சர்ப்பம் பாகம் ஒன்று

சர்ப்பம் பாகம் ஒன்று

தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது.  – (ஆதியாகமம் 3:1)
ஒரு சர்ப்பமானது ஏவாளை வஞ்சித்து, தேவன் விலக்கிய ஏதேன் தோட்டத்தின் நடுவிலிருந்து விருட்சத்தின் கனியை புசிக்க வைத்தது என்று அறிவோம். மட்டுமன்றி, அவள் ஆதாமையும் புசிக்க வைத்து பாவத்திற்குட்படுத்தினாள் என்று வேதத்தில் பார்க்கிறோம்.
 
சர்ப்பம் என்பது சாத்தானையும், பாவத்தையும், சாபத்தையும் குறிக்கிறது. அதிலிருந்து நாம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினாலும், அவருடைய விலைமதிக்க முடியாத வசனத்தினால் மாத்திரமே நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
 
அக்காலத்திலே கர்த்தர் லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, கடிதும் பெரிதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்;  சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார் என்று ஏசாயா 27:1 ல் வாசிக்கிறோம். தேவன் கடிதும், பெரிதும், பலத்ததுமான பட்டயத்தால் அந்த சர்ப்பத்தை ஒரு நாளில் கொன்று போடுவார்.
 
அந்த சர்ப்பத்தை தண்டிப்பது சபையின் கடமையுமாகும். சபையாராக ஒன்று சேர்ந்து நாம் ஜெபிப்போம், சாத்தானை மிதிப்போம் என்று பாடும்போது, அவன் அங்கு தோற்கடிக்கப்பட்டு போகிறான். நம்முடைய பரிசுத்த வாழ்வினாலே அவன் அங்கு தோற்கடிக்கபட்டு போகிறான். சாட்சியின் வசனத்தினாலே அவன் தோற்கடிக்கப்பட்டு போகிறான். இயேசுகிறிஸ்து தம்மிடம் சாத்தான் சொன்ன வசனங்களுக்கு வசனத்திலிருந்தே பதிலடி கொடுத்து அவனை தோற்கடிக்கப் பண்ணினார். அல்லேலூயா!
 
வேதத்தில் சில பாவமான காரியங்கள் செய்யும்போது அது சர்ப்பத்தினால் வருகிறது என்று பார்க்கிறோம். அதைக் குறித்து நாம் அறிந்தோமானால் அதிலிருந்து விலகி ஜீவிக்க நமது உதவியாயிருக்கும். அநேகரை பிசாசானவன் தன் கட்டிற்குள் வைத்திருக்கிறான். அவர்கள் வெளியே வரமுடியாதபடி அவன் அவர்களை தன் வியாதியின் கட்டு, மந்திரத்தின் கட்டு என்று பலவித கட்டுகளால் கட்டி வைத்திருக்கிறான். அவனுடைய கட்டிலிருந்து நாம் விடுதலையாகி, குமாரன் விடுதலையாக்கினால் மெய்யாகவே நீங்கள் விடுதலையாவீர்கள் என்ற வார்த்தையின்படி குமாரனாகிய இயேசுகிறிஸ்துவினால் விடுதலையாக்கப்பட்டு சமாதானமாய் வாழ்வோர்கள் அநேகர்.
 
1. சாத்தான்: உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது (வெளிப்படுத்தின விசேஷம் 12:9). சாத்தானே வலுசர்ப்பமானவன். வலுசர்ப்பத்தின் படங்களும், சித்திரங்களும் எங்கெங்கே இருக்கிறதோ அங்கெல்லாம் சாத்தான் ஆட்சி செய்கிறான் என்று அறிந்து கொள்வோம்.
 
2. தந்திரம்: தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது (ஆதியாகமம் 3:1). சாத்தான் தந்திரமுள்ளவன் என்று பார்க்கிறோம். யாராவது மிகவும் தந்திரமுள்ளவர்களாக இருந்தால் அவர்கள் சாத்தானை உடையவர்கள் என்று நாம் அறிய வேண்டும். எந்த விதத்திலும் தந்திரமானது கிறிஸ்துவுக்குள் வாழுகிற யாருக்கும் இருக்க கூடாது.
 
