வாலிபத்திலே சிருஷ்டிகரை நினை

வாலிபத்திலே சிருஷ்டிகரை நினை 

இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.     – (பிரசங்கி 12:7).
ஒரு சுவிசேஷகர் உல்லாசமாய் தன் வாழ்வை நடத்தி கொண்டிருந்த ஒரு வாலிபனிடம் போய், ‘நீ மனம் திரும்பி இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்று கொள். அவரே உன் மரணத்திற்குப்பின் நித்திய வாழ்வை தருவார்’ என சுவிசேஷத்தை அறிவித்தார். அதற்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா? ‘வாலிபம் வாழ்வதற்கே, நான் வயதானபின் ஆண்டவரை ஏற்று கொள்வேன்’ என்றான். ஆம்; உலக மக்கள் இப்படித்தான் எண்ணி கொள்கிறார்கள். ‘வயதானப்பின் கோவில் குளம் என்று சுத்து’ என்பதுதான் நம் நாட்டவரின் சகஜ பேச்சு. எனக்கு தெரிந்த 80 வயதான ஒருவர், நடக்கவே முடியாத நிலை, உடலில் வேறு வியாதிகள், ஆனால் ஒவ்வொரு வருடமும் சபரி மலைக்கு 18 படிகள் ஏறிவிட்டு வருவார். அவரின் வாலிப நாட்களில் செய்யாததை இப்போது உடலில் எல்லாம் ஒடுங்கி விட்ட நிலையில் செய்து கொண்டிருக்கிறார்.
 
தேவனை ஏற்று கொள்ள வாலிப வயதே ஏற்றது. அதுதான் முழு வாழ்க்கைக்கும் பாதுகாப்பு. ஆகவேதான் ‘உன் வாலிப பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை’ என்று சாலமோன் வாலிபர்களுக்கு தன் அனுபவத்திலிருந்து ஆலோசனை கூறுகிறார். பிரசங்கி 12ம் அதிகாரத்தில் வாலிபத்தையும் வயோதிபத்தையும் அழகாய் ஒப்பிட்டு சாலமோன் ஞானி கூறுகிறார். வயோதிபத்தின் இயலாமையை இலை மறைக்காயாக அவர் கூறி இப்படிப்பட்ட இயலாமை வரும் முன் கர்த்தரை உறுதியாய் பற்றி கொள் என வாலிபர்களுக்கு அவர் கூறும் ஆலோசனையை தேவ கிருபையோடு காண்போமா?
 
பிரசங்கி 12:3-6 வரை உள்ள வசனங்களின் அர்த்தத்தை காணுவோம்.
 
மழைக்குப்பின் மேகங்கள் திரும்ப திரும்ப வராததற்கு முன்னும், -அதாவது வயோதிபத்தில் ஒரு வியாதி போனால் மற்றொன்று வரும். அப்படிப்பட்ட நாட்கள் வருவதற்கு முன்னும்,
 
வீட்டுக்காவலாளிகள் தள்ளாடி – அதாவது கால்கள் இரண்டும் தள்ளாடி போவதற்கு முன்னும், பெலசாலிகள் கூனிப்போய் – அதாவது உடலை நிமிர்ந்து நிற்கச்செய்யும் முதுகெலும்பு வளைந்து கூன் விழும் முன்னும்,
 
எந்திரம் அரைக்கிறவர்கள் கொஞ்சமானதினால் ஓய்ந்து – அதாவது நாம் உண்ணும் உணவு பற்களால் நன்றாக அரைக்கப்பட்டு வயிற்றுக்குள் செல்கிறது. முதுமையில் அநேக பற்கள் விழுந்து விடும். இப்படிப்பட்ட நாள் வரும்முன்னும்,
 
பலகணி வழியாய் பார்க்கிறவர்கள் இருண்டு போகிறதற்கு முன்னும் – அதாவது கண்கள் இருளடைந்து பார்வையற்று போகிற வயோதிக காலம் வருவதற்கு முன்னும்,
 
எந்திர சத்தம் தாழ்ந்ததினால் தெரு வாசலின் கதவுகள் அடைப்பட்டு – அதாவது காது கேட்பது குறைய தொடங்கு முன்னும்,
 
குருவியின் சத்தத்திற்கும் எழுந்திரிக்கவேண்டியதாகி, – அதாவது வயதானவர்கள் ஒரு சிறு சத்தத்திற்கும் தூக்கம் கலைந்து விடுவர். இப்படிப்பட்ட நிலை வருவதற்கு முன்னும்,
 
கீத வாத்திய கன்னிகைகளெல்லாம் அடங்கி போகாததற்கு முன்னும் – அதாவது தொண்டை வறண்டு, சப்தம் ஒடுங்கி ஒலி எழுப்பும் தொண்டையின் உள் உறுப்புகள் அடங்கி போவதற்கு முன்னும்,
 
மேட்டிற்காக அச்சமுண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி – அதாவது வயதானவர்கள் உயரமான சாலையை பார்த்தாலே ஏறிச்செல்ல பயப்படுவார்கள். விழுந்து விடுவோமோ, விபத்து வந்து விடுமோ என்று பயங்கள் தோன்றும். இப்படிப்பட்ட நாட்களுக்கு முன்னும்,
 
வாதுமை மரம் பூ பூத்து – அதாவது வாதுமை மரம் வெள்ளை வெளேறென பூ பூப்பதைப்போல முடியெல்லாம் நரைப்பதற்கு முன்னும்,
 
வெட்டுக்கிளியும் பாரமாகி, பசி தீபனமும் அற்று போகாததற்கு முன்னும் – அதாவது வயது முதிரும்போது, ஒரு சிறு காரியமும் பாரமாகி விடும். அதோடு பசியும் மிகவும் குறைந்து விடும். அப்படி ஆவதற்கு முன்னும்,
 
வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு – அதாவது நரம்புகளெல்லாம் தளர்ந்து போய், பொற்கிண்ணி நசுங்கி, ஊற்றின் அருகே சால் உடைந்து, துரவண்டையில் உருளை நொறுங்கி – அதாவது பொற்கிண்ணியாகிய இருதயம் நசுங்கி சாவு வருவதற்கு முன்னும்,
 
இப்படி மண்ணாண நம் சரீரம் பூமிக்குள் புதைக்கப்பட்டு ஆவி மறுபடியும் தேவனிடம் போகும் முன்பே நம் வாலிப பிராயத்திலே தேவனை நாம் நினைத்து அவரை ஏற்று கொள்வோமாக.
 
வாலிப நாளில் உன் தேவனை தேடி ஓடி வா
பாவி உன்னை அழைக்கிறார் இயேசு ராஜனே 

ஜெபம்:

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, வாலிப நாட்களிலே சிருஷ்டிகராகிய உம்மை நினைக்கவும், ஏற்று கொள்ளவும் வாலிபர் ஒவ்வொருவருக்கும் உணர்த்தும். வாலிப நாட்களிலே உம்மை நேசிக்கிறவர்களாகவும், உம்மை முதன்மையாக வைத்து தங்கள் காரியங்களை செய்கிறவர்களாகவும் ஒவ்வொருவரையும் மாற்றும். தங்கள் தாலந்துகளை உமக்கென்று உபயோகப்படுத்தவும் கிருபை செய்யும். வயோதிப காலம் வரை காத்திராமல் வாலிபத்திலேயே உம்மை ஏற்றுகொள்ள கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.