சாக்கு போக்கு
அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். – (லூக்கா 14:18).
சாக்கு போக்கு சொல்கிறவனுக்கு சாக்கு போக்கு சொல்வதை தவிர வேறெந்த வேலையும் செய்யத் தெரியாது என்றார் பெஞ்சமின் பிராங்கிளின். தோல்வியடைந்தவர்களில் 99 சதவிகிதம் பேர் தங்க்ள தோல்விக்கு காரணம் கூறும்போது, ‘தங்கள் பிழைகளை உணராமல் ஏதோ ஒரு காரியத்தை சாக்குபோக்காக கூறி, தோல்விக்கு தான் காரணமில்லை’ என்று மறைமுகமாக சொல்லிவிடுவர்.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பிதழ் ஒன்று அச்சடிக்கப்பட்டது. எல்லா மந்திரிகள், அதிகாரிகள், மக்கள் தலைவர்கள் என அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. அந்த அழைப்பிதழின் கீழ்ப்பகுதியில் இந்த வாக்கியம் அச்சிப்பட்டிருந்தது ‘எந்தவித சாக்குப்போக்கையும் ஏற்றுக் கொள்ள முடியாது’. இது அழைப்பிதழ் மாத்திரமல்ல, அழைப்பிதழ் வடிவத்திலுள்ள அரசு ஆணை. இந்த ஆணைக்குக் கீழ்ப்படியாதவர்கள் குற்றவாளிகளாக, எதிர்ப்பாளர்களாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.
ஒரு இராணியின் ஆணைக்கு கீழ்ப்படியாமல் இருந்தாலே தண்டிக்கப்படுவது உறுதியானால் இயேசுகிறிஸ்துவின் ஆணைக்கு கீழ்ப்படியாமல் அதற்கு சாக்கு போக்கு சொல்வோமேயானால் நம்முடைய நிலைமையும் பரிதபிக்கப்பட தக்கதே!
இயேசுகிறிஸ்து கூறின உவமையில் ஒரு மனிதன் செய்த பெரிய விருந்துக்கு அநேகர் அழைக்கப்பட்டனர். ஆனால் அழைக்கப்பட்ட அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு சாக்கு போக்கு சொல்லி, விருந்துக்கு செல்வதற்கு மறுக்கிறார்கள். இந்த உவமை எதை குறிக்கிறதென்றால் இவ்வுவமையின் எஜமானன் இயேசுகிறிஸ்து என்றும், விருந்து அவரளிக்கும் இரட்சிப்பையும் குறிக்கிறது. அந்த அற்புத அழைப்பை ஏற்காமல் பலர் சாக்கு போக்கு சொல்லி இரட்சிப்பை இழந்து போகின்றனர்.
ஆம், இரட்சிக்கப்படாதவர்களை தேவன் இரட்சிக்கப்படும்படி அழைக்கிறார். இரட்சிக்கப்பட்டவர்களை தமது பணியை செய்யும்படி அழைக்கிறார். ஆனால் மனுக்குலமோ இந்த இரண்டு அழைப்பையும் ஏற்காமல் சாக்குபோக்கு சொல்லி கொண்டே இருக்கிறது. இரட்சிப்பின் செய்தி ஒரு மனிதனுகு;கு அறிவிக்கப்படும்போது அவனோ குடும்பத்தையும், உறவுகளையும் தன்னுடைய குலத்தையும் சாக்குபோக்காக சொல்கிறான். அதுப்போல ஒரு கிறிஸ்தவனை தேவன் தமது ஊழியத்தை செய்ய அழைக்கும்போது, அதற்கும் குடும்பத்தையும், அதில் தனது பொறுப்பையும், வேலையையும் சாக்கு போக்காக சொல்லிவிடுகிறான். வேதத்தில் ஊழியத்தை செய்த அநேகர் குடும்பஸ்தர்களாகவே இருந்திருக்கிறார்கள்.
பிரியமானவர்களே, தேவ வார்த்தை கீழ்ப்படியாமல் சாக்கு போக்கு சொல்வது நித்திய இழப்பை நம் வாழ்வில் உருவாக்கிவிடும். ஆழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களோ சிலர்,அதிலும் உண்மையுள்ளவர்கள் மிகவும் சிலரே! ஆந்த உண்மையுள்ளவர்களின் பட்டியலில் நாமும் இடம் பெற்று, தேவனுடைய அழைப்பிற்கு செவிசாய்ப்போம். ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வோம். ஆமென் அல்லேலூயா!
ஆபிரகாமின் புத்திரர் என்போர்
அழைப்பை அசட்டை செய்து விட்டார்
கல்களால் தம் பிள்ளைகளாக்க
வல்லவர் உண்டு தெரியுமா
கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால் – இந்த
கல்கள் பேசிடும் நீ பாடாவிட்டால்
ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நீர் அழைக்கும் அழைப்பை கேட்டும் அதற்கு சாக்குபோக்கு சொல்லி, ஏதோதோ காரணங்களை காட்டி அநேகர் தட்டிக்கழித்து, தேவன் கொடுக்கும் அன்பின் விருந்தை மறுத்து, பரலோக ராஜ்யத்தை சுதந்தரிக்க, நித்திய ஜீவனை இழந்து போகும் அவல நிலையை காண்கிறோமே, எங்களில் யாரும் அந்த அற்புத அழைப்பை அசட்டை செய்யாதபடிக்கு, செவி கொடுத்து, அந்த அழைப்பை ஏற்று விருந்தில் பங்கு பெறுகிறவர்களாக மாற்றும். தாங்கள் ஆபிரகாமின் சந்ததியார் என்று சொல்லிக் கொள்ளும் யூதர்கள் கர்த்தரை ஏற்றுக்கொள்ளாமல் மறுக்கிறார்களே, அவர்களும் பரலோக ராஜ்யத்தை சுதந்தரிக்கிறவர்களாக மாற்றுவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.