காலத்தை விரயமாக்காதிருப்போம்

காலத்தை விரயமாக்காதிருப்போம்

புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். – (கொலோசேயர் 4:5) .
எனக்கு நேரமில்லை என்று அன்றாட வாழ்விலே அநேகர் சொல்வதை கேட்டிருக்கிறோம். நேரமில்லை என்று நாம் திரும்ப திரும்ப சொல்வதினால் அதை உண்மை என்றெண்ணி நம்மை நாமே ஏமாற்றி கொண்டிருக்கிறோம். பாருங்கள், இயேசுகிறிஸ்து இந்த பூமியிலே வாழ்ந்த குறுகிய காலத்தில் சுமார் மூன்றறை வருடங்க்ள மட்டுமே ஊழியம் செய்தார். அதில் தனக்கு நேரமில்லை என்று அவர் குறைபட்டு கொண்டதேயில்லை. நடந்தே சென்று அநேக ஆயிரமான ஜனங்களுக்கு பிரசங்கம் செய்து சுகமளிக்கும்  ஊழியத்தை செய்து வந்தாலும் தம்மை தேடி வந்த ஒரு தனிமனிதனையும் அலட்சியப்படுத்தாமல் அவன் மேல் அன்பு வைத்து ஆலோசனை அளித்தார்.
ஜோவெட் என்பவர் நேரத்தை பயன்படுத்துவதை குறித்து சொல்லும்போது, ‘அதிக வேலைப்பளு உள்ளவர்களும், சுறுசுறுப்புள்ளவர்களும் நேரமில்லை என்று சொல்வதில்லை. அவர்கள் தங்களுடைய நேரத்தை திட்டமிட்டு, ஞானமாய் பயன்படுத்துவதினால் நீங்கள் அவர்களிடம் ஒரு உதவியை கேட்கும்போதும், கூட மகிழ்ச்சியோடு அதை செய்வார்கள். சுயநலமற்ற சேவைக்கு அவர்களிடம் எப்போதும் நேரமுண்டு. ஆகவே எனக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் நான் நம்பிக்கையோடு நோக்குவது இப்படிப்பட்ட பிஸியான மக்களையே’ என்று கூறுகிறார்.
 
நமது வாழ்விலும் தேவ சித்தத்தை நிறைவேற்ற போதுமான நேரத்தை தேவன் நமக்கு தந்திருக்கிறார். நமக்கிருக்கும் 24 மணி நேரமே இந்திய  ஜனாதிபதிக்கும் உள்ளது. நம் எல்லோருக்கும் அன்றாட அலுவலக பணிகள் செய்ய நேரமுண்டு. அதை நாம் மாற்ற முடியாது. அதை தவிர உண்ண, உடுக்க, உறங்க என்று சொந்த காரியங்களும் உண்டு. அதை தவிர மீதுமுள்ள ரேநத்தை எப்படி பயன்படுத்துகிறோம்? நித்தியத்தின் வெளிச்சத்தில் அதை தேவனுக்காகவும் பிறருடைய வாழ்வை வளமாக்கவும் பயன்படுத்துகிறோமா?
 
கடந்த சென்ற நேரத்தை நாம் திரும்ப பெற முடியாது. நேரத்தை சேமித்து வைக்கவும் முடியாது. ஆனால் அதை ஞானமாய் பயன்படுத்த முடியும். நாம் ஒவ்வொருவரும் நேரத்தை எப்படி செலவிடுகிறோம் என்று அன்றாடம் இரவில் எழுதி பார்த்தால் இன்னும் எவ்வளவு சிறப்பாய் செலவழித்திருக்கலாம் என்ற புதிய திட்டங்கள் தோன்றும். குடும்பம், ஊழியம், தொழில், படிப்பு, பொழுதுபோக்கு, ஓய்வு, ஐக்கியம் என ஒவ்வொன்றிற்கும் போதுமான நேரம் இருப்பதை நம்மால் உணர முடியும்.
 
இந்த புதிய வருடத்தில் தேவன் கிருபையாக கொடுத்துள்ள நாட்களை நாம் ஞானமாய் செலவழிக்க திட்டமிடுவோமா? வேலை நேரம் போக மீதமுள்ள நேரத்தை சீரியல் பார்ப்பதிலும், சினிமா பார்ப்பதிலும், நெட்டில் அமர்ந்து கழிப்பதிலும் செலவழிக்காமல், உடற்பயிற்சிக்கென்று சிறிது நேரத்தையும், ஜெபிப்பதற்கென்று சிறிது நேரத்தையும், வேத வாசிப்பதற்கென்று நேரத்தையும், பிள்ளைகளோடும், குடும்பத்தோடும் நேரத்தை செலவழிக்கவும் ஒதுக்குவோம். அது நம்முடைய உடல் நலத்திற்கும், குடும்ப சந்தோஷத்திற்கும், ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் மிகவும் சிறந்தது.
 
தேவன் கொடுத்துள்ள கிருபையான நாட்களை வீணடித்து போக்கி விடாமல், வருட கடைசியில் வீணாக செலவழித்து விட்டேனே என்று புலம்பாமல், வருடத்தின் ஆரம்பத்திலேயே நன்கு திட்டமிட்டு ஒவ்வொரு நிமிடத்தையும் சரியான முறையில் செலவழிக்க தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை தருவாராக! ஆமென் அல்லேலூயா!
 
காலம் வேகமாக ஓடுதே
கருத்தில்லாமல் வாழ்கிறேன்
கண்ணும் கருத்துமாய் வாழ்ந்திட
உதவி செய்யும் தேவா – எனக்கு
உணர்வு தாரும் தேவா

ஜெபம்:

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, காலத்தின் அருமையை உணர்ந்து நாங்கள் ஒவ்வொரு நாளும் நீர் எங்களுக்கு தந்த ஈவு என்று அதை பத்திரமாக நல்ல முறையில் செலவழிக்க கிருபை தாரும். உணர்வை தாரும். வேண்டாத காரியங்களுக்கு நாங்கள் எங்கள் நேரத்தை செலவழிக்காமல் ஞானமாய் செலவழிக்க உதவி செய்யும். ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு அதன்படி செயல்படி உதவி செய்தருளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.