சாத்தான் தீமை செய்ய முடியாதே
யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை. – (எண்ணாகமம் 23:23).
ஒரு சமயம் மந்திரவாதி தொட்டண்ணாவுடைய சாட்சியை கேட்க நேரிட்டது. அதிலே அவர் தன்னை வல்லமை மிக்கவராக எண்ணிக் கொண்டு பணத்திற்காக ஏவல்களையும், பில்லி சூனியங்களையும் செய்து வந்தார். அநேகமாக அவர் செய்த மந்திரங்கள் யாவும் பலித்ததினால், தனக்கு நிகர் ஒருவருமில்லை என்று அகந்தையோடு செயல்பட்டு வந்தார்.
பொதுவாகவே கிறிஸ்தவர்களை வெறுத்த அவர் அவர்களுக்கு விரோதமாக மந்திரங்கள் செய்து வெற்றியும் கண்டார். ஒருமுறை எலிசபெத் என்ற பெண்ணுக்கு விரோதமாய் பிசாசுகளை ஏவினார். அவைகள் போன வேகத்தில் திரும்பி வந்தன. ‘அவளை நெருங்க முடியவில்லை. அவளை சுற்றிலும் அக்கினி எரிந்து கொண்டிருக்கிறது, அவள் ஒரு மெய் கிறிஸ்தவள்’ என்றன. ‘அப்படியானால் அதுவரை நான் சந்தித்தவர்கள் பொய் கிறிஸ்தவர்களா? மெய் கிறிஸ்தவர்களுக்கு விரோமாய் என்னால் எதுவும் செய்ய முடியாதா?’ என்று சிந்திக்க ஆரம்பித்தார். ஒரு நாள் தேவன் அவரை தொட்டார். தனது மந்திர பொருட்களை வீசி எறிந்து விட்டு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்.
பவுல் அப்போஸ்தலன் ஜெப ஆலயத்தில் தைரியமாய் வேத வசனங்களை பிரசங்கித்தார். அவரிடமிருந்து புறப்பட்ட தேவ வல்லமை அநேகருடைய வியாதிகளை நீக்கினதுமன்றி, பிசாசுகளையும் விரட்டியது. அதைப் பார்த்த ஸ்கேவா என்னும் யூதருடைய ஏழு குமாரர்களும் பொல்லாத ஆவிகளை விரட்ட முற்பட்டபோது. பொல்லாத ஆவிகள் ‘இயேசுவையும் அறிவேன், பவுலையும் அறிவேன் நீங்கள் யார்?’ என்று அவர்கள் மீது பாய்ந்தது.
ஆம், பிசாசுகளுக்கு இயேசுவின் வல்லமை நன்றாக தெரியும். அதேப் போலத்தான் மனிதனின் நிலையையும் பிசாசு நன்கு அறிந்து வைத்திருக்கிறான். ஒருவன் கிறிஸ்துவோடிருக்கிறானா? அல்லது அவன் கிறிஸ்துவற்றவனா என்பதும் பிசாசிற்கு தெரியும் என்பதை மேற்கண்ட உண்மை சம்பவம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
பிரியமானவர்களே, நாம் மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளை கடக்கும் போதும், பாடுகளும், துன்பங்களும் அடுக்கடுக்காய் வரும்போதும் நாம் பலவிதங்களில் யோசிக்கிறோம். யாராவது நமக்கு விரோதமாய் பில்லி சூனியங்களை செய்து விட்டார்களோ? இனி நம் குடும்பத்தின் நிலை அவ்வளவுதானோ என்று கலங்குகிறோம். ஆனால் சத்திய வேதம் கூறுகிறது. ‘என் தாசனாகிய யாக்கோபிற்கு விரோதமான மந்திரமும், குறிசொல்லுதலும் இல்லை’ ஆம், நாம் அவருடைய பிள்ளைகளாய் இருக்கும்போது நமக்கு விரோதமாய் நிற்பவன் யார்? எந்த பிசாசும் நம்மை நெருங்கவே முடியாது என்பது நிச்சயம்.
ஆகையால் நாம் மெய் கிறிஸ்தவர்களாக இருக்கும் பட்சத்தில் பிசாசு நம்மேல் கைவைக்க முடியாது. எந்த மந்திரவாதங்களும், பில்லி சூனியங்களும் நம்மை நெருங்கவே முடியாது. ஏனெனில் நமக்குள் இருக்கிறவர் இந்த உலகத்தில் இருப்பவனைக்காட்டிலும் மிகவும் பெரியவர். அவர் நமக்குள் இருக்கும்போது, தோற்றுப்போன சாத்தானால் நமக்கு என்ன செய்ய முடியும்?
கிறிஸ்துவுக்குள் வாழுவோம். சாத்தானின் சக்திகளை உடைத்தெறிவோம்.வெற்றி நமக்கே! ஆமென் அல்லேலூயா!
சாத்தானின் அதிகாரமெல்லாம் – என்
இயேசு பறித்து கொண்டார்
சிலுவையில் அறைந்து விட்டார் – இயேசு
காலாலே மிதித்து விட்டார்
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு
ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, சிலுவையிலே கிறிஸ்து சாத்தானின் தலையை நசுக்கினபடியால், அவன் தோற்றுப்போனவனாக, கர்த்தருக்குள் ஜீவிக்கிற ஒருவரையும் அவன் நெருங்க முடியாதவனாக தேவன் கொடுத்திருக்கிற பாதுகாப்பிற்காக நன்றி செலுத்துகிறோம். யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை என்ற வார்த்தைகளின்படி எங்களுக்கு விரோதமாக எழும்பும் எந்த ஆயுதத்தையும் வாய்க்காதே போக செய்யும்படியாக ஜெபிக்கிறோம். சத்துருவின் தந்திரங்களுக்கு விலகி ஜீவிக்கவும், அவனை மேற்கொண்டு வாழவும் பெலத்தையும் கிருபையையும் அருளிவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.