சாத்தானின் தந்திரங்கள்

சாத்தானின் தந்திரங்கள்

உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. – (1 யோவான் 2:15).
நம்மில் அநேகர் ட்ரோஜான் குதிரையை (Trojan Horse) குறித்து கேள்விப்பட்டிருப்போம். ட்ரோஜான் நாட்டிற்கும் கிரேக்க நாட்டிற்கும் இடையில் பத்து வருடங்களுக்கு மேலாக யுத்தம் நடந்து கொண்டிருந்தது. இரு தரப்பிலும் யாரும் ஜெயிப்பது போல இல்லை. ஆதலால் கிரேக்கர்கள் ஒரு தந்திரமான யோசனை செய்தார்கள். அதன்படி அவர்கள் போரில் போரிட்டு களைத்து போனவர்கள் போலவும், அதனால் அவர்கள் போரை கைவிட்டு, தங்கள் இடத்திற்கு திரும்பி போவது போலவும் ட்ரோஜானியர் நினைக்கும்படியாகவும், அதற்கு அப்படி போவதற்குமுன் ஒரு பெரிய குதிரை ஒன்றை மரத்தால் செய்து, யாரும் அறியாதபடி அந்த குதிரைக்குள் கிரேக்க போர் வீரர்கள் 30 பேர் ஒளிந்து கொள்ளத்தக்கதாக உருவாக்கினார்கள்.  அந்த மரக்குதிரையில் அந்த முப்பது வீரர்களும் ஒளிந்து கொண்டார்கள். அதை அந்த இடத்தில் விட்டுவிட்டு, மற்றவர்கள் படகில் ஏறி திரும்ப செல்வது போல காட்சியளித்தார்கள்.
 
இந்த பெரிய குதிரையை கண்ட ட்ரோஜர்கள், இது என்ன என்று ஒருவரையொருவர் கேட்டு கொண்டார்கள். யாருக்கும் என்னவென்று தெரியவில்லை. அப்போது அங்கு ஒளிந்து கொண்டிருந்த ஒரு கிரேக்கனை கண்டார்கள். அவனை பிடித்து வந்து கேட்டபோது, அவன், ‘மற்ற கிரேக்கர்கள் என்னை வெறுத்தபடியால் என்னை இங்கு விட்டு விட்டு போய் விட்டார்கள்’ என்று கூறினான். (இதுவும் தந்திரத்தில் சேர்ந்ததுதான்). ஆகவே அவனிடம் ‘இந்த குதிரை என்னவென்று கேட்டபோது, இது அத்தேனே கடவுளுக்கு காணிக்கையாக கிரேக்கர்கள் விட்டு சென்றது’ என்று கூறினான். கடவுளுக்கு என்று கூறின உடனே அவர்கள் அந்த குதிரையை (மிகவும் கனமானது, அதன் கால்களில் சக்கரம் கட்டியிருந்தது) மிகவும் கஷ்டப்பட்டு இழுத்து கொண்டு தங்கள் நகரமாகிய ட்ராயின் உள்ளே கொண்டு சென்றார்கள். அது உள்ளே நுழைய அதன் வாசலை உடைக்க வேண்டிதாய் இருந்தது. அந்த குதிரையை அத்தேனே கடவுளின் கோவிலருகே விட்டுவிட்டு, இவர்கள் தங்கள் வெற்றியை கொண்டாட குடித்து வெறித்து, கடைசியில் உறங்க ஆரம்பித்த போது, குதிரையின் உள்ளே இருந்த 30 வீரர்களும், வெளியே குதித்து, நகரத்தை காப்பவர்களை கொன்றுவிட்டு, நகரத்தின் வாசலை திறந்து விடவும், வெளியே அதற்கென்றே காத்திருந்த கிரேக்க வீரர்கள் உள்ளே நுழைந்து, ஒரு ஆண் விடாமல் எல்லா ட்ரோஜரையும் கொன்று விட்டு, பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக கொண்டு சென்றார்கள் என்று கூறப்படுகிறது. இது உண்மையாக நிகழ்ந்ததோ, இல்லையோ நமக்கு தெரியாது. ஆனால் இதிலிருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய சத்தியம் உண்டு.
 
இந்த உலகம் என்ன கொடுக்கிறதோ அதை கண்டு ஏமாற்றப்பட்டு போகக்கூடாது. ‘உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்’ – (1யோவான் 2:15:16) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. உலகத்தில் உள்ளவைகள் கவர்ச்சியாக தோற்றமளிக்கலாம், எல்லாமே மிகவும் அருமையாக தோன்றலாம், மிகவும் சிறந்ததாக எண்ணப்படலாம். ஆனால் அவைகளில் அன்பு கூராதிருங்கள் என்று வேதம் நமக்கு கூறுகிறது.
 
