நல்ல சிநேகிதன்
ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. – (யோவான் 15:13).
இரண்டு நண்பர்கள் ஒரு காட்டுப்புற பகுதியில் இருந்த குகைகளுக்கு சென்று அதற்குள் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்து பார்க்க சென்றார்கள். அந்த இடத்தில் அநேக கரடிகள் இருக்கிறது என்று ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தார்கள். ஆகவே ஜாக்கிரதையாக செல்ல வேண்டும் என்று தீர்மானித்தவர்களாக அவர்கள் இருவரும் முன்னேறி, ஒரு குகையை வந்தடைந்தார்கள். திடீரென்று அவர்களின் முன் ஒரு பெரிய கரடி வர ஆரம்பித்தது. அதைக்கண்ட இருவரும் எப்படியாவது தப்பித்து ஓடி விட வேண்டும் என்று நினைத்து ஓட ஆரம்பித்தார்கள்.
ஒரு நண்பன் வேகமாக ஓடிக் கொண்டே மற்ற நண்பன் என்ன செய்கிறான் என்று பார்த்தபோது, மற்ற நண்பன், தன் காலிலிருந்த மலை ஏறும் ஷூவை கழற்றி விட்டு, ஓடுவதற்கான ஷூவை போட ஆரம்பித்தான். அதை கண்ட நண்பன், “ஏய், ஓடிவா, இந்த நேரத்தில் ஏன் ஷூவை மாற்றிக் கொண்டிருக்கிறாய், நாம் கரடியை தாண்டி ஒருபோதும் ஓடிவிட முடியாது’ என்று கத்தினான். அதற்கு மற்றவன், ‘நான் கரடியை அல்ல, உன்னை தாண்டி ஓடிவிடவேண்டும் என்றே ஷூவை மாற்றுகிறேன்’ என்று கூறினான். ஏனெனில் கரடி ஓடி வந்தாலும், யார் பின்தங்கி இருக்கிறார்களோ அவர்களையே பிடித்துவிடும் என்ற நினைப்பில் அவன் அப்படி சொன்னான்.
பிரியமானவர்களே, மற்றவர்களோடு நம்முடைய நட்பு எப்படி இருக்கிறது? மற்றவன் எப்படிப் போனால் எனக்கென்ன? நான் நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்கிறோமா? அல்லது என் நண்பனுக்காக நான் உயிரையும் கொடுக்கத்தயார் என்று சொல்ல முடியுமா?
வேதத்தில் தாவீதும் யோனத்தானும் நண்பர்களாக ஒருவரையொருவர் மிகவும் நேசித்தார்கள் என்று வாசிக்கிறோம். யோனத்தான் போரில் மரித்தபோது, தாவீது ‘என் சகோதரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்திரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது’ (2சாமுவேல் 1:26) என்று தன் நட்பை குறித்து வியந்து, புலம்பல் பாடினார்.
சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு (நீதிமொழிகள் 18:24) என்று வேதத்தில் பார்க்கிறோம். அப்படி சிநேகம் பாராட்டும்போது, நாம் யாருடன் சிநேகம் வைக்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. கெட்ட சகவாசம் நம்முடைய வாழ்வையே கெடுத்து விடும். குடிகாரனோடு நட்புள்ளவன், அவனும் குடிகாரனாக மாற வாய்ப்புகள் உண்டு. அசுத்த பழக்க வழக்கமுள்ளவனோடு சகவாசம் வைத்துக் கொள்பவன், அந்த அசுத்த பழக்க வழக்கங்களை கற்றுக்கொண்டு, குடும்பத்திற்கு பாரமாய் மாறி விட வாய்ப்புண்டு. ஆகவே நம் நட்பு யாருடன் இருக்கிறது என்பது மிகவும் முக்கியமானது. ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான் (நீதிமொழிகள் 13:20) என்று வேதம் கூறுகிறது. ஞானிகளோடு இருப்பவன், ஞானிக்கு தோழனானவன், அவனும் ஞானியாவான். ஆனால் மூடனுக்கு, கோபக்காரனுக்கு, கெட்ட சகவாசம் உள்ளவனுக்கு தோழனானவன் நாசமடைவான். ஏனெனில் அவனைப்போல அவனுடைய வழிகளை கற்றுக்கொண்டு, அவனும் கெட்ட வழிகளில் செல்வதால்.
இயேசுகிறிஸ்து கூறினார், ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை என்று. இயேசுகிறிஸ்து தமது சீஷர்களை சிநேகிதர்கள் என்று அழைத்தார். ‘இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்’ (யோவான் 15:15). அவர் நம்மையும் சிநேகிதர்களாக நினைத்தபடியால், தம் ஜீவனையே நமக்காக கொடுத்தாரல்லவா? அதை விட மேலான அன்பு ஒருவரிடத்திலுமில்லை என்று அவரே கூறி, தம்மையே அதற்கு உதாரணமாக தந்து விட்டாரல்லவா?
பிரியமானவர்களே, அந்த சிநேகிதத்தின், அன்பின் ஆழத்தை உணர்ந்தவர்களாக, நாமும் அவரை நேசிப்போம். நமக்காக தம் ஜீவனையே கொடுத்தவருக்காக நம்மால் இயன்றதை செய்வோம். அவருக்காக வாழ்வோம். அவரின் அன்பை மற்றவர்களுக்கு பறைசாற்றுவோம். கிறிஸ்துவின் உண்மை நண்பர்களாக வாழ்வோம். ஆமென் அல்லேலூயா!
இயேசுகிறிஸ்துவின் அன்பு
என்றென்றும் மாறாதது
இயேசுகிறிஸ்துவின் மாறா கிருபை
என்றென்றும் குறையாதது
ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்களுக்காக தம் ஜீவனையே கொடுத்த இயேசுகிறிஸ்துவின் அன்பை நினைத்து உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவருடைய அன்பினால் இன்று நாங்களும் இரட்சிக்கப்பட்டவர்களாகவும், நித்திய ஜீவனை சுதந்தரிக்கிறவர்களும் மாற்றின தயவிற்காக உமக்கு நன்றி. நாங்கள் வாழும் உலகத்திலும் நல்ல நண்பர்களை நாங்கள் தெரிந்தெடுக்கவும், நாங்கள் கர்த்தருக்குள் இருக்கும்படியாக எங்களை உற்சாகப்படுத்தும் நண்பர்களை பெற்றுக் கொள்ளவும் கிருபை செய்வீராக. கெட்ட சகவாசங்களுக்கு எங்களை விலக்கி காத்தருளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.