போஷிப்பவர் நீரே

போஷிப்பவர் நீரே 

நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை. – (சங்கீதம் 37:25).
மதுரையில் வசிக்கும் ஒரு குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியிருந்தது. காரணம் வாடகை ஆட்டோ ஓட்டி, குடும்பத்தை நடத்தி வந்த கணவருக்கு வீட்டு செலவுக்கு கொடுக்கக் கூட அவரிடம் பணமிருப்பதில்லை. இதில் வீட்டில் தவழ்ந்து விளையாடி வந்த இரட்டை பெண் பிள்ளைகளும் அவ்வப்போது பசியினால் அழுவது பெற்றவர்களின் மனதை கசக்கி பிழிந்தது.
 
இந்த குடும்ப போராட்டத்தில் இயேசுகிறிஸ்துவை இறுக பிடித்து கொண்ட மனைவி ஞாயிறு தோறும் ஒரு சபைக்கு சென்று ஆண்டவரை ஆராதித்து வந்தாள். ஆண்டவரை நம்பும்படியும், ஜெபிக்கும்படியும் கணவரிடம் அடிக்கடி கூறுவாள். ஆனாலும் அவளது வார்த்தைகளுக்கு அவர் சற்றும் செவிசாய்க்கவில்லை. ஒரு நாள் காலை பிள்ளைகள் இருவரும் பசியால் அழுதனர். அடுப்பில் உணவோ. கையில் காசோ இல்லை. பக்கத்து வீட்டில் போய் உணவோ கடனோ கேட்கவும் தன்மானம் ஒத்து வரவில்லை.
 
ஆகவே இடுப்பில் ஒரு பிள்ளையையும் கையிலொரு பிள்ளையையும் பிடித்து கொண்டு இருதயம் கனத்தவளாக கலங்கிய கண்களோடு அருகிலுள்ள டீக்கடைக்கு சென்று, ஒரு டம்ளர் பாலும், இரண்டு பன்னும் வாங்கி விட்டு, தயங்கியவளாக, ‘அண்ணா காசு நாளைக்கு கொடுக்கிறேன்’ என்று கூறினாள். டீக்கடைக்காரரோ ‘என்னம்மா, இப்போதுதானே உன்கிட்ட நின்ற பெரியவர் காசு கொடுத்து விட்டு போனார்’ என்றார். இவளால் நம்பி முடியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தாள். அப்படி யாருமில்லை. யாராக இருக்கும்? என்று குழம்பி கொண்டிருக்கையில் உன்னை போஷிக்கிற தேவன் நானல்லவா? என்று உள்ளத்தில் அழுத்தமாய் கர்த்தர் நினைவுப்படுத்தினார். அவளடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பாலில் பன்னை தொட்டு சாப்பிட்டு விட்டு திருப்தியாய் தூங்கினர் இரட்டையர்கள்.
 
அன்று தமது தீர்க்கதரிசியான எலியாவை போஷிக்க தேவன் காகத்திற்கு கட்டளையிட்டாரல்லவா? இறைச்சியை சாப்பிடுவதில் அலாதி பிரியம் கொண்ட காகம் கூட அதை சாப்பிடாமல் கர்த்தரின் கட்டளைக்கிணங்கி அதை பத்திரமாய் கொணடு போய் தீர்க்கதரிசியிடம் சேர்த்தது. ஆம், கர்த்தர் நீதிமான்களை பசியினால் வருந்த விடார் (நீதிமொழிகள் 10:3). அதே தேவன் இன்றும் ஜீவிக்கிறார் என்பதை மேற்கண்ட உண்மை சம்பவம் நமக்கு விளக்குகிறதல்லவா?
 
பிரியமானவர்களே, நமது விசுவாசம் இன்னும் வர்த்திக்கட்டும்! நாம் ஆராதிக்கும் தேவன் ஒவ்வொரு தனி மனிதனின் சிறுசிறு தேவைகளையும் கருத்தாய் விசாரிக்கிறவராயிருக்கிறார். அவர் நாமம் யெகோவா யீரே! நம் தேவைகளையும் நமது குடும்ப சூழ்நிலைகளையும் சந்திக்க வல்ல தேவன் அவரே! அவர் கவனித்து கொண்டிருக்கிறார் என்பதை நாம் மறக்க வேண்டாம். ஏற்ற நேரத்தில் ஏற்ற விதமாய் நம்முடைய தேவைகளை நிச்சயமாய் சந்திப்பார் ஆமென் அல்லேலூயா! 
 
எலியாவின் தேவன் நம் தேவன்
வல்ல காரியம் செய்திடுவார்
காகத்தை அனுப்பி எந்தன் தேவையை
பூர்த்தி செய்ய வல்லவரே
 
என் தேவனால் கூடாதது
ஒன்றும் இல்லை  எதுவும் இல்லை
மனிதனால் கூடாததை வாய்க்க 
செய்யும் தேவன் அவர்

ஜெபம்:

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்கள் தேவனுக்கு யெகோவாயீரே என்னும் அருமையான பெயர் உண்டே! எங்கள் தேவைகளை சந்திக்க வல்லவர் நீரே அப்பா! குhகத்தை கொண்டு எலியா தீர்க்கதரிசியை போஷித்தவர் எங்கள் தேவைகளையும் எந்த வகையிலும் சந்திக்க உம்மால் கூடும் தகப்பனே. வறுமையிலும், பசியிலும், கடனிலும் வியாதியிலும் வாழும் ஒவ்வொருவரின் தேவைகளையும் சந்திப்பீராக. உமக்குள் சந்தோஷமாய் கடந்து செல்ல கிருபை செய்யும். என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் என்ற வார்த்தை எங்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் நிறைவேறுவதாக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.