3. சாபம்: அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய் (ஆதியாகமம் 3:14). தேவன் சர்ப்பம் தந்திரமுள்ளதாக மனிதனை ஏமாற்றினபடியால் அதை சபித்தார். சர்ப்பம் இருக்குமிடம் சபிக்கப்பட்ட இடமாகும். அங்கு சாபம் தங்கும். யாருடைய வீட்டிலும் சர்ப்பத்தின் உருவமோ, படமோ, எந்த சாவி செயினிலோ எதிலும் அதன் உருவத்தை வைத்திருக்கக் கூடாது.
 
4. சூனியங்கள்: மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று. அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள் (யாத்திராகமம் 7:10-12) சூனியம் செய்பவர்கள் தங்கள் மந்திர வித்தைகளினால் சர்ப்பத்தை தங்கள் இஷ்டப்படி செய்ய வைக்கிறார்கள். சூனியம் செய்பவர்களும் மந்திர தந்திரங்கள் செய்பவர்களும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள். பிசாசின் உதவியால் அவர்கள் செய்யும் அக்கிரமங்கள் அநேகம். கர்த்தருடைய பிள்ளைகளுக்கு விரோதமாக அவர்கள் செய்யும் எந்த காரியமும் வாய்க்காதே போகும். அல்லேலூயா!
 
5. வெறுமையாக்கப்படுதல்: பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னைப் பட்சித்தான், என்னைக் கலங்கடித்தான், என்னைவெறும் பாத்திரமாக வைத்துப்போனான;  வலுசர்ப்பம்போல என்னைவிழுங்கி, என் சுவையுள்ள பதார்த்தங்களால் தன் வயிற்றை நிரப்பினான், என்னைத் துரத்திவிட்டான் (எரேமியா 51:34) இந்த இடத்தில் வலுசர்ப்பம் போல என்னை விழுங்கி, வெறுமையாக பாத்திரமாக வைத்துப்போனான் என்று சொல்வதை காண்கிறோம். நான் எல்லாவற்றையும் இழந்து வெறுமையாக இருக்கிறேன் என்று சொல்கிறீர்களா? அது சாத்தானின் திட்டம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நம் பாத்திரம் நிரம்பி வழியும்படி ஆசீர்வதி;க்கிறவர் தேவன். நம்மை வெறுமையாக்குகிறவன் சாத்தான்.
 
தொடர்ந்து நாளைய தினத்திலும் கர்த்தருக்கு சித்தமானால் இதன் தொடர்ச்சியை காண்போம். சத்துருவை ஜெயிக்கும்படியாகவே நமக்கு தேவன் இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தையும், அதிகாரமுள்ள வசனத்தையும் கொடுத்திருக்கிறார். நாம் அவற்றை வைத்து நிச்சயமாகவே சத்துருவின் மேல் ஜெயம் எடுக்க வேண்டும். அப்படி ஜெயம் பெற்றவர்களாக வாழ தேவன் தாமே ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!
 
சர்ப்பங்களை மிதித்திடவும்
தேள்களை நசுக்கிடவும்
அதிகாரம் உண்டு வல்லமை உண்டு
தோல்வி இல்லை வெற்றி நமக்கே – என்றும்
தோல்வி இல்லை வெற்றி நமக்கே

ஜெபம்:

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, சாத்தான் தந்திரமுள்ளவனாய் ஆதிக்காலத்தில் இருந்தே மனிதர்களை வஞ்சித்து கொண்டிருக்கிறான் என்பதை நாங்கள் அறிந்தவர்களாக உணர்ந்தவர்களாக அவனை இயேசுவின் நாமத்தினால் ஜெயித்து வெற்றி எடுக்க எங்களுக்கு உதவி செய்யும். மேலே சொல்லப்பட்ட காரியங்களில் எதுவும் எங்கள் வாழ்வில் காணப்படாதபடி எங்களை பாதுகாத்தருளும். உம்முடைய இரத்தக் கோட்டைக்குள்ளே வைத்து எங்களை மூடிக் கொள்ளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.