நீதியின் மேல் பசிதாகம்

நீதியின் மேல் பசிதாகம்

நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்: அவர்கள் திருப்தியடைவார்கள். – (மத்தேயு 5:6).
ஒரு வயதான மனிதர் தனிமையாக வாழ்ந்து வந்தார். அவருடன் பேசுவதற்கு யாரும் இல்லாதபடியால், அவர் ஒரு நாள் பறவைகள் விற்கும் கடைக்கு சென்று ஒரு பேசும் கிளி வேண்டும் என்று கேட்டார். கடைக்காரர் ஒரு கிளியை அவரிடம் கொடுத்து ‘இந்த கிளி பேசும்’ என்று சொல்லி காண்பித்தார். அதை சந்தோஷமாய் வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்த அவர் அந்த கிளியிடம் பேசி பார்த்தார். அது பேசவில்லை.
 
திரும்பவும் அந்த கடைக்கு கொண்டு சென்று, ‘இந்த கிளி பேசமாட்டேன்கிறது’ என்று கூறினார். அதற்கு கடைக்காரர், ‘ஓ, நீங்கள் வாங்கின கிளி கூண்டில் கண்ணாடி இருக்கிறதா?’ என்று கேட்டார். அதற்கு வயதானவர். இல்லை என்றதும், ‘கண்ணாடியை பார்த்தவுடன், கிளி பேசும்’ என்று கூறி, ஒரு கண்ணாடியை கொடுத்தார். அதை வாங்கி கூண்டில் வைத்தும் கிளி பேசவில்லை.
 
திரும்பவும் கடைக்கு கொண்டு வந்து சொன்ன போது, கடைக்காரர், ‘ஒரு சின்ன ஏணி இருந்தால், அந்த கிளி அதன் மேல் ஏறிக் கொண்டே சந்தோஷமாய் பேசும்’ என்று கூறினார். அதன்படியே ஏணியை வாங்கி கொண்டு போய் வைத்தும் கிளி பேசவில்லை.
 
திரும்பவும் கடைக்கு வந்து சொன்னபோது, கடைக்காரர் ‘ஒரு சின்ன ஊஞ்சல் வாங்கி அந்த கூண்டில் வைத்தால், அந்த கிளி ஊஞ்சலாடியபடியே பேசும்’ என்று கூறினார். அதன்படி வைத்தும் பிரயோஜனமில்லை.
 
அடுத்த நாள் கடைக்காரனிடம் வயதானவர் வந்தார். கடைக்காரர் ‘இன்னும் கிளி பேசவில்லையா?: என்று கேட்டார். அதற்கு வயதானவர் ‘அந்த கிளி இறந்து விட்டது’ என்று கூறினார். எப்படி என்று ஆச்சரியத்துடன் அந்த கடைக்காரர் கேட்டபோது, ‘ஆம், அந்த கிளி இறந்து விட்டது. ஆனால் இறப்பதற்கு முன் பேசினது, நீர் போகிற எந்த கடையிலும், எனக்கு சாப்பிட ஒன்றும் கிடைக்கவில்லையா என்று கேட்டபடியே செத்துப் போனது’ என்று கூறினார்.
 
பிரியமானவர்களே, நம்முடைய தேவைக்கு அதிகமாக நம் வீட்டில் பொருட்கள் நிறைவாக இருப்பதால் நமக்கு சந்தோஷம் வரும் என்று நினைக்கிறோம். அதினால் இருக்கிற பொருட்களையே மீண்டும் மீண்டும் வாங்கி வீட்டில் இடம் இல்லாமல் போகும் மட்டும் நிரப்பிக் கொண்டு இருக்கிறோம்.
 
ஆனால் நம் இருதயத்தில் இருக்கும் வெற்றிடத்தை நாம் கொண்டு வரும் பொருட்களினாலோ, நம் வீடு நிறைய இருக்கும் பொருட்களினாலோ, தின்பண்டங்களினாலோ நிரப்பவே முடியாது. அந்த இருதயத்திற்கு உண்மையான சத்துணவு வேண்டும். அது இருந்தால் மட்டுமே நாம் உண்மையாக திருப்தி அடைய முடியும்.
 
அந்த வெற்றிடத்தை நிரப்ப கர்த்தரால் மட்டுமே முடியும். அவரை சார்ந்து ஜீவிக்கிற வாழ்க்கை, வெற்றியுள்ள வாழ்வு, சந்தோஷமான குடும்ப வாழ்வு, நல்ல கிறிஸ்தவர்களிடமுள்ள ஐக்கியம் இவைகளே ஒரு மனிதனை உண்மையான சந்தோஷத்திற்குள் வழிநடத்த முடியும்.
 
நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்;  அவர்கள் திருப்தியடைவார்கள் என்று இயேசுகிறிஸ்து கூறினாரே! நாம் நீதியின் மேல் பசியும் தாகமும் உள்ளவர்களாயிருந்தால், தேவன் நம்மை தமது கிருபையினால் திருப்தியாக்குவார்.
 
பாவத்தின் மேல் பசிதாகமுள்ளவர்கள் எந்த நிலையிலும் திருப்தி அடைய மாட்டார்கள். எத்தனை முறை பாவம் செய்தாலும் அதை திரும்ப செய்ய வேண்டும் என்று அவர்கள் திரும்ப திரும்ப பாவத்தில் விழுவார்களே தவிர திருப்தி அடைய மாட்டார்கள்.
 
ஆனால் கர்த்தர் சொல்கிறார், நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள் என்று. ஆகவே நாம் பாவத்தின் மேலும், பணத்தின் மேலும், அழிந்து போகிற மாயையான காரியங்கள் மேலும் பசிதாகமுள்ளவர்களாக இல்லாமல், நீதியின் மேலும், நியாயத்தின் மேலும், கர்த்தரின் மேலும், அவருடைய கிருபையின் மேலும் பசிதாகமுள்ளவர்களாக இருப்போம். கர்த்தர் நிச்சயமாகவே நம்மை திருப்தியாக்குவார். ஆமென் அல்லேலூயா! 

ஜெபம்:

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்;  அவர்கள் திருப்தியடைவார்கள் என்று இயேசுகிறிஸ்து கூறினாரே, அதன்படி நாங்கள் அழிந்து போகிற உலகத்தின் காரியங்களின் மேல் பசிதாகம் உள்ளவர்களாக இல்லாமல், நீதியான காரியங்கள் மேல் பசிதாகம் உள்ளவர்களாக வாழ எங்களுக்கு உதவி செய்யும். எங்களை திருப்தி அடைய செய்கிற தேவன் நீரே என்று உணர்ந்து, கர்த்தருக்கு பிரியமான காரியங்களில் தாகமுள்ளவர்களாக எங்களை மாற்றும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.