தொடர்ந்து பிடிக்கும் பாவம்
‘…உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்துபிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்’ – (எண்ணாகமம் 32:23).
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வைத்தியர்கள் அநேக ஆலோசனைகளை கூறுவார்கள். எப்போதும் சர்க்கரையோ, இனிப்போ பக்கத்தில் வைத்திருக்க வேண்டும், தலைச்சுற்றல் வரும்போது உடனடியாக அந்த இனிப்பை சாப்பிட வேண்டும் என்பது போன்ற அநேக ஆலோசனைகளை கூறுவார்கள். அதில் ஒன்று, வெளியே போகும்போது காலில் செருப்பு போட வேண்டும் என்பதாகும். ஏனென்றால் காலில் அடிபட்டால், அவர்களுக்கு காயம் ஆற அதிக நாட்களாகும். புண் சீக்கிரம் ஆறாது. ஆகவே அவர்கள் காலில் கண்டிப்பாக செருப்பு அணிந்திருக்க வேண்டும்.
சிலர் செருப்பு போட்டிருந்தாலும், சில வேளைகளில் கால் தடுக்கி, அல்லது ஏதோ ஒரு வகையில் காலில் புண் ஏற்பட்டால், அது ஆறுவது மிகவும் கடினம். அதை கவனத்துடன் மருந்து போட்டு அதை எப்படியாவது ஆற வைக்க வேண்டும். அதை கவனிக்க தவறினால், அந்த இடத்தில் இரத்த ஓட்டம் தடைப்பட்டு, அதினால் அந்த இடத்தில் உள்ள செல்கள் மரித்து, gangrene என்று சொல்லப்படும் பயங்கர நிலை ஏற்பட்டு, அந்த விரல்களையோ, அல்லது சில நேரங்களில் முழு காலையுமே எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். சர்க்கரை வியாதியினால் மாத்திரமல்ல, இந்த gangrene ஏற்பட வேறு காரணங்களும் உண்டு.
பிரியமானவர்களே, பாவமும் அப்படித்தான். நாம் அதை கொஞ்சம் தானே என்று நம்மை சரிப்பார்க்காமல் அந்த பாவத்திலேயே இலயித்து போயிருந்தால், ஒரு நாள் வரும், அது நம் உயிருக்கே ஆபத்து கொண்டு வரும் நிலைமை ஏற்படலாம்.
உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்துபிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. பாவத்தை பாவம் என்று பரிதாபப்பட்டு நம்மை காத்துக் கொள்ளாமல் போவோமானால், அந்த பாவம் நம்மை தொடர்ந்து பிடிக்கும்.
‘நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்’ (ஆதியாகமம் 4:7) என்று ஆண்டவர் காயீனை நோக்கி எச்சரிப்பதை பார்க்கிறோம். நம் வீட்டு வாசற்படியில் நாய் படுத்திருப்பதை பார்த்திருக்கிறோம், அல்லது பூனை படுத்திருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் நாம் நன்மை செய்யாதிருந்தால், அல்லது பாவத்திலே ஜீவித்து கொண்டிருந்தோமானால், நம் வீட்டு வாசற்படியில் பாவம் படுத்திருக்குமாம்! எத்தனை பயங்கரம் பாருங்கள்! நாம் கதவை திறக்கும்போது அந்த பாவம் நம்மை தொடர்ந்து பிடிக்கும்.
எந்த பாவமும் நம்மை வஞ்சிக்காதபடி பாவத்திற்கு எதிர்த்து நிற்போம். பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே (எபிரேயர் 12:4) என்று எபிரேய புத்தகத்தை ஆக்கியோன் எழுதுகிறார். நாம் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நாம் பாவத்தோடு எதிர்த்து போராட வேண்டுமாம். அந்த அளவிற்கு பாவத்தை நாம் துணிந்து எதிர்த்து நிற்க வேண்டும்.
எந்த பாவமும் நம்மை அடிமையாக்கி, கர்த்தரை விட்டு நம்மை பிரிக்காதபடி, பாவத்திலே வாழ்வதால் அந்த பாவம் நம்மை தொடர்ந்து பிடிக்காதபடி, கர்த்தர் அருளும் பாவ மன்னிப்பை பெற்று, அதிலிருந்து விடுபடுவோம். அப்படி விடுதலையாக்கபட்டால், ‘இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்’ (ரோமர் 6:22) என்று வேதம் நமக்கு கூறுகிறது. தேவனுக்கு அடிமையாவதினால் பரிசுத்தமாகுதலே நமக்கு பரிசாக கிடைக்கிறது. அதன் முடிவோ நித்திய நித்தியமாய் ஜீவனை சுதந்தரித்து, கர்த்தரோடு என்றென்றும் வாழும் வாழ்க்கையாகும்.
பிரியமானவர்களே, அந்த gangrene யைப் போல பாவம் நம் வாழ்வை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடாதபடி, தொடர்ந்து பிடிக்கும் பாவத்தையும், வாசற்படியிலே படுத்திருக்கும் பாவத்தையும் உதறி தள்ளிவிட்டு, தேவனுக்கு அடிமைகளாக, பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தத்தைப் பெற்று, நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வோமாக! அதற்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். ஆமென்! அல்லேலூயா!
பாவம் உன்னை தொடருமே
சாபம் கொல்லுமே – உன்
இன்ப லாபம் எல்லாமே மாயம்
இயேசுவிடம் ஓடிவா
வாலிப நாளில் உன் தேவனைதேடி ஓடிவா
பாவி உன்னை அழைக்கிறார் இயேசு ராஜனே
ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, பாவத்திற்கு எதிர்த்து நின்று, இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தத்தை பெற்றுக் கொள்ள எங்களுக்கு உதவி செய்யும். பாவத்திற்கு அடிமைகளாக நாங்கள் வாழாதபடி, தேவனுக்கு அடிமைகளாக வாழ்ந்து பரிசுத்தத்தை பலனாக பெற்று, நித்திய ஜீவனை சுதந்தரிக்க தேவன் தாமே கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.