சர்ப்பம் பாகம் இரண்டு
சர்ப்பம் பாகம் இரண்டு – 8th April 2013தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது -(ஆதியாகமம் 3:1).
நேற்றைய தினத்தில் சர்ப்பத்தின் தன்மைகளும், அது மனிதர்களை ஆட்கொள்வதினால் உண்டாகும் கொடிய பழக்கங்களையும் கண்டோம். தொடர்ந்து அதன் தொடர்ச்சியை காண்போம்.
6. குடிப்பழக்கம்: மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே. மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும் (நீதிமொழிகள் 23:30-32). குடிப்பழக்கம் உடையவன் சத்துருவினுடையவன். குடிக்கிறவனின் உள்ளே சர்ப்பம் இருக்கிறது என்று நாம் உணர வேண்டும். எந்த விதத்திலும் இந்த அசுத்த பழக்கம் யாருக்கும் இருக்கக் கூடாது. அரசாங்கமே டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து, மக்களை குடியர்களாக மாற்றிக் கொண்டு இருக்கிறது. அரசாங்கத்திற்கு அதன் மூலம் கோடி கோடியான பணம் கிடைப்பதால் தைரியமாக மக்களை பாவத்தில் விழ வைத்துக் கொண்டிருக்கிறது அரசாங்கம். அந்த பழக்கத்தை உடையவர்கள் அதிலிருந்து விடுதலையாக வேண்டும் என்றும், அதற்கு யாரும் அடிமையாகக்கூடாது என்றும் நாம் ஜெபிக்க வேண்டும்.
7. குடல்நோய்: அவன் போஜனம் அவன் குடல்களில் மாறி, அவனுக்குள் விரியன்பாம்புகளின் பிச்சாய்ப்போகும் (யோபு 20:14). சில குடல் வியாதிகள் சாத்தானால் கொண்டு வரப்படுகிறது. அநேகருக்கு குடல்களில் வியாதி இருந்து, அதினால் சரியாக சாப்பிடக்கூட முடியாத நிலைமை காணப்படுகிறது. ஆது சத்துருவினால் வருகிறது என்று அறியும்போது, அதை கட்டி ஜெபித்து, சாத்தானின் அந்த கட்டிலிருந்து நாம் வெளியேற வேண்டும்.
8. விழப்பண்ணுகிறவன்: தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான் (ஆதியாகமம் 49:17). குதிரையின் மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் குதிரையின் குதிகாலை கடிக்க வழியில் கிடக்கிற சர்ப்பம் என்று பார்க்கிறோம். கர்த்தருக்குள் வளருகிறவனை பின்மாற்றம் செய்யப்பண்ணுகிறவனாக, முன் நோக்கி செல்பவனை காலை வாரி விடும்படியாக கீழே விழத்தள்ளுகிறவன் யாராயிருந்தாலும் அவனுக்குள் சர்ப்பம் இருக்கிறது என்று அர்த்தமாகும்.
9. அலப்பு வாயன்: தடைகட்டப்படாத பாம்பு கடிக்குமே, அலப்புவாயனும் அதற்கு ஒப்பானவன் (பிரசங்கி 10:11). எந்த நேரமும் லொட லொட என்று யாராவது பேசிக் கொண்டிருந்தால், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களுக்குள் சர்ப்பம் உண்டு. நமது வார்த்தைகள் அளவோடு இருக்கட்டும். சிலர் போன் எடுத்தால் மணிக்கணக்கில் பேசாமல் கீழே வைக்கமாட்டார்கள். தேவையற்ற வார்த்தைகள் பேசுவது பாவமாகும். அது அலப்பு வாயனுக்கு ஒப்பாகும்.
10. சத்தியத்தை கேளாதபடி செவியை விலக்குவது: பாம்பாட்டிகள் விநோதமாய் ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன் காதை அடைக்கிற செவிட்டு விரியனைப்போல் இருக்கிறார்கள் (சங்கீதம் 58:5). சேவிட்டு விரியனுக்கு காது கேட்காது. அதுப்போல சத்தியத்தை எந்த விதத்திலே சொன்னாலும், அவர்கள் அதை கேட்காதபடி தங்கள் செவியை அதற்கு விலக்குவார்கள். மன்னாவை அனுப்பும்போது, தயவு செய்து இந்த மாதிரி காரியங்களை எனக்கு அனுப்பாதீர்கள் என்று சிலர் நல்ல விதமாகவும், சிலர் திட்டியும் அனுப்புவது உண்டு. சத்தியத்தை கேளாதபடி நம் செவியை விலக்குவோமானால் சர்ப்பம் உண்டு என்பதை அறிய வேண்டும்.
11. மாயக்காரன்: மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே!.. சர்ப்பங்களே, விரியன்பாம்புக் குட்டிகளே! (மத்தேயு 23:29,33). மாய்மாலம் பண்ணுகிறவர்கள் சத்துருவினால் உண்டானவர்கள். எந்த காரியத்திலும் நாம் மாய்மாலம் பண்ணுகிறவர்களாக இருக்கக்கூடாது. உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்ல வேண்டும். ஒரு இடத்தில் ஒரு மாதிரியும், வேறு இடத்தில் ஒரு மாதிரியும் வாழக்கூடாது. ஒரே மாதிரி எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் ஜீவிக்க வேண்டும்.
