ஒருமனம் ஒற்றுமை

ஒருமனம் ஒற்றுமை 

நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். – (யோவான் 17:22).
கோல்டன் கேட் பாலம் எனப்படும் சான் பிரான்சிஸ்கோவின் மிகப்பெரிய பாலம் மிகவும் அதிகமான போக்குவரத்து நடைபெறும் பாலமாகும். அது அத்தனை அதிக போக்குவரத்து உடையதாய் இருந்தாலும் இரண்டு உறுதியான கம்பி கயிறுகளால் மட்டுமே இது தாங்கப்பட்டு வருகிறது. இரண்டு கம்பி கயிறுகள் தாங்கினாலும், ஒரு கம்பி கயிற்றில் மாத்திரம், சுமார் 20,000த்துக்கும் மேலான சிறு சிறு கம்பி வடங்கள், ஒன்றாக இணைத்து பின்னப்பட்டு, ஒரே உறுதியான கம்பி கயிறாக மாற்றப்பட்டு, அந்த பெரிய பாலத்தை தாங்குகிறதாயிருக்கிறது. அதில் ஒரு சிறு கம்பி வடம் ஒரு புதிய காரை தாங்கும் திறனுடையது.  எத்தனைதான் போக்குவரத்து இருந்தாலும் எந்தவித தடங்கலுமின்றி, எந்தவித பாதிப்பும் இன்றி இந்த கம்பிகயிறுகள் பாலத்தை உறுதியாய் தாங்குகிறவைகளாய் இருக்கின்றன.
 
அதைப்போலத்தான், ஒவ்வொரு சிறு கம்பிவடங்களை போல ஒவ்வொரு கர்த்தருடைய பிள்ளையும், கர்த்தர் கொடுத்த தாலந்துகளினால், கர்த்தர் கொடுத்த கிருபை வரங்களினால் நிறையப்பட்டவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் தேவனோடு இணைந்து ஒரே கம்பி கயிறாக மாற்றப்படும்போது, தேவனுக்காக பெரிய காரியங்களை செய்கிறவர்களாக மாறுகிறார்கள்.
 
தேவன் ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தாலந்துகளை கொடுத்திருக்கிறார். யாரும் எனக்கு எந்த தாலந்தும் இல்லை என்று கூறவே முடியாது. ஆனால் தேவன் தங்களுக்கு தாலந்துகளை கொடுத்திருக்கிறார் என்பதை விசுவாசிகள் உணர்வதில்லை. தங்களால் தேவனுக்கென்று பெரிய காரியங்களை செய்ய முடியும் என்று விசுவாசிப்பதும் இல்லை.  காலம் முழுவதும் கேட்கிறவர்களாகவே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வசனம் கேட்கும்போதுதான் விசுவாசம் பெருகும். வசனத்தை கேட்டப்பின் கர்த்தருக்கென்று எழும்பி பிரகாசிக்கவே வேண்டும். அப்படியே மாணவர்களை போல உட்கார்ந்து கேட்டு கொண்டே இருக்க கூடாது.
 
இஸ்ரவேலில் சவக்கடல் என்று ஒரு கடல் இருக்கிறது. அதில் அதிக உப்பேறி இருப்பதால் அதன் நீர் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை. இந்த கடலில் யோர்தான் நதியின் தண்ணீர் விழுகிறது. மழை நீரும் அதில் விழுகிறது. ஆனால் எல்லாவற்றையும் உள்வாங்கி கொண்ட கடல், ஒன்றுக்கும் பயனில்லாமல், விவசாயத்திற்கோ, உயிரினங்கள் வாழ்வதற்கோ பயனில்லாதவாறு வெறுமனே இருக்கிறது. அதுப்போல நாமும் வசனங்களை கேட்டு அதன்படி செய்யாமலோ, கர்த்தருக்காக எதையாவது செய்யாமல் போனாலோ, நாம் கேட்டு கொண்ட வசனங்களினால் யாருக்கும் பயனில்லாமல் போகும்.
 
தாலந்துகளாலும் கிருபை வரங்களாலும்  நிறைந்த விசுவாசிகளும், தேவ பிள்ளைகளோடு இணைந்து சபையில் இருந்து ஊழியத்தை செய்ய வேண்டும். எனக்கு வசனம் தெரியும், தேவன் எனக்கு தாலந்துகளை கொடுத்திருக்கிறார், நான் யார் கீழ் இருந்தும் ஊழியம் செய்ய தேவையில்லை என்று போவோமானால், அது கர்த்தருக்கு வருத்தத்தையே கொடுக்கும். தேவன் சபையின் பக்திவிருத்திக்காகத்தான் ஊழியங்களை கொடுத்திருக்கிறார். ‘பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்’ (எபேசியர் 4:12-13) என்று வேதம் தெளிவாக கூறுகிறது.
 
தேவன் கொடுத்த ஊழியங்களை சபையில் இருந்து, மற்ற விசுவாசிகளோடு ஒன்றிணைந்து ஒரே தேவனுடைய பிள்ளைகளாக அவற்றை நிறைவேற்ற வேண்டும். தேவனோடு நாம் இருந்து செய்யும்போது நாம்தான் ஹீரோ, தேவன் இல்லாமல் நாம் செய்யும் எந்த காரியமும் ஜீரோதான்.
 
சபையில் சக விசுவாசிகளோடு ஐக்கியமாயிருக்க வேண்டும். ஒன்றாக இணைந்த கம்பி வடங்களே, பெரிய உறுதியான கம்பிகயிற்றுக்கு உறுதியை கொடுக்கின்றன. ஆப்படி கம்பி வடங்கள் தனித்தனியாக இருந்தால், அது ஒரு கார் போவதற்குள் அறுந்து விழுந்து விடும். அதுப்போல சபையின் விசுவாசிகளுக்குள் ஒரு மனம் மிகவும் முக்கியம். ஒரு மனம் இருக்கும் இடத்தில் ஆவியானவர் பெரிய காரியங்களை செய்வார். கிறிஸ்து தமது சொந்த இரத்தத்தை சிந்தி சம்பாதித்த சபையில் ஒருமனதோடு அவர் நாமத்தை உயர்த்துவோமாக! தேவனின் நாமம் மகிமைப்படட்டும்! ஆமென் அல்லேலூயா!
 
விசுவாசிகள் என்னும் கூட்டம் உண்டு
அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு
ஒரு மனம் ஒற்றுமை அங்கு உண்டு
என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும்
 
இனிவரும் நாட்களில் நமது கடன்
வெகு அதிகம் விசுவாசிகளே
நம்மிடம் உள்ள ஐக்கியமே
வெற்றியும் தோல்வியும் ஆக்கிடுமே
 
இருள் சூழும் காலம் இனிவருதே
அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்
திறவுண்ட வாசல் அடைபடும் முன்
நொறுங்குண்ட மனதாய் முன் செல்வோர் யார்

ஜெபம்:

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, விசுவாசிகள் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் நேசித்து, மற்றவர்களை கனப்படுத்தவும், அன்பு கூரவும் இருதயங்களில் அன்பை ஊற்றுவீராக. ஒரு மனதை கட்டளையிடுவீராக.  ஓற்றுமையோடு  இந்த கடைசி நாட்களில் உமக்கு சாட்சியாக வாழ கிருபை செய்வீராக. போட்டிகளையும் பொறாமைகளையும் மாற்றி ஒருவரையொருவர் நேசிக்க கிருபை செய்யும்.   எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.