‘அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்’  (ஆதியாகமம் 3:6). அந்த கனி அவளுடைய கண்களுக்கு இன்பமாயிருந்ததாம், இச்சிக்கப்பட தக்கதாய் இருந்ததாம், அதாவது விரும்பத்தக்கதாக இருந்ததாம். அந்த பிசாசின் தந்திரத்தை அவள் நம்பி, அதை புசித்து, தன் கணவனுக்கும் கொடுத்தாள். ஆதனால் பாவமும் சாபமும் உலகத்திற்குள் நுழைந்தது.
 
எப்படி அந்த குதிரை அந்த டிராய் நகருக்குள் தந்திரமாய் நுழைந்து, பேதைகளாயிருந்த டிரோஜானியரை எப்படி ஏமாற்றியதோ, அப்படியே சத்துருவும், கண்களுக்கு இன்பம் காட்டி, ஆசை வார்த்தைகளை பேசி, உள்ளே நுழைவான். ஆனால் அவன் வந்த பின், தருணம் பார்த்து, வெளியே வந்து, எல்லாவற்றையும் அழித்து போடுவான். சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே (2 கொரிந்தியர் 11:14)  என்று வேதம் நமக்கு கூறுகிறது. நல்லனை போல நடித்து, அவன் காரியத்தை சாதித்து கொள்வான். சில வேளைகளில் நல்ல நண்பனை போல இருந்து நம்மை ஏமாற்றுவான். சில வேளைகளில், நல்லவனை போல நல்ல வார்த்தைகளை பேசி மயக்கலாம். சில வேளை நல்ல ஆலோசனை கூறுவது போல இருக்கலாம்.  ஆனால் அவனுக்கு பின்னாக இருப்பது நயவஞ்சகமாகும். ‘சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு, அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே’ (2கொரிந்தியர் 2:11). அவனுடைய தந்திரங்களை அறிந்த ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விழித்திருந்து ஜெபித்து பிசாசானவனை எதிர்த்து நிற்க வேண்டும். நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். – (மத்தேயு 26:41).
 
நம் கண்களுக்கு எத்தனை இன்பமானதாய் இருந்தாலும், எவ்வளவுதான் இச்சிக்கப்பட தக்கதாக இருந்தாலும், அது எந்த மனிதனாகவோ, அல்லது மனுஷியாகவோ எந்த காரியமாகவோ இருந்தாலும் அதை நாம் நமக்கென்று எடுத்து கொள்வதற்கு முன்  ஜாக்கிரதையாக நாம் சிந்தித்து தீர்மானிக்க வேண்டும். உடனே அதற்கு நம்மை விட்டு கொடுத்து விடக்கூடாது. அதற்கு தேவ ஆலோசனையும், தேவ சமுகத்தில் தேவ மனிதர்கள் தருகிற ஆலோசனையோடும், வேதத்தில் தேவன் கற்று தருகிற காரியங்களையும் ஜெபத்தோடு பெற்று நம் வாழ்வில் சாத்தானின் தந்திரங்களிலிருந்து ஜெயமெடுக்க தேவன் நமக்கு கிருபை செய்வாராக. ஆமென் அல்லேலூயா!
 
ஆவியில் நிறைந்து ஜெபம் செய்வோமே
ஆயுதங்கள் அணிந்து களம் செல்வோமே
ஆர்ப்பரித்தலங்கமதை வீழ்த்தியே
ஆவிகளின் சேனைகளை வெல்வோமே
கொடிகள் ஏந்தும் படைகள் அல்லவா
 
கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே
கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே 
கைகளைத் தளர்ந்திடாமல் தாங்கியே
கர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார் 
கர்த்தர் வல்ல யுத்த வீரரே
 
யெகோவாநிசி யெகோவாநிசி
யெகோவாநிசியை யெகோவாநிசியை
ஏற்றிப் பாடுவோம் 
எங்கள் கொடி வெற்றிக் கொடியே  

ஜெபம்:

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் எங்கள் நல்ல தகப்பனே, இந்த உலகத்தில் நாங்கள் சாத்தானுடன் நடத்தும் ஆவிக்குரிய யுத்தத்தில் ஜெயமெடுக்க எங்களுக்கு உதவி செய்யும். அவனுடைய தந்திர ஆலோசனைகளுக்கு எங்களை விலக்கி காத்து கொள்ள ஏற்ற ஞானத்தை எங்களுக்கு தருவீராக. சாத்தானின் சகல தந்திரங்களை தகர்த்தெறிய எங்களுக்கு ஆவியானவரின் ஒத்தாசையை நாள்தோறும் தருவீராக. மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமை எதுவும் எங்களை தொடாதபடிக்கும், உலகத்திலும் அதிலுள்ளவைகளிலும் நாங்கள் அன்பு கூராதபடிக்கும் எங்களை காத்து கொள்ளும்.   எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.