ஆவிக்குரியவர்களின் அடையாளங்கள்

ஆவிக்குரியவர்களின் அடையாளங்கள் 

அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். – (ரோமர் 8:5).
பரிசுத்த ஆவியை பெற்று கொண்டதாக ஒருவர் நம்பினாலும் அவருடைய வாழ்க்கை பரிசுத்தமில்லாமலும், தெய்வீக குணங்களற்றதாகவும், தேவ சமாதானமற்றதாகவும் இருந்தால், அவரிடம் பரிசுத்த ஆவியானவர் இல்லை என்பதே பொருள். ஒருவர் தன்னிடம் பரிசுத்த ஆவி உண்டு, ஆனால் ஆவியின் கனிகள்தான் இல்லையென்றால் அவரிடம் பரிசுத்த ஆவி இல்லையென்பதே பொருள். ஏனென்றால் பரிசுத்த ஆவியினால் நடத்தப்படும் அனுபவம் இருந்தால் பரிசுத்த ஆவியினால் உருவாகும் நற்குணங்களாகிய கனிகள் நிச்சயமாக காணப்படும்.
 
ஆனால் இக்காலங்களில் அநேகர் பரிசுத்த ஆவியானவர் உடனிருப்பதை வேதம் கூறுகின்ற அடையாளங்களின் அடிப்படையில் பாராமல், தாங்கள் சிலநேரங்களில் உணரும் பரவச நிலை, மனக்களிப்பு, உற்சாகமான உணர்வு அவற்றின் அடிப்படையிலேயே பார்க்கிறார்கள். இவைகளையே பரிசுத்தஆவியை பெற்றிருப்பதற்கு அடையாளமாக எண்ணி விடுகின்றனர். ஆனால் பரிசுத்த ஆவியை பெற்று கொண்டதன் அடையாளம் பரிசுத்தம், நற்குணங்கள், நற்செயல்கள், அன்பு, சந்தோஷம், சத்தியத்தின்படி வாழ்தல், உண்மையை சார்ந்து தைரியமாக செயல்படுதல் போன்றவையே. இன்று அநேகர் உணர்ச்சி சார்ந்த அடையாளங்களை மட்டுமே பார்த்து ஆவிக்கேற்ற விளைவுகளை குறித்து பார்க்காமல் கண்களை மூடிக்கொள்கிறார்கள்.
 
அவர்களால் பிறரை நேசிக்க இயலவில்லை, மனரம்மியமாக வாழ முடியவில்லை, பண ஆசையை விட முடியவில்லை, தாழ்மையாய் செயல்பட முடிவதில்லை, விட்டு கொடுத்து வாழ முடியவில்லை, ஆடம்பரங்களை வெறுக்க இயலவில்லை, பிறருக்கு நன்மை செய்யும் ஆர்வம் இல்லை, பிறரை ஏற்று கொள்ளும் மனோபாவம் இல்லை இப்படி இவர்களின் வாழ்வில் இருக்குமென்றால்,  ஒரு பரவச உணர்வை அடைய முடிவதை மட்டுமே அடிப்படையாக வைத்து பரிசுத்த ஆவியை பெற்று கொண்டவர்களாக அவர்கள் எண்ணினால் அது அவர்கள் தங்களை தாங்களே வஞ்சித்துக் கொள்ளும் செயல். பிசாசானவன் அநேகரை தங்களின் உண்மை நிலையை உணரவிடாமல், கண்களை குருடாக்கி வைத்திருக்கிறான்.
 
பரிசுத்த ஆவியை பெற்றிருப்பதாக நமபும் ஒருவரின் குணநிலைகளும், செயலும், மனநிலையும் இன்னும் பழைய விதமாகவே இருந்தால் அவர் இன்னும் சுய ஆவியினால் நடத்தப்படுகிறாரேயன்றி தேவ ஆவியினால் நடத்தப்படவில்லை. பரிசுத்த ஆவியை பெற்றவர்கள் பரிசுத்தமாக வாழ்வார்கள், தேவ சித்தம் அறிந்து செயல்படுவார்கள். தேவ அன்பை வெளிப்படுத்துவார்கள், தெய்வீக குணநலன்களை பிரதிபலிப்பார்கள், பண ஆசை, பொருளாசையை வெறுப்பாகள். எத்தகைய் சூழ்நிலையிலும் சமாதானமும் சந்தோஷமும் உடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் கிறிஸ்துவின் இலக்கை நோக்கி போவார்களேயன்றி சுய ஆதாயத்தை நோக்கி செல்ல மாட்டார்கள். இவர்கள்தான் பரிசுத்த ஆவியை பெற்ற கிறிஸ்தவர்கள். மற்றவர்கள் யாவரும் வெறும் பக்தி பரவசம் உடையவர்களேயன்றி, ஆவியில் பிறந்த கிறிஸ்தவர்கள் அல்ல.
 
பரிசுத்த ஆவியை பெற்றிருக்கிறேன் என்று சொல்கிறவர்கள், நம்முடைய கிரியைகளில் அதை வெளிப்படுத்துவோம். நம்முடைய பேச்சில் அதை காட்டுவோம். நம்முடைய செயல்களில் அன்போடு செயல்படுவோம். மற்றவர்களை குறைகள் சொல்லி பேசி கொண்டு இருப்பதை நிறுத்துவோம். புறங்கூறுவதை நிறுத்துவோம்.  இவைகள் அல்லாதபடி நாம் பரிசுத்தஆவியினால் நிரம்பியிருக்கிறேன் என்று சொல்வதும், சபைகளில் ஆர்ப்பரித்து,  அந்நியபாஷையில் பேசுவதும் வெளிப்படையான செயல்களாக இருக்குமே ஒழிய, உண்மையான பரிசுத்தஆவியினால் நிரம்பி இருப்பவரின் அடையாளங்கள் அல்ல. ஜாக்கிரதையாய் இருப்போம். வஞ்சிக்கும் சத்துருவின் திட்டங்களுக்கு நம்மை காத்து கொள்வோம். ஆமென் அல்லேலூயா!
 
தேவ ஆவியில் நடந்த மனிதரெல்லாம்
அக்கினியாய் எழும்பி ஜொலித்ததுப் போல் 
என்னை மாற்றுமே என்னை மாற்றுமே
கலங்கரை விளக்காய் என்னை மாற்றுமே
 
ஆவியில் நடக்கணுமே – தேவ 
வார்த்தையில் நிலைக்கணுமே 
தூய ஆவியே என்னை நிரப்பிடுமே
தேவ ஆவியே என்னை நடத்திடுமே  

ஜெபம்:

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, பரிசுத்த ஆவியானவரை பெற்றிருக்கிறோம் என்று சொல்கிற ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் ஆவியின் கனிகளை வெளிப்படுத்த கிருபை செய்யும். ஏனோதானோவென்று வாழாதபடி, உண்மையாய் கர்த்தருக்கென்று வாழ அவர்களை ஏவி எழுப்பும். உணர்ச்சியை மாத்திரம் சார்ந்து நான் பரிசுத்தஆவியானவரை பெற்றிருக்கிறேன் என்று சொல்லாதபடி தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்திலும் கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறவர்களாக ஜீவிக்க வாழ உதவி செய்யும்.  எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.