12. எதிர்பாராத ஆபத்து: சிங்கத்துக்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டுக்குள்ளே வந்து சுவரின்மேல் தன் கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும் (ஆமோஸ் 5:19). சிங்கத்துக்கு தப்பி ஓடிவந்தவன், கரடிக்கு முன்னே மாட்டிக் கொண்டு, அதனிடமிருந்து எப்படியோ தப்ப, வீட்டுக்குள்ளே வந்து, தான் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டேன் என்று நினைத்து அப்பாடா என்று சுவற்றில் கையை வைத்தபோது, பாம்பு வந்து அவன் எதிர்பாராதபடி கடித்து உயிர் போனால் எப்படி இருக்கும்? ஆம், எதிர்பாராத விபத்துக்களையும், ஆபத்துக்களையும் கொண்டு வருபவன் சத்துருவே!
நாம் தொடர்ந்து பன்னிரண்டு காரியங்களை சர்ப்பம் சாத்தானால் கொண்டு வரப்படுகிறது என்று பார்த்தோம். இந்த காரியங்களில் எதுவும் நம் வீட்டிலோ நம்மிடத்திலோ காணப்படவே கூடாது. இந்த சத்துருவை இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினாலும், சாட்சியின் வசனத்தினாலும் நாம் ஜெயித்தே ஆக வேண்டும். தொடர்ந்து நாம் சத்துரு நம்மை கட்டிவைத்து, அவனுடைய தந்திரங்களில் அகப்பட்டு தவித்தது போதும். நாம் வெற்றி எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது.
ஒவ்வொரு நாளும் இந்த காரியங்கள் என் வாழ்வில் காணப்படக்கூடாது என்று நாம் ஜெபிக்க வேண்டும். வீட்டின் நிலைக்கால்களிலும், என் வீட்டைச் சுற்றிலும், இயேசுகிறிஸ்துவின் திரு இரத்தத்தை பூசுகிறேன். சங்காரத்தூதன் என் வீட்டை தொடாதபடி, மனுஷீக போராட்ட ஆவிகளும், பொல்லாத ஆவிகளும் என் வீட்டை அணுகாதபடி இயேசுகிறிஸ்துவின் இரத்தக் கோட்டைக்குள்ளே என் வீட்டை வைக்கிறேன் என்று தினமும் ஜெபிக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே போகும்போவதற்கு முன்பு, இயேசுவே உம்முடைய இரத்தக்கோட்டைக்குள்ளே என்னை வைத்துக் காத்துக் கொள்ளும். சத்துருவின் அந்தகார சக்திகளுக்கும், வல்லமைகளுக்கும் எதுவும் என்னை அணுகாதபடி கிறிஸ்துவின் இரத்தத்திற்குள் வைத்துக் காத்துக் கொள்ளும் என்று ஜெபித்து வெளியே செல்ல வேண்டும். அப்பொழுது தேவ பிரசன்னமும், பாதுகாப்பும் நம்மை மூடிக்கொள்ளும். அப்படி நம்மை பாதுகாத்து தேவ கிருபைக்குள் வளர தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக. ஆமென் அல்லேலூயா!
இரத்தக் கோட்டைக்குள்ளே நான் நுழைந்து விட்டேன்
இனி எதுவும் அணுகாது
எந்த தீங்கும் தீண்டாது
இயேசுவின் இரத்தம் என்மேலே
நெருங்காது சாத்தான்
பாசமாய் சிலுவையில் பலியாகி
பாவத்தை வென்று விட்டார்
ஜெபம்:எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, சத்துருவின் எந்த அக்கினியாஸ்திரங்களிலிமிருந்து நாங்கள் வெற்றி எடுக்கும்படியாக இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தை எங்களுக்கு பாதுகாப்பாக கொடுத்திருக்கிற தயவிற்காக உமக்கு கோடி நன்றிகள் ஐயா. எங்கள் வீட்டைச் சுற்றிலும், எங்களையும், எங்கள் பிள்ளைகளை சுற்றிலும் எங்களுக்கு உண்டான எல்லாவற்றை சுற்றிலும், எங்களுக்கு நீர் கொடுத்த நல்ல வேலைகளை சுற்றிலும் இயேசுகிறிஸ்துவின் இரத்தக் கோட்டைக்குள்ளே வைக்கிறோம் தகப்பனே. சத்துருவோ, சங்காரத்தூதனோ உள்ளே நுழையாதபடி காத்தருளும். சர்ப்பதின் எந்த குணாதிசயங்களும் யாருக்குள்ளும் இருக்காதபடி எங்களை காத்துக் கொள்ள கிருபை தாரும். இயேசுகிறிஸ்துவின் அதிகாரமுள்ள நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம் நல்ல தகப்பனே ஆமென். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
|