நன்றி சொல்ல வந்தோம் நாதா
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. – (சங்கீதம் 103:1-2).
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள ஒரு பிரபல பத்திரிக்கையில் சிறப்பாக எழுதும் ஆசிரியர்களில் ஒருவர்தான் யோனத்தான். அவர் ஒருமுறை தன் வாசகர்களுக்கு ‘மகிழ்ச்சியில் முதலீடு செய்ய ஒன்பது குறிப்புகள்’ என ஒரு கட்டுரையை எழுதினார். அதில் ஒரு குறிப்பு ‘பெற்ற நன்மைகளை எண்ணிப்பார்’ என்பதாகும். இது ஜான்சன் ஓட்மன் எழுதிய ‘எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள்’ என்ற கிறிஸ்தவ பாடலின் கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். மகிழ்ச்சியான ஒரு புதிய ஆண்டை எதிர்ப்பார்க்கும் நமக்கும் இக்குறிப்பு மிகவும் அவசியமானது. ஆம், நன்றியறிதலுள்ள இருதயம் நமக்கிருக்குமானால் நாம் மகிழ்ச்சியாய் வாழ முடியும். தேவனிடமிருந்து நாம் பெற்ற நன்மைகளை எண்ணிப்பார்க்கும்போது, அது நமக்கு வியப்பை தந்து, நமது சோர்வை நீக்குமல்லவா? ஆகவே வருடத்தின் இக்கடைசி நாளை தேவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவே ஒதுக்குவோம். நம் இருதயம் நன்றியால் நிரம்பியிருக்கட்டும்.
ஆடுகளை மேய்ப்பவராக இருந்த எளிமையான தாவீதை தேவன் தெரிந்தெடுத்து, சகல இஸ்ரவேலருக்கும் இராஜாவாக உயர்த்தி மேன்மைப்படுத்தினார். இந்த தாவீதின் இருதயம் எப்போதும் தேவனுக்கு முன்பாக நன்றியுள்ளதாகவே இருந்தது. இதைக் குறித்து, தாவீது ராஜா கூறும்போது, ‘கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டு வந்தததற்கு நான் எம்மாத்திரம், என் வீடும் எம்மாத்திரம்?’ என துதி நிறைந்த உள்ளத்தோடு தேவனுக்கு நன்றி செலுத்துகிறார். மேலும் இவர் தனது சங்கீதங்களிலே பலவாறு உள்ள தனது பிரச்சனைகளை புலம்பினாலும், அச்சங்கீதத்தை முடிக்கும்போது தேவனை துதித்தே முடிப்பதை நாம் காண முடியும். நாமும் இவ்வருடத்தில் பல பிரச்சனைகளையும், பாடுகளையும் கடந்து வந்திருக்கலாம். ஆனாலும் அதன் மத்தியிலும் தேவன் நமக்கு கொடுத்த சமாதானத்தையும், சந்தோஷத்தையும் எண்ணி நன்றி நிறைந்த உள்ளத்தோடு இந்த ஆண்டை முடிப்போம்.
பிரியமானவர்களே, நம்மிடம் நம் தேவனுக்கு நன்றி செலுத்த நிறைய காரியங்கள் உள்ளன அல்லவா? நம்மை பாவ அடிமைத்தினத்திலிருந்து விடுவித்தமைக்காக, நம் கண்களை கண்ணீருக்கும், நம் காலை இடறுதலுக்கும், நம் ஆத்துமாவை மரணத்துக்கும் தப்புவித்தமைக்காக அவருக்கு நன்றி செலுத்துவோமா? எத்தனையோ விபத்துகளிலிருந்து நம்மை தப்புவித்தாரே! எத்தனையோ வியாதி விக்கினங்களிலிருந்து நம்மை பாதுகாத்தாரே! அவருக்கு ந்னறி செலுத்துவோமா?
நம் குடும்பத்தை பாதுகாத்தாரே, நம் பிள்ளைகளை சத்துருவின் அந்தகார கிரியைகளுக்கும், ஏற்பட இருந்த இக்கட்டுகளிலிருந்தும் பாதுகாத்தாரே அவருக்கு நன்றி செலுத்துவோமா?
நம் தேவைகளை சந்தித்தாரே, நாம் அழிந்து போய் விட விடவில்லையே! நாம் சந்தித்த பிரச்சனைகள் ஒவ்வொன்றிலும் விடுதலையை கொடுத்து, இந்த வருடத்தின் கடைசி நாளையும் காண கிருபை செய்தாரே அவருக்கு இருதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி செலுத்துவோமா?
இந்த வருடத்தின் வாக்குதத்த வசனமாகிய ‘இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன்’ என்ற வாக்குதத்தத்தை நம் வாழ்வில் ஆம் என்றும் ஆமென் என்றும் நிறைவேற்றினாரே அவரை துதிப்போமா?
இப்படி அவர் செய்த நன்மைகள் ஒவ்வொன்றாய் நினைத்து கர்த்தருக்கு நன்றி செலுத்துவோம். தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுகளுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்! ஆமென் அல்லேலூயா!
அவரை துதித்து போற்றும் இந்த வேளையில் தானே, கர்த்தருக்கு பிரியமில்லாத எந்த காரியங்களும் நம் வாழ்வில் காணப்படாதபடி, நம்மை முற்றிலும் அவருடைய பரிசுத்த கரத்தில் ஒப்புக் கொடுப்போம். இந்த பழைய வருடத்தில் தானே தேவையற்ற, கர்த்தருக்கு பிரியமில்லாத, விடவேண்டிய பாவ காரியங்களை விட்டு விட்டு, பரிசுத்தமுள்ள இருதயத்தோடு புதிய வருடத்திற்குள் பிரவேசிப்போம்.
பழைய வருடத்தில் தேவன் நமக்கு பாராட்டின கிருபைகளை நினைத்து, அவருக்கு நன்றி செலுத்தியவர்களாக, அவருடைய பிரசன்னத்தில், அவருடைய வீட்டில் அவரை துதித்தபடியே புதிய வருடத்திற்குள் கடந்து செல்ல தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது – பல
நன்மை செய்த இயேசுவுக்கே
நன்றி நன்றி நன்றி என்று
சொல்லி நான் துதிப்பேன்
நாள் தோறும் போற்றுவேன்
எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே
ஏராளமாய் நன்றி சொல்லுவேன்
அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன்
ஆண்டவரை போற்றுவேன்
ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் இந்த வருடத்தில் தேவன் பாராட்டின கிருபைகளுக்காக உம்மை நன்றியுள்ள இருதயத்தோடு துதிக்கிறோம். எங்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும், எங்கள் பிள்ளைகளுக்கும், எங்கள் உறவினர்களுக்கும், எங்கள் சபைகளுக்கும் நீர் பாராட்டின கிருபைகளுக்காக உம்மை நன்றியுள்ள இருதயத்தோடு துதிக்கிறோம். ஒவ்வொரு நாளும் தேவன் எங்களுக்கு பாராட்டின இரக்கங்கள் பெரியதையா! நாங்கள் நிர்மூலமாகாமல் இருப்பது உம்முடைய சுத்த கிருபை என்பதை உணர்ந்து இந்த வருடத்தின் கடைசி நாளையும் நாங்கள் காண எங்கள் தேவன் பாராட்டின கிருபைகளை நினைத்து உள்ளத்தின் ஆழத்திலிருந்து உம்மை துதிக்கிறோம். தொடர்ந்து புதிய வருடத்தில் பிரவேசிக்கிற எங்களுக்கு உம்முடைய கிருபைகளையும், பிரசன்னத்தையும் கொடுத்து ஆசீர்வதிப்பீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.