விரல்கள் போதிக்கும் காரியங்கள்
உங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். – (சங்கீதம் 134:2).
தேவ சமுகத்திலே ஒவ்வொரு நாளும் நமது கைகளை கூப்பி ஜெபிக்க முழங்கால்படியிடும்போது, அவரை துதிக்க ஸ்தோத்தரிக்க ஆரம்பிக்கும்போது, நம்மை நாமே சீர்தூக்கி பார்ப்பதற்கு ஏதுவாக நமது கையின் ஐந்து விரல்களும் நமக்கு உணர்த்துகின்றன.
பெருவிரல்: நான் யார் என்பதைக் காட்டுகிறேன் என்று சவாலிடும் இந்த பெருவிரல் நம்முள்ளத்தில் மறைந்திருக்கும் பெருமையை நமக்கு உணர்த்துகிறது. தேவனிடமிருந்து வரும் கிருபையை தடுக்கும் அப்பெருமை எண்ணத்தை அடியோடு அகற்ற பிரயாசப்படுவோம். மேலும் எந்த காரியத்தை குறித்து நான் பெருமை கௌ;கிறேன்? என நம்மையே ஆராய்நது சீர்பொருந்துவோம்.
ஆள்காட்டிவிரல்: மற்றவர்கள் மீது எளிதாக யோசிக்காமல் குற்றம் சுமத்தும் சுபாவத்தை இது உணர்த்துகிறது. நீதான் செய்தாய், நீதான் பாவி, நீ தான் குற்றவாளி என அநேக நேரங்களில் குற்றப்படுத்துகிறோம். ரோமர் 2:2ன் படி நம்மை ஆராய்ந்து பார்ப்போமானால் மற்றவர்களை குற்றமாக தீர்க்கிறவைகள் எவைகளோ அவற்றை நாமும் செய்து கொண்டுதான் இருக்கிறோம் என்பதை தேவன் நமக்கு உணர்த்துவார்.
நடுவிரல்: எப்போதும் எங்கேயும் நான் தான் தலைவனாகயிருக்க வேண்டும். நான் சொல்வதை தான் அனைவரும் கேட்க வேண்டும், வீட்டிலும் அலுவலகத்திலும் எல்லா பாராட்டுகளும், பெருமைகளும் எனக்கே வரவேண்டும் என்ற சவுலின் எண்ணத்தை இது உணர்த்துகிறது. திறமைகளை நமக்கு கீழுள்ளவர்களிடம் காணும்போது பொறாமை கொண்டு அவர்களை சவுல் தாவீதை துரத்துவதைப் போல் விரட்டியடிக்காமல் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளும் நல்ல இருதயத்தை தேவனிடம் கேட்போம்.
மோதிரவிரல்: சமுதாயத்தில் நமக்கு இருக்கும் செல்வாக்கையும் அந்தஸ்தையும் அதிகாரத்தையும் கொண்டு நான் எல்லாவற்றையும் சாதித்து விடுவேன் என்ற எண்ணம் உள்மனதில் உள்ளதா? கர்த்தரை உங்கள் நம்பிக்கையாக கொள்ளாமல் செல்வத்தை நம்புகிறீர்களோ? வேதம் கூறுகிறது, ‘கர்த்தரை தன் நம்பிக்கையாக கொண்டுள்ள மனுஷன் பாக்கியவான்’ என்று. அப்படிப்பட்ட பாக்கியாவான்களாக மாற நம்மை அர்ப்பணிப்போம்.
சுண்டுவிரல்: சமுதாயத்தில் சபையில் நலிவடைந்தோரை எளியவர்களை அற்பமாய் எண்ணும் சுபாவம், அலுவலகத்தில், பள்ளியில், ஞானமற்றவர்களையும், திறமையற்றவர்களையும் ஒருபடி கீழானவர்களாகவே எண்ணுகிறோம். இந்த எண்ணம் மாறி கிறிஸ்துவின் சிந்தை நம்மில் காணப்பட கருத்தாய் ஜெபிப்போம். மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்’ என்ற பவுலின் ஆலோசனை நமதாகட்டும்.
இப்படி நாம் ஜெபிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு இந்த ஐந்து காரியங்களையும் சிந்தித்து, இதில் ஏதாவது நம்மிடத்தில் உள்ளதா என்று கர்த்தருடைய சமுகத்தில் ஆராய்ந்து பார்த்து, திருந்த வேண்டிய இடத்தில் திருந்தி, கர்த்தருக்குள் வளர தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வராக! ஆமென் அல்லேலூயா!
கறைகள் நீங்கிட கைகளை கழுவி
கர்த்தரை துதிக்கின்றேன் – என்
பலிபீடத்தை சுற்றி சுற்றி
நான் வலம் வருகின்றேன்
ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த நாளில் எங்கள் கரங்கள் எங்களுக்கு உணர்த்தும் காரியங்களுக்கு நாங்கள் செவிக்கொடுத்து, திருந்த வேண்டிய காரியங்களில் திருந்தி, இந்த புதிய வருடத்தில் இன்னும் உம்மை கிட்டி சேரவும், எங்கள் கரங்களை பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக உயர்த்தி, உம்மை ஸ்தோத்தரிக்கவும் கிருபை செய்யும். எந்த விதத்திலும் உமக்கு பிரியமில்லாத காரியங்களில் நாங்கள் ஈடுபடாதபடி, பரிசுத்தமாய் எங்களை காத்துக்கொள்ள கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.