார் – (2 தீமோத்தேயு 2:13). அதுப்போல தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே (ரோமர் 11:29). உங்களை கொண்டு செய்ய நினைத்ததை உங்களை கொண்டுதான் தேவன் செய்வார். அவருடைய அழைப்பு மாறாதது. ‘நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும், தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்’ ஆமென் அல்லேலூயா!
 
பாக்கியமான சேவையிதே
பாதம் பணிந்தே செய்திடுவேன்
ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
அன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்து
ஆண்டவரை அடைவேன்
 
அழைத்தீரே இயேசுவே
அன்போடென்னை அழைத்தீரே
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
ஆயத்தமானேன் தேவே

ஜெபம்:

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த நாளிலும் எங்களை அழைத்த நீர் உண்மையுள்ளவராயிருக்கிறபடியால், எங்களை நித்தமும் வழிநடத்த வல்லவராயிருக்கிறபடியால் உமக்கு ஸ்தோத்திரம். ஒவ்வொருவரும் நீர் அழைத்த அழைப்புக்கு பாத்திரவான்களாக நடக்க உதவி செய்யும்.  அழைத்த அழைப்பில் நிலைத்திருக்க உதவி செய்யும். உம்முடைய திருச்சித்தத்தின்படி எங்களை நடத்தவும், விசுவாசத்தின் கிரியைகளை பலமாய் எங்களிலே நிறைவேற்றவும் எங்களை உம்மிடத்தில் அர்ப்பணிக்கிறோம்.   எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.