இயேசுகிறிஸ்துவின் நல் சீடர்களா?

இயேசுகிறிஸ்துவின் நல் சீடர்களா?

நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை  நீங்களே பரீட்சித்துப் பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை  நீங்களே அறியீர்களா? நீங்கள்  பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள். – (2 கொரிந்தியர் 13:5).
ஒரு நாள் உலகெங்கும் சென்று ஒவ்வொருவரையும் இயேசுகிறிஸ்துவின் சீஷர்களாக்க நாம் அழைக்கப்படட்டிருக்கிறோம். இயேசுகிறிஸ்து கடைசியாக உலகத்தில் இருந்து சென்றபோது கொடுத்துச் சென்ற கட்டளையது. ‘ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக்  கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்’ (மத்தேயு 28:19-20)
 
அப்படிப்பட்ட பெரிதான பொறுப்பை உடைய நாம் மெய் சீஷனாயிருக்கிறோமா என்று நம்மை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதற்கு உதவியாக பின்வரும் கேள்விகளை இயேசுகிறிஸ்து நம்மிடம் கேட்பாரானால் நாம் என்ன பதில் சொல்லுவோம்?
 
1. நான் உன்னை பரிசுத்தவானாக நிறுத்த வாஞ்சிக்கிறேன். நீயோ பணக்காரனாகவே அதிக கவனமாயிருக்கிறாய்!
 
2. என்னை உயர்த்துவாய் என்று எதிர்ப்பார்த்தேன். நீயோ என்னை உயர்த்துவதைப் போல பாசாங்கு செய்து கொண்டு, உன்னை உயர்த்திக் கொள்வதிலேயே குறியாயிருக்கிறாய்!
 
3. நீ என்னால் புகழப்படும் நாளுக்காக காத்திருப்பாய் என எதிர்ப்பார்த்தேன். நீயோ ஜனங்களால் புகழப்படுவதையே நோக்கமாக்கி அதிக அவசரமாய் ஓடுகிறாய்!
 
4. நீ ஆவியின் பட்டயத்தை எடுத்துக் கொண்டு சாத்தானை தோற்கடிப்பாய் என விரும்பினேன். நீயோ இறையியல் பட்டங்களை கொண்டு பெருமைப்பட்டு சாத்தானுக்கு முன்பாக விழுந்து போனாய்!
 
5. ஜனங்களை எனக்கு ஏற்றவர்களாக மாற்றும் பணிக்காகவே உன்னை தெரிந்து கொண்டேன். நீயோ ஜனங்களுககு ஏற்றவிதமாக என்னை மாற்றி காண்பித்து என்னை விசனப்படுத்தினாய்!
 
6. நான் பரிசுத்தராயிருப்பது போல நீயும் பரிசுத்தனாக மாறுவதுதான் எனது சித்தம். நீயோ என்னை பரிசுத்த வாழ்வின் மூலம் ஆராதிக்காமல், பரிசுத்தர் பரிசுத்தர் என்று துதிப்பதால் மட்டுமே நான் மகிமைப்பட்டுவிடுவேன் என்று நினைக்கிறாய்!
 
7. பிறர் பின்பற்றதக்கதாக முன்மாதிரியாக நீ நிற்பதற்காக உன்னை அழைத்தேன். ஆனால் உன்னுடைய வாழ்க்கையோ பலருக்கு ஒரு எச்சரிப்பாகும்படி மாறிப்போய் விட்டதே!
 
8. உன்னிடத்தில் ஆபிரகாமை போன்ற அர்ப்பணிப்பை நான் எதிர்ப்பார்த்தேன். ஆனால் நீயோ என்னிடமிருந்து ஆபிரகாமிற்கிருந்த செல்வ சிறப்பையே எதிர்ப்பார்க்கிறாய்!
 
9. என் சீடனே, நீ பேதுருவாய் இருக்க வேண்டும் என்பது என் வாஞ்சை.ஆனால் நீயோ யூதாசாக இருப்பதை உணராமல் வாழ்கிறாய்!
 
10. என் சீடனே, நீ எனக்காக சிலுவை சுமக்கவில்லை. உன் மாய்மால வாழ்க்கையினால் என்னை திரும்ப திரும்ப சிலுவையில் அறைகிறாய்!
 
கர்த்தர் நம்மைக் குறித்து இப்படி சொல்வாரானால் எத்தனை பரிதாபம்! நாம் அவருக்கேற்ற சீஷனாக இல்லாமல், அவர் விரும்பும் வண்ணம் வாழாமல் போனால், நாம் மற்றவர்களை எப்படி சீஷர்களாக்க முடியும்? நம்மை நாமே சோதித்து அறிந்து, நம்மை உண்மை சீஷர்களாக மாற்றி கொள்ள முயற்சிப்போம்.
 
உலகத்தின் எந்த காரியங்களும் தேவனை விட்டு நம்மை பிரிக்;காதபடி, நம்முடைய சாட்சியின் வாழ்க்கையினால் தேவனை மகிழ்விப்போம். அவருக்கு உண்மை சீஷர்களாக, மற்றவர்களையும் அப்படிப்பட்டவர்களாக மாற்ற தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா! 
 
இயேசுகிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
விசுவாசத்தில் முன் நடப்போம்
இனி எல்லாருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம்
 
நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரே
அதி வேகமாய் செயல்படுவோம் 

ஜெபம்:

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் உமக்கு உண்மை சீஷர்களாக இருக்க வேண்டுமென்பதே உம்முடைய வாஞ்சையும் சித்தமுமாய் இருப்பதால், மேலே காணப்பட்ட காரியங்கள் எதுவும் எங்கள் வாழ்க்கையில் காணப்படாதபடி எங்களை காத்துக் கொள்ள கிருபை செய்யும். நல்ல சீடர்களாக விசுவாசத்திலும், அன்பிலும், கிரியைகளிலும் உம்மை வெளிப்படுத்த கற்றுத்